மர்லின் மரிக்கார்
விற்பனை செய்யும் மருந்தகங்களின் லைசன்ஸ் ரத்து; நுவரெலியாவில் மருந்தகம் முற்றுகை
அரசாங்கத்திற்குச் சொந்தமான மருந்துப் பொருட்களைத் திருட்டுத் தனமாகக் கொள்வனவு செய்து அதனை நோயாளர்களுக்கு அதிக விலைவில் விற்பனை செய்யும் தனியார் மருத்துவ நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தேசிய மருந்துப் பொருள் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தொகை மருந்துப் பொருள் நுவரெலியா நகர மத்தியிலுள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கவனம் செலுத்திய அமைச்சர் மேற்படி பணிப்புரையை விடுத்திருக்கின்றார்.
நுவரெலிய மாவட்ட செயலாளர் அலுவலகத்திலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் குறித்த தனியார் மருந்தகத்தில் திடீரென மேற்கொண்ட ஆரம்ப சோதனையின்போது அங்கிருந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. இது விடயமாக மாவட்டச் செயலாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபைக்கு அறியச் செய்ததுடன், குறித்த மருந்துப் பொருட்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகமவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விசாரணையில், குறித்த மருந்துப் பொருளில் பொறிக்கப்பட்டிருந்த அரச இலச்சினையும், அவை நுவரெலியா பொது வைத்தியசாலைக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தும் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அம்மருந்துப் பொருட்களில் குறிப்பிடப் பட்டிருந்த வகை இலக்கங்களின் படி அவைகொழும்பு மருந்துப் பொருள் விநியோகப் பிரிவில் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு விநியோகிக்கப் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
நுவரெலியா பொது வைத்தியசாலையின் நீரிழிவு நோயாளர் சிகிச்சைக் கிளினிக்குக்கு சொந்தமான மருந்துப் பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் குறித்த மருந்தக உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. அதேநேரம் அமைச்சர் மேற்படி உத்தரவையும் விடுத்திருக்கின்றார். மக்களுக்கு மருந்துப் பொருட்களை இலவசமாகப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் வருடத்திற்கு 2100 கோடி ரூபாவை செலவிடுகின்றது. மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய மருந்துப் பொருட்களை இவ்வாறு மோசடி செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.
(thinakaran) |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.