......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

பிரதான சூத்திரதாரி சிக்கினார்; அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ தொடர்பில்லை


ஸாதிக் ஷிஹான்
கொழும்பு தேசிய நூதனசாலை திருட்டு;
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க
கொழும்பு தேசிய நூதனசாலை யில் பெறுமதிமிக்க புராதன பொருட்களை திருடியவர் யார் என்பது விசாரணைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சூத்திரதாரி ஏற்கனவே கைதானவர்களில் ஒருவர் என்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க தெரிவித்தார்.

கடந்த மூன்றாம் மாதம் நூதன சாலையில் இடம்பெற்ற மர்மமான திருட்டு சம்பவத்திற்கும் சில அமைச்சர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பிரபல வியாபாரிகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்று சில ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என்பதும் புராதன பொருட்களின் பெறுமதி தெரியாத தனிநபர் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கை இது என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நூதனசாலை திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களில் 90 விதமானவை மீட்டெடுத்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க சுட்டிக்காட்டினார்.
கொழும்பு தேசிய நூதனசாலை திருட்டுச் சம்பவம் தொடர்பாகவும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை இடம்பெற்றது.
பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனரத், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலிந்த ரணவீர, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிமாந்த ஜயகொடி, தேசிய நூதனசாலை உதவிப் பணிப்பாளர் செனரத் விக்ரமசிங்க ஆணையாளர் ரஞ்சித் ஹேவகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-
மார்ச் மாதம் 16 ஆம் திகதி நூதனசாலையில் திருடப்பட்டதிலிருந்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டதன் மூலம் சுமார் ஐந்து மாத காலப் பகுதிக்குள் பிரதான சந்தேகநபர் உட்பட இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்ய முடிந்துள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்டெடுக்க முடிந்துள்ளது.
நூதனசாலைக்கு முன்னாள் உள்ள வீடொன்றில் கட்டுமான தொழிலாளியாக இருந்த காலத்தில் இங்குள்ள நிலைமைகளை அவதானித்தே குற்றவாளி திட்டமிட்ட அடிப்படையில் இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்.
நூதனசாலையை பார்வையிட வந்த சந்தேகநபர் அதன் அலுமாரி ஒன்றின் பின்புறமாக மறைந்திருந்து சுமார் அரை மணி நேர காலப் பகுதிக்குள்ளே நான்கு காட்சி அலுமாரிகளிலிருந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
மேல் மாடியிலிருந்து புடவைகளை கட்டி அதன் மூலமாக முன்பக்கமாக இறங்கி தப்பிச் சென்றுள்ளார். இதன்போது நூதனசாலை காவலர்கள் கவனயீனமாகவும் உறக்கத்திலும் இருந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
பாதாள உலகைச் சேர்ந்த பில்டர் பிரசாத் என்பவர் கப்பம் தொடர்பான ஒரு சம்பவத்திற்காக 8 ஆம்மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வெலிகமவில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்களது தகவலே பிரதான சூத்திரதாரி மடக்கிப் பிடிக்க உதவியாக அமைந்தது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த கண்ணாடியில் மூன்று விரல் அடையாளங்களும், பீடி துண்டுகள் மூன்றும் காணப்பட்டன. அவற்றில் பிரதான சந்தேக நபரின் விரல் அடையாளங்கள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான குற்றவாளியையும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம். நாட்டின் தேசிய சொத்துக்களை திருடிய குற்றவாளிக்கு நீதிமன்றின் ஊடாக உச்ச கட்ட தண்டனையை பெற்றுக்கொடுக்கு நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
திருடப்பட்ட சகல பொருட்களிலும் 2500 ரூபா தொடக்கம் 30 ஆயிரம் ரூபா வரையிலான தொகைக்கே பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பல கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்களை சிறிய தொகைக்கு விற்பனை செய்துள்ளதன் மூலமும் அவற்றை உருக்கி, உடைத்து சேதப்படுத்தியுள்ளதன் மூலமும் புராதன பொருட்களின் பெறுமதி தெரியாமல் செய்யப்பட்டுள்ள ஒரு விடயம். இதன் பின்னணியில் வியாபாரிகளோ வேறு எவருமோ இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது என்றார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE