* எதிர்கால சந்ததியினர் நலன் கருதி கல்வியமைச்சு உடன் தலையிட வேண்டும்
* சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் நிலைமையை விளக்கி கடிதம்
நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகளையும் ஒழுங்குபடுத்த கல்வியமைச்சு முன்வர வேண்டுமென சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
கம்பனி சட்டத்திற்கு கீழ் பதிவு செய்து ஒழுங்குபடுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடசாலைகள் யாவும் நேரடியாக கல்வியமைச்சின்கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள அவர், தனது கோரிக்கைகளை கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறினார்.
சர்வதேச பாடசாலைகளின் பதிவு மற்றும் முகாமைத்துவத்தில் கல்வியமைச்சு நேரடியாக தலையிடுவதன் மூலம் அங்கு சிறுவர்களுக்கெதிராக இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு தீர்வு காணமுடியுமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று விரைவில் பணம் சம்பாதிப்பதற்குரிய ஒரு உபாயமாக சிறுவர்களை மையப்பொருளாக வைத்து பலர் வியாபாரங்களை ஆரம்பிக்கின்றனர். அநாதை ஆசிரமங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் என்பன இவற்றில் அடங்குகின்றன.
சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை இந்த அடிப்படையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவை நேர்மையான முறையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றனவா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ள தென்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச பாடசாலைகள் குறித்து என்னிடம் பல மாணவர்கள் தமது பெற்றோருடன் வந்து முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். இவை சிறுவர் உரிமைகளை மீறும் செயற்பாட்டுடன் தொடர்புடைய வையாகும். சில சர்வதேச பாடசாலைகளில் புகைப்பிடிப்பதற்கென தனியானதொரு ஒதுக்கிடம் வைக்கப்பட்டுள்ளதாக நாம் தகவல் அறியப் பெற்றுள்ளோம்.
இத்தகைய பாடசாலைகளில் ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் பூரண கல்வியறிவு, தகுதி, அனுபவம் ஆகியவற்றைக் கொண்டிராமை காரணமாக மாணவர்களின் எதிர்காலம் வீணாக்கப்படுகின்றது.
எமது பிரஜைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுத் தருவதற்கேற்ற வகையில் கல்வி அமைச்சு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
தனது எழுத்துமூல கோரிக்கைக்கு கல்வி அமைச்சிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லையென கூறிய அனோமா திஸாநாயக்க, கல்வி அமைச்சின் மேற்படி செயற்பாடுகளுக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.