......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 June 2013

ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக அரசியல் தீர்வு அமையாது: ஜனாதிபதி

'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய தூதுக் குழுவினர், இன்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக்கொடுக்க முடியாது' என இந்திய ராஜ்யசபா எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டிய இந்திய தூதுக்குழுவினர், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை தமது விஜயத்தின் போது நேரில் கண்டதாகவும் தெரிவித்தனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மிகச் சிறந்த ஒரு முன்னெடுப்பு எனக் குறிப்பிட்ட அவர்கள் அது மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர், இலங்கையின் உள்விவகாரங்கள் சில சமயங்களில் இந்தியாவிலும் தாக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு அரசாங்கம், அரசியல் என்பவற்றைக் கடந்தது எனத் தெரிவித்த பிரசாத் அது ஒரு மானசீகமான உறவு என்றும் குறிப்பிட்டார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு நலன்சார்ந்த விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. 

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' எனத் தெரிவித்தார். அத்துடன், 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்யமுடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் தெரிவித்தார்.

இவ்வருடம் செப்டம்பரில் நடாத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ள வடமாகாண சபைத் தேர்தல் குறித்தும் இந்திய தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரு தரப்பு சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர்  லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுனிமல் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(மூலம்:http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/70001-2013-06-07-12-25-29.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE