......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 25 November 2015

nintavur / தேர்வு ஜுரமா? இதோ இருக்குது மருந்து!

தேர்வு ஜுரம் என்பது சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் என்றில்லை... மிக நன்றாகப் படிக்கும் மாணவர் களுக்குக்கூட வந்துவிடுகிறது. கேள்வித்தாள் சுலபமாக இருக்குமா, படித்த பாடத்தி லிருந்து கேள்விகள் வருமா எனத் தேவை யற்ற பயம் ஏற்படும். சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு ‘பாஸ் செய்துவிட முடி யுமா?’ என்று பயம்; சராசரி மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா என்று பயம்;
நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்டேட் லெவல் மார்க் எடுக்க வேண்டுமே என்ற பதற்றம். தேர்வு நெருங்க நெருங்க, இப்படி ஆளாளுக்கு ஒரு வித தேர்வு ஜுரம் அனலடிக்கிறது. இது தேவையற்றது. தேர்வு என்பது என்ன? நீங்கள் படித்ததைச் சோதித்து அறியும் ஒரு அளவுகோல். அவ்வளவுதானே? அப்படி யிருக்க, தேர்வைக் கண்டு பயம் எதற்கு?

கல்வி என்பது என்ன?

புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதே! படிக்கப் படிக்க ஒவ்வொரு விஷயமும், ‘அட! இதில் இத்தனை நுணுக்கம் இருக்கா!’ என்கிற வியப்போடும் ஆவலோடும் நம் மனதில் பதியுமேயானால், அது சுவாரஸ்யமான அனுபவம் ஆகிவிடுகிறது. அதன்பின் படிப்பு சுலபமாகிவிடும். ஆர்வத்துடன் படிக்கும்போது சலிப்பு ஏற்படுவதில்லை.

சரி, படிப்பது என்றால் என்ன?

எதையும் கூர்ந்து கவனித்தல் , தொடர்புபடுத்துதல், செயல் படுத்துதல் என்ற மூன்று படி நிலைகளைக் கொண்டதே படிப்பு. புத்தகத்தில் ஒரு பாடத்தைப் படிக்கும்போது, அது எதைப் பற்றி, என்ன கூறுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கவனத்துடன் படிப்பதாகும். படிக்கும்போது நமக்குத் தெரிய வரும் புதிய விஷயங்களை, ஏற்கெனவே நமக்குத் தெரிந்த விஷயங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்துப் பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். இது படித்ததை நினைவில் நிறுத்த உதவும். படித்த பாடங்களை, சமயம் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறையில் பயன்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். இதனால் கற்றது மறந்துவிடாமல் இருக்கும்.

எளிதாகப் படிப்பது எப்படி?

படிப்பது என்பது புத்தகங்களைப் படிப்பதிலிருந்து தொடங்குவதில்லை. வகுப்பறையிலிருந்து தொடங்குகிறது. பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஆசிரியர் நமக்குப் புரியும் வகையில் விளக்கமாகச் சொல்லித் தருகிறார். அறிந்த விஷயங்களிலிருந்து படிப் படியாகப் பல அறியாத விஷயங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறார். நமக்குப் புரியாத விஷயங்களையும் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எனவே, வகுப்பறையில் முழு கவனம் செலுத்தும் மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது எளிதாக இருக்கும்.

வகுப்பறையில் பாடங்களை ஊன்றிக் கவனிப்பது, பாடங்களிலிருந்து குறிப்பு எடுப்பது, பாடங்களைப் படிப்பது, தெரியாத பகுதிகளைக் குறித்துவைத்துக்கொண்டு அதை ஆசிரியரிடமோ, கெட்டிக்கார மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்வது என்ற வரிசையில் நமது செயல்பாடுகள் அமையவேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்தவுடன், ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு கடகடவென மனப்பாடம் செய்யத் தொடங்கு தல் சரியான முறை இல்லை. முதலில் படிக்கப்போகும் பாடம் முழுவதையும் விறுவிறுவென ஒரு முறை மேலோட்டமாக வாசிக்க வேண்டும். இதனால் பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். ஏற்கெனவே இந்தப் பாடத்தை வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும்போது கவனித்திருந்தால், அதை மீண்டும் இப்போது நினைவுக்குக் கொண்டுவந்து, மறுபடி ஒரு முறை படிக்க வேண்டும். அப்படிச் செய்தால், எளிதாகப் புரியும்.

பாடத்தைப் படித்த பிறகு, அதிலிருந்து கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை மளமளவென்று எழுதிப் பார்க்கவேண்டும். அப்போதுதான், நன்றாகப் படித்திருந்த போதிலும், பார்க்காமல் எழுதும்போது எந்த இடத்தில் இடறுகிறது என்பது நமக்குப் புரியும்.

எந்த நேரத்தில் படிப்பது நல்லது?

படிப்பதற்கு இடமும் நேரமும் மிக முக்கியம். சில புத்திசாலி மாணவர்கள் பாட்டுக் கேட்டுக்கொண்டே படிப்பதாகக் கூறுவார்கள். சிலர் அமைதியான சூழ் நிலையில் படித்தால்தான் மண்டைக்குள் ஏறுகிறது என்பார்கள். பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு செயலைத் தான் செய்ய முடியும். இரண்டு வேலைகளைச் செய்யும்போது, எதில் நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதில் நம் கவனம் திரும்பி, மற்றதில் குறையும். எனவே, பாடங்களை அமைதியான சூழ்நிலையில், தனிமையில் படிப்பதே நல்லது.

பகலில் வீட்டுக்கு விருந்தினர்கள், வெளியாட்கள் வந்து போவார்கள். ஒரே சத்தமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. எனவே, அதிகாலையில் வீட்டில் அமைதியான சூழ்நிலையில் படிப்பது நல்லது. மற்றபடி, எந்த ஒரு புறச் சூழ்நிலையும் நம்மை பாதிக்காத விதத்தில் பாடத்தில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்திப் படிக்கப் பழக வேண்டும். ஒரு கதைப் புத்தகத்தை ஆவலோடு வாசித்தால், புறச்சூழல் நம் சிந்தனையைக் கலைக்கிறதா என யோசியுங்கள்.

நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் உட்கார்ந்து படியுங்கள். படிக்கும்போது இடையில் சோர்வாக இருந்தால், சற்று இடைவெளி விட்டு, எழுந்து ஒரு வாக் போய்விட்டு வந்து படிப்பதைத் தொடரலாம். ஒவ்வொருவரும் படிக்கும் நேரம் மாறுபடும். சிலர் அதிகாலையில் எழுந்து படிப்பார்கள். சிலருக்கு மாலை நேரத் -தில் படிப்பது உகந்ததாக இருக்கும். சிலர் நள்ளிரவையும் தாண்டி படித்துக் கொண்டு இருப்பார்கள். நாள் முழு வதும் இயங்கிக் கொண்டு இருப்ப தால், இரவில் நேரம் செல்லச் செல்ல கற்கும் திறன் குறைவதோடு, மறு நாள் பணிகளைச் செய்வதிலும் சோர்வு ஏற்படும். எனவே, இரவில் ரொம்ப நேரம் விழித்திருக்காமல், சீக்கிரமே படிப்பை முடித்துவிட்டுப் படுத்துத் தூங்கிவிடுவது நல்லது. தூங்கி எழுந்ததும் சிறிது நேரம் காலாற நடந்து, தூக்கம் நன்கு கலைந்த பின்பு அமர்ந்து படிக்கத் தொடங்கினால், பாடங்கள் மனதில் நன்கு பதியும். காரணம், அந்த நேரத்தில் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

படிப்பதைச் சுமையாகக் கருதாமல், சுவாரஸ்யமாக்கிக் கொள்ளுங்கள். தேவையான பாடப் புத்தகங்கள், குறிப்புகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி படிப்பதற்கேற்ற வகையில் ஒரே இடத்தில் வைத்தி ருங்கள். புத்தகங்களையோ, நோட்ஸ் களையோ தொலைத்துவிட்டு அடிக்கடி வீண்பதற்றத்துக்கு ஆளாகாதீர்கள்.

தன்னம்பிக்கையோடு களம் இறங்குங்கள். மனதுடன் உடலையும் தேர்வுக்குத் தயாராக உறுதியோடும் முழு ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


திட்டமிடல், விடா முயற்சி, கடும் உழைப்பு மூன்றும் இருந்தால், வெற்றி உங்கள் கையில்!



(மூலம்: )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE