வல்லுறவு மற்றும் நெருங்கிய உறவினர்களுடனான உடலுறவு என்பவை காரணமாக கர்ப்பமாகிய பெண்களும், குறைபாடுள்ள கருவை சுமக்கும் பெண்களும் கருக்கலைப்பு செய்வதனை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் இலகுவாக்கப்பட வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
சட்டங்களை இலகுவாக்குவதன் மூலமாக இவ்வாறான பெண்களின் துன்பங்களை குறைப்பதற்கு உதவமுடியும் என அவர்கள் கூறினர்.
சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டில் நாளொன்றுக்கு 700 வரையிலான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாகவும் இவை இரகசியமாக நடைபெறுவதால் இது உத்தியோக பூர்வ தகவல் அல்ல எனவும் நிபுணர்கள் கூறினர்.
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு எனும் கருப்பொருளில் நேற்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய மருத்துவ நிபுணர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
வல்லுறவு, நெருங்கிய உறவினருடன் உடலுறவு என்பவை காரணமாக விருப்பமில்லாத கர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு கருத்தரித்தல் ஒரு சதவீதமாகவே இருக்கின்றது. ஆயினும் இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மிக கடுமையானவையாகும்.
கருக்கலைப்பு தொடர்பாக 1883ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமே தற்போதும் அமுலில் உள்ளது. இதன்படி ஒரு பெண்ணின் உயிருக்கு கருவினால் ஆபத்து இருக்குமாயின் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படும்.
காலத்துக்கு ஒவ்வாத இந்த சட்டம் கைவிடப்பட்டு மேற்படி பிரச்சினைகள் உள்ள பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் இலகுவாக்கப்பட வேண்டும் என மகப்பேற்று பெண் நோயியல் நிபுணர் டாக்டர் மங்கள திஸநாயக்க தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.