சுகாதார அமைச்சர் தகவல்!
ஓய்வின்றி தொடர்ந்தும் பணியாற்றும் வாகனச் சாரதிகளாலேயே கூடுதலான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குறிப்பாக, வர்த்தக ரீதியில் இலாபம் ஈட்டும் நோக்கில் ஓய்வின்றி பஸ் சாரதிகள் பணியாற்றுகின்றனர். தனியார் பஸ்கள் மட்டுமின்றி அரச பஸ் சாரதிகளும் இப்படியாக பணியாற்றுகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பணியாற்றுவதாலேயே கூடுதலான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துக்கூறிய அமைச்சர், தனியார் பஸ் சாரதிகள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். கூடுதலாகப் பணம் ஈட்டும் நோக்கில் அவர்கள் இவ்வாறு பணியாற்றுகின்றனர்.
அதேபோல இ.போ. ச. சாரதிகள் மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வேலை நேரத்துக்கு மேலதிகமாக ஓய்வின்றிப் பணியாற்றுகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பணியாற்றுவதால் அவர்கள் தமது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளும் அதேநேரம் வீதியில் பயணிக்கும் அப்பாவிகளுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனர்.
நீண்ட தூரம் வாகனங்களைச் செலுத்திச் செல்லும் சாரதிகள் அதிகூடியது இரண்டரை மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை குறைந்தது 5 நிமிடமாவது ஓய்வெடுத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு செயற்பட்டால் வீதி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பஸ் சாரதிகள் கவனயீனமாகச் செயற்பட முடியாது. நாட்டில் பெரும்பாலான வீதிகள் கார்ப்பட் இடப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று விபத்துக்குள்ளாகின்றன.
போக்குவரத்து சட்டவிதிகள் மீறப் படுகின்றன. சட்டவிதிகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாம் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம்.
டிசம்பர் 10 முதல் 17 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சுகாதார வாரத்தில் வீதி விபத்துத் தொடர்பில் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்.)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.