முஸ்லிம்களை அரசாங்கத்தின் மீது வெறுப்படையச் செய்வதற்காக பல்வேறு செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாகவும் இதன் பின்புலத்தில் சர்வதேச நாடுகள் சிலவும் தொழிற்படுவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் இந்த விடயங்களில் பீதி கொள்ளத் தேவையில்லையெனவும் எவர் எதைக் கூறினாலும் அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்தே தீருமெனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினமிரவு அமைச்சர் பெளசியின் இல்லத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள், ஜம்இய்யத்துல் உலமாசபை உறுப்பினர்கள் ஆகியோர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டார். முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் தொடர்பிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அவதூறுகள் தொடர்பில் கவலை தெரிவித்த அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பில் அரசாங்கம் தீவிர அக்கறை செலுத்த வேண்டுமென்று பசிலிடம் கோரிக்கை விடுத்தனர். இணையத்தளங்கள், பத்திரிகைகள், சினிமா படங்கள் மூலம் முஸ்லிம் கள் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. என்றும் அவர்கள் குறிப் பிட்டனர்.
அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தொடர்பில் மோசமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருவதாகவும் இது முஸ்லிம்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில் அமைச்சர்களான பெளசி, றிசாட், அதா வுல்லா, ஆளுநர் அலவி மெளலானா, பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, எம்.பிக்காள ஹஸனலி, தெளபீக், பைசல் காசிம், ஜம்இய்யதுல் உலமா சபைத்தலைவர் றிஸ்வி முப்தி, செயலாளர், எம்.எம். முபாரக், முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், அஸ்கர்கான, சட்டத்தரணி நஜீம், எம்.எச்.எம்.நியாஸ் மற்றும் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு கொள்ளுப்பிட்டியில் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து இயங்குவதுதென முடிவு செய்தனர்.
சமூகத்தின் மீதான அவதூறுகளைக்களைய வேண்டியதேவை அங்கு உணர்த்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, எம்.பிக்களான பiர், ஹலீம், பைசல் காசிம் தவிர்ந்த அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் ஊடகங்களில் வெளிவரும் அவதூறுகள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக அங்கு எடுத்துரைத்தார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், எம்.பிக்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.