பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கும் சரியான தண்டனைகள் வழங்கப்படல் வேண்டும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான ஒன்று கூடல் வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாபா சல்மா ஹம்சா பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது அதற்கு அதிகமான தூக்குத்தண்டனை விதித்து அது நிறைவேற்றப்படும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸகரலியத்த பாராளுமன்றத்தில் அன்மையில் கூறிய கருத்துக்களை நான் வரவேற்கின்றேன் அதற்காக அமைச்சர் திஸ்ஸகரலியத்தவுக்கு நன்றி கூறுகின்றேன்.
இந்த விடயத்தில் குற்றமிழைக்கும் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் ஆனால் அவர்களுக்கும் இந்த சட்டம் பிரயோகிக்கப்படல் வேண்டும். மரணமடைந்த பெணணொருவரின் சடலத்தைக் கூட விட்டு வைக்காமல் ஆணொருவர் துஷ்பிரயோகம் செய்ததாக அன்மையில் ஊடகமொன்றில் அறிந்து கொண்டோம் இப்படியான ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படல் வேண்டும். அதே போன்று அன்மையில் மத்திய மாகாணத்திலுள்ள ஒரு பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்றை சுற்றி வளைத்து தேடிய பொலிசார் அங்கு பாடசாலை மாணவியொருவரையும் கைது செய்துள்ளனர். இவ்வாறான ஆண்களுக்கு அமைச்சர் திஸ்ஸகரலியத்த கூறியுள்ள தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
வறுமை மற்றும் பாதுகாப்பு இன்மை போன்றவைகளால் பெண்கள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். வறுமையான பெண்களை அடையாளம் கண்டு அப் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செய்யவேண்டும்.
வெளிநாடுகளில் தொழில் புரிவதற்காக செல்லும் பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனமெடுப்பதுடன் மற்றும் அவர்களுக்கான மொழிப்பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும். பாடசாலைகளிலும் சில மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். இவைகளில் கவனமெடுப்பதும் அவசியமாகும்.
பெண்களுக்கெதிரக வீட்டு வன்முறைகள் அதிகரிக்கப்பட்டு வரும் இன்றைய கால கட்டத்தில் அவைகள் இடம் பெறாவன்னம் பெண்களை பாதுகாப்பதும் முக்கியமாகும். பெண்கள் துஷ்பிரயோகம் போன்றவைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ள போதிலும் பெண்களும் தமது ஆடை, உரையாடல், தொடர்பு போன்றவைகளில் ஒழுக்கம் என்பவற்றை பேணி நடப்பதும் அவசியமாகும். என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.