ஜனாதிபதி சட்டத்தரணியான மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியை ஏற்பதையும் அந்த பதவிக்குரிய கடமைகளை புரிவதனை தடுக்கும் வகையில் ரீட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்பதா? என்பதனை பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஆராய்வதற்கு உயர்நீதிமன்றம் நேற்று திகதி குறித்தது.
அந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தும் நீதியரசர் குழாமில் சலீம் மாஸுப்,கே.ஸ்ரீபவான் மற்றும் எஸ்.ஐ. இமாம் ஆகியோர் இருந்தனர்.
மாற்றுக்கொள்கைக்கான நிலையம் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரிக்கும் குழாமில் இருப்பதற்கு நீதியரசர் கே.ஸ்ரீபவான் விரும்பவில்லை.
நீதியரசர் ஸ்ரீபவான் அங்கத்தவராக இல்லாத ஒரு குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு ஏற்புடையதா? என்பதனை விவாதிக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்மானித்தது. இதனையடுத்தே மனுவை ஆராய்வதற்கான திகதி குறிக்கப்பட்டது.
இந்த மனுவில் நாடாளுமன்ற பேரவையின் அங்கத்தவர்களான பிரதமர் தி.மு ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் ஏ.எச்.எம் அஸ்வர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரே பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி எம்.சுமந்திரனுடன் சட்டத்தரணிகளான விரன் கொறியா, சுரேன் பெர்னாண்டோ ஆகியோரும் சட்டமா அதிபருக்காக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ உடன் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்களான சஞ்சே ராஜரட்னம் மற்றும் நெரின் புள்ளே ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.