குடும்பம்! அது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் என அனைவருக்கும் மத்தியில் ஈடற்ற அன்பும், கலப்பற்ற பாசமும் ஒட்டி உறவாடும் ஓர் அற்புத உலகம். அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்:
“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் எல்லோரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள் பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான்.”(அன்னிஸா-1).
அந்தவகையில் மனித இனத்தின் பெருக்கம் ஆணில் இருந்து தொடங்கி அது குடும்பமாக மாறி அங்கிருந்து சமூகம் தொடங்குவதாக மேலுள்ள வசனம் சுட்டிக் காட்டுகின்றது. உண்மையிலேயே குடும்பம் என்பது மனித சமூக இயக்கத்தின் அடிப்படையாகவும் பிரபஞ்ச நியதியாகவும் திகழ்கிறது.இதனால்தான் அல்குர்ஆன் ஸுன்னா போன்ற அடிப்படை மூலாதாரங்கள் ஏனைய விடயங்களைப் பேசாத அளவுக்கு குடும்ப ஒழுங்கு பற்றி அடிப்படை முதல் கிளைச்சட்டங்கள் வரை விரிவாகப் பேசியிருக்கின்றன.
இன்று துரதிஷ்டவசமாக குடும்பக் கட்டுக்கோப்பைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் சிந்தனைகள் தோற்றம் விளைவாக விவாகரத்துக்களும், பாலியல் குற்றங்களும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்றன. இதனால் மனித சமூகம் தமது விழுமியங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்து ஒரு விடிவை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றது. இஸ்லாம் காட்டித் தந்துள்ள குடும்ப வாழ்வே மனித சமூகம் இழந்து விட்ட விழுமியங்களையும் தொலைத்து விட்ட நிம்மதியையும் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
குடும்பம் -ஓர் அறிமுகம்.
உஸ்ரா என்பது அரபு மொழியில் குடும்பத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் படும் நவீன காலச் சொல்லாகும். உஸ்ரா என்ற சொல்லுக்கான கருத்தை முஃஜம் அல் வஸீத் என்ற அறபு அகராதி இவ்வாறு குறிப்பிடுகிறது;
“உஸ்ரா என்பது ஒருவனுடைய குல கோத்திரத்தினர் மற்றும் அவனைச் சூழ வாழ்வோரைக் குறிக்கும்”
உஸ்ரா என்ற பதம் அஸ்ர் என்ற அடியில் இருந்து பிறக்கின்றது. அஸ்ர் என்றால் பலம் எனப் பொருள்படும். ஒருவன் தனது குல கோத்திரத்தாரைக் கொண்டு பலம் பெறுவதால் உஸ்ரா என்ற சொல் குடும்பத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.
ஒக்ஸ்போர்ட் ஆங்கில-தமிழ் அகராதி (OXFORD) குடும்பம் என்ற பதத்தை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது. “ஒருவரோடு ஒருவர் உறவுடைய ஒரு குழு. அதாவது குடும்பம் என்ற சொல் சில சமயங்களில் பெற்றோர் மற்றும் குழந்தைகளைக் குறிப்பதற்காகவும் (nuclear family), சில வேளைகளில் பெற்றோரின் பெற்றோர், பெற்றோரின் உடன்பிறப்புக்கள் போன்ற ஏனைய உறவினர்களைக் குறிப்பதற்காகவும் (extended family) பயன்படுத்தப்படுகின்றது.
குடும்பம் பற்றிய வரைவிலக்கணங்கள் அகராதிகளில் மேற்படி அமைந்தாலும் குடும்பம் தொடர்பாக சமூகவியலாளர்கள் வரலாறு நெடுகிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். இவை பெரும்பாலும் சடவாதக் கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது கருத்துக்களில் இருந்து குடும்பம் தொடர்பாக பின்வரும் வரைவிலக்கணத்தினை சுருக்கமாக முன்வைக்கலாம். “குடும்பம் என்பது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இடம்பெறும் திருமணத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு சமூக நிறுவனம். அது சமூகத்தினை சீரான இயக்கத்தில் கொண்டு செல்வதில் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. ஒரு சமூகத்தின் தனித்துவமும், இலக்குகளும் இந்த நிறுவனத்தின் மூலமே பாதுகாக்கப்படும்”.
குடும்பம் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடு மேலுள்ள கருத்துக்களை விட வித்தியாசமானது. இஸ்லாம் சிறந்த சமூக உருவாக்கத்தை இலட்சியமாகக் கொண்ட மார்க்கம் என்ற வகையில் தனி மனித உருவாக்கத்தில் கூடிய கரிசனை செலுத்துகின்றது. மனிதன் பலவீனமான அமைப்பில் படைக்கப்பட்டுள்ளதால் அவனால் இந்த உலகில் தனித்து நின்று சாதிப்பது சிரம சாத்தியமானது. எனவேதான் இஸ்லாம் குடும்பமாக சேர்ந்து வாழுமாறு மனிதர்களை ஆர்வமூட்டுகின்றது.குடும்பம் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வரையறைகளை மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது குடும்பமானது பின்வரும் 3 வகையான அமைப்பிலேயே அமைய வேண்டும் என்றும், இது அல்லாத வேறு எந்த விதமான நிலையிலும் மனித உறவுகள் குடும்பமாக உருவாகுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
1.இரத்தக் கலப்பின் மூலம் ஏற்படும் உறவு
2.திருமணத் தொடர்பின் மூலம் ஏற்படும் உறவு
3.பால்குடியின் மூலம் ஏற்படும் ஏற்படும் உறவு
2.திருமணத் தொடர்பின் மூலம் ஏற்படும் உறவு
3.பால்குடியின் மூலம் ஏற்படும் ஏற்படும் உறவு
அந்தவகையில் இஸ்லாத்தின் பார்வையில் குடும்பம் என்பது, இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த திருமணத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு சமூக நிறுவனம். அது இஸ்லாமிய சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு மிகப்பிரதானமாக தனிநபர்களை இஸ்லாமிய அடிப்படையில் பயிற்றுவிப்பதன் மூலம் பங்களிப்புச் செய்யும் ஒரு மூல அலகாகத் தொழிற்படும்.
இஸ்லாத்தின் பார்வையில் குடும்ப வாழ்வின் முக்கியத்துவம்.
இஸ்லாம் ஓர் இயற்கையான, மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற மார்க்கம் என்றபடியால், அது மனித இன விருத்தியில் இயற்கை வரம்பை மீறாமல் செயற்படும் நிறுவனமான குடும்பத்திற்கு அதிகூடிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குடும்பம் சார்ந்த மார்க்கம் (family oriented) என வர்ணிக்கப்படுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத்தில் மூன்று பொது நோக்குகளில் மிக அடிப்படை நோக்கமாகிய ‘ழரூரிய்யாத்’ தில் உள்ளடங்கும் ஐந்து விடயங்களில் பரம்பரையைப் பாதுகாத்துப் பேணலும் ஒன்றாகும். இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இஸ்லாம் குடும்பத்தைக் கருதுகின்றது.
குடும்பக் கட்டமைப்பைத் தகர்த்தெறியும் வாழ்க்கை அமைப்பான துறவறத்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இஸ்லாம் ஏனைய மதங்களைப் போல் வணக்கஸ்தலங்களோடு மாத்திரம் சுருங்கிக் கொண்ட மார்க்கமல்ல. மாற்றமாக, அது மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட அனைத்துப் பகுதிகளைப் பற்றியும் பேசுகின்ற, அவற்றுக்கான வழிகாட்டல்களை வழங்குகின்ற சம்பூரணமான வாழ்க்கை நெறியாகும். இதனால்தான் இஸ்லாம் மனித உணர்வுகளை மதிக்காது, அவற்றை நசுக்க முற்படவில்லை. மனிதர்களுக்கே உரித்தான இந்த இயல்பான உணர்வுகளை திருமணம் என்ற கேடயத்தைக் கொண்டு நெறிப்படுத்தி உள்ளது. குடும்ப வாழ்வைத் தகர்த்தெறியும் துறவறம் குறித்து அல் குர்ஆன் தனது நிலைப்பாட்டை இவ்வாறு முன்வைக்கின்றது.
“(உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை” (அல் ஹதீத்-27).
எனவே ஆன்மீக விமோசனம் எனக் கூறிக்கொண்டு அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை நியதிகளைப் புறக்கணித்து வாழ்வதை இஸ்லாம் தடை செய்வதோடு, குடும்ப வாழ்வின் பக்கம் மனிதர்களைத் தூண்டுகின்றது. இதனால்தான் உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரழி) இவர்கள் துறவறம் பூணுவதற்கு நபியவர்களிடம் அனுமதி கோரிய போது அதனை நபி(ஸல்) அவர்கள் நிராகரித்தார்கள். (புகாரி)
குடும்ப வாழ்வின் மூலம் மனித இனம் பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் அல்லாஹ்விடம் வெறுக்கத்தக்க பாவமாகக் கருதப்படும் விபச்சாரத்தின் பக்கம் செல்லவிடாது, மனித இனத்தை கௌரவமாக வாழ வைப்பதில் குடும்ப வாழ்வு பிரதான இடத்தை வகிக்கின்றது. மேலும் குடும்பமாக சேர்ந்து வாழ்வது மனித உள்ளங்களில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் விதைத்து விடுகின்றது. அத்தோடு, குடும்ப வாழ்வின் மூலம் மனக்கட்டுப்பாடு, சந்ததி விருத்தி, பாதுகாப்பு, கௌரவம், ஆரோக்கியம் போன்ற இன்னோரன்ன பயன்களை மனித இனம் அடைந்து கொள்கின்றது.
நவீன காலத்தில் குடும்ப நிறுவனங்கள் சிதைந்து செல்வதற்கான காரணங்களும், விளைவுகளும்.
குடும்ப உருவாக்கத்தில் அல்லாஹுத்தஆலா வைத்துள்ள இயற்கை நியதி ஆணும், பெண்ணும் சட்டபூர்வமாக இணைந்து கொள்வதாகும். இந்நியதிக்கு மாற்றமாக மனித சமூகம் செயற்பட முற்பட்டால் அது சமூகத்தில் பாரிய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும். இன்றைய நவீன யுகத்தில் குடும்பம் என்ற சமூகத்தின் அடித்தளத்தை சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் சிந்வனைகள் வேகமாக செல்வாக்குப் பெற்று வருவதனால் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகமாக உணரப்பட்டது. இதனால் உலக சுகாதார அமைப்பு 1994ஆம் ஆண்டை சர்வதேச குடும்ப நல ஆண்டாக அறிவிப்புச் செய்ததுடன், ஒவ்வொரு வருடமும் மே 15ம் திகதியை சர்வதேச குடும்ப தினமாகப் பிரகடனப் படுத்தி உள்ளது.
இன்று குடும்பக் கட்டமைப்பானது குறிப்பாக இரண்டு வகைகளில் காணப்படுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகளில் குடும்ப வாழ்வைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. காலையில் திருமணம், மாலையில் விவாகரத்து என்பதெல்லாம் இந்நாட்டு மக்களிடம் சகஜமாகிப் போயிருக்கின்றன. இந்தியா, சீனா போன்ற கீழைத்தேய நாடுகளில் குடும்பக் கட்டமைப்பு இதற்கு முற்றிலும் மாற்றமாக அமைந்துள்ளது. இந்நாடுகளில் திருமணம் என்பது தெய்வீக பந்தமாகக் கருதப்படுகின்றது. கணவனும், மனைவியும் இறுதிவரை ஒன்றாகவே வாழ வேண்டும், கணவன் மரணமடைந்து விட்டால் மனைவி உலக சுக போகங்களை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும், உடன் கட்டை ஏற வேண்டும் போன்ற மோட்டுத் தனமான நம்பிக்கைகள் இவர்களிடம் காணப்படுகின்றன. இவ்வாறு இந்நாடுகளில் குடும்ப அமைப்பானது நெகிழ்வுத்தன்மையாக அல்லது இறுக்கமானதாக அமையப் பெற்றுள்ளமையானது குடும்ப வாழ்வு சீரழிந்து செல்வதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது.
எது எவ்வாறிருப்பினும், இன்று குடும்பக் கட்டுக்கோப்பு ஆட்டம் கண்டிருப்பதற்கான பிரதான காரணிகளாக மூன்று தரப்பினர்களை அடையாளம் காண முடியும்.
01-கணவன், மனைவி:-
குடும்ப நிறுவனத்தை இஸ்லாம் புனிதமாக நோக்குகின்றது. அதனைப் பாதுகாப்பதில் அதீத கவனம் செலுத்துகின்றது. அந்தவகையில், குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் கணவன், மரனவி ஆகியோரின் செயற்பாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆனால் இன்று கணவன், மனைவி ஆகியோரிடையே புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுப்பின்மை, கலந்துரையாடலின்மை, சந்தேகப்பார்வை போன்றன ஊடுருவிக் காணப்படுவதானது குடும்ப அமைப்பை அடியோடு அழிக்குமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காதி நீதிமன்றங்களுக்கு வருகின்ற அதிகமான வழக்குகள் சிறுசிறு பிரச்சினைகளை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன. இவ்வாறான குடும்ப நிறுவனங்களின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், ஒரு கணவன் எவ்வாறு இயங்க வேண்டும், ஒரு மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற அடிப்படை அறிவு கூட இவர்களிடையே காணப்படாமைதான் என்பது நிதர்சனம்.
02-பிள்ளைகள்:-
குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெற்றோர்கள் 80வீதமான பங்கை வகிக்கின்றனர். இவ்வணிக உலகில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்களுக்கு குடும்பத்துடன் இருந்து மூவேளை சாப்பிடவே நேரமில்லாதிருக்கின்றது. இவ்வாறு பெற்றோரின் வழிகாட்டலின்றி விடப்படும் குழந்தைகளுக்கு ஊடகங்கள் வளர்ப்புப் பெற்றோராக மாறி இருக்கின்றன. இதனால் குழந்தைகள் சினிமா, நாடகங்கள், ஆபாசப் பாடல்கள் போன்றவற்றின் பக்கம் ஈர்க்கப்பட்டு வழி தவறிச் செல்லும் நிலை உருவாகி இருக்கின்றது. இதன்காரணமாக, குடும்ப வாழ்வின் மூலம் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற ஆரோக்கியமான பரம்பரை உருவாக்கம் தடைப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையை இன்றைய சமூகம் எதிர்நோக்கியுள்ளது.
நல்ல பண்பாடுகளால் உரமூட்டப்பட வேண்டிய பிஞ்சு உள்ளங்கள் கவனிப்பாரற்று விடப்படுகின்றன.இதன் விளைவாக,குழந்தைகள் மோசமான நடத்தையுள்ள நண்பர்களோடு தொடர்பேற்படுத்திக் கொள்கிறார்கள்.இப்டியான மோசமான தொடர்பு அவர்களை காதல்,பாலியல் குற்றங்கள்,போதை வஸ்த்துப் பாவனை போன்ற தவறான நடத்தைகளில் ஈடுபடச் செய்து, எதிர்கால வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகின்றது.இளைஞர்களின் இவ்வாறான நடத்தைகளினால் குடும்பக் கட்டுக்கோப்பு சீரழிவதோடு,ஒரு சமூகத்தின் இருப்பும் கூட ஐயத்துக்குள்ளாகின்றது.
03-சமூகம்:-
குடும்ப வாழ்வின் மிக முக்கிய நோக்கம் ஆரோக்கியமான,முன்மாதிரி மிக்க பரம்பரையை உருவாக்குவதாகும். குடும்பக் கட்டக்கோப்பைச் சீராக வைத்துக் கொள்வதில்தான் ஒரு சமூகத்தின் எதிர்காலம் தங்கி இருக்கின்றது. ஆனால் இன்று சமூகத்தில் நிலவக் கூடிய சில மோசமான சம்பிரதாயங்கள் குடும்ப வாழ்வைத் துண்டாடுமளவுக்கு பாரதூரமானவைகளாக விளங்குகின்றன. அவற்றில் மிகப் பிரதானமானது, ஒட்டு மொத்த பெண் இனத்திற்கே சாபக்கேடாக விளங்கும் வரதட்சனைக் கொடுமையாகும். இதன் காரணமாக, கருவிலேயும், பிறந்த பின்னரும் பெண் சிசுக்கள் கொல்லப்படும் ஜாஹிலிய்ய நாகரிகம் இன்றும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது. வரதட்சனை கொடுக்க வழியில்லாத பல ஏழைக்குமர்கள் முதிர் கன்னிகளாக மாறி மன அழுத்த நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் திருமண வாழ்வு வழங்கப்படாததன் காரணமாக தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறான வழிகளைத் தேடிக்கொண்டுள்ளனர்.
திருமணமானதன் பின்னரும் கூட இந்த வரதட்சனைப் பிரச்சினையால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.இந்த அசிங்கமான,கேவலமான சம்பிரதாயத்தை சமூகம் கண்டும் காணாதிருப்பது அல்லது மறைமுகமாக அங்கீகரிப்பதானது குடும்ப வாழ்வின் புனிதத்தையே இல்லாமலாக்கியுள்ளது. இவை தவிர சமூகத்தில் இன்று புரையோடிப்போயுள்ள பெண் விடுதலை தொடர்பான சிந்தனைகள். ஓரினச்சேர்க்கை என்பனவும் குடும்ப வாழ்வு சீரழிந்து செல்வதற்கான சமூகக் காரணிகளாகும்.
குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் இஸ்லாத்தின் வகிபாகம்.
இஸ்லாம் தனிமனிதர்களைப் பயிற்றுவித்து,அவர்களைக் கொண்ட குடும்பங்களை உருவாக்கி, இறுதியில் பண்பாடுமிக்க சமுதாயத்தைத் தோற்றுவிப்பதை இலட்சியமாகக் கொண்ட மார்க்கம். இஸ்லாமிய இலக்குகளில் குடும்ப உருவாக்கம் முதன்மை இடத்தைப் பெறுகின்றது.ஒரு சமூகத்தின் வித்தாக அமைவது குடும்பம்.வித்து ஆரோக்கியமாக அமைந்தால்தான் விருட்சமும் ஆரோக்கியமாக அமையும்.சீரான குடும்பங்கள் உருவாகும் போதே சிறப்பான சமூகம் தோன்ற முடியும்.இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழகிய வழிகாட்டல்களை வழங்கி இருக்கின்றது.அந்தவகையில்,மனித இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் குடும்ப வாழ்வுக்கும் சீரிய நெறிகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.
- திருமணம் -திருமணம் என்பது குடும்பமாக வாழ்வதற்கு ஷரீஅத் விதித்துள்ள நிபந்தனைகளைப் பேணி ஒர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் மேற்கொள்ளப் படும் உடன்படிக்கை ஆகும். இத்திருமண உடன்படிக்கையே குடும்ப வாழ்வின் நுழைவாயிலாக அமைகின்றது. மனிதர்களிடம் இயற்கையாகக் குடிகொண்டிருக்கும் பாலியல் உணர்வினை நெறிப்படுத்தும் கேடயமாக திருமணம் காணப்படுகின்றது. விபச்சாரத்தில் மூழ்கி சீரழிந்து போன ஜாஹிலிய்யக் கால குடும்ப அமைப்பை கௌரவமான நிலைக்குக் கொண்டு வந்தது இஸ்லாம் அங்கீகரித்துள்ள திருமண முறையே ஆகும். எனவே,முஸ்லிமான ஆண், பெண் இருவரும் குடும்ப வாழ்வில் இணைந்திருப்பது ஒரு பொதுவான அடிப்படையாக இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய நிலைப்பாடாகும். இதனால்தான் நபி(ஸல்)அவர்கள் இளைஞர்களை நோக்கி திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
- குடும்ப வாழ்வு தொடர்பான அழகிய உபதேசங்கள் - இன்று சமூகத்தில் அவசர, அவசரமாக திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு முடித்து வைக்கப்படுவதனால் குடும்ப வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமைவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது ஓர் இபாதத் என்ற வகையில் நீண்ட, நிறைவான, நிம்மதியான குடும்ப வாழ்வு அமைவதற்கு திருமணத்திற்கு முன்னர் சில வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. கணவன், மனைவி தெரிவு,பெண் பார்த்தல்,பொருத்தப்பாடு திருமண பேச்சுவார்த்தை போன்ற இஸ்லாமிய வழிகாட்டல்கள் குடும்பக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவ்வாறே திருமணத்திற்குப் பின்னரான சீரான வாழ்வுக்கும் அல்குர்ஆன் சில ஆலோசனைகளைத் தந்துள்ளது.(அன்னிஸா-34,35).
- பலதாரமணம் – இஸ்லாம் மனித இயல்புகளோடு பொருந்திச் செல்லக் கூடிய வாழ்வியல் நெறியாக அமைந்திருப்பதனால் அதனது போதனைகள் தூரநோக்குடையவை. இயற்கையாகவே மனிதர்களிடம் அமையப் பெற்றிருக்கும் பாலியல் உணர்வானது அனைவரிடையேயும் ஒரே மாதிரியாகக் காணப்படாது. பாலியல் உணர்வு குறைவானவன் ஒரு மனைவியோடு திருப்தி கொள்வான். பாலியல் உணர்வு அதிகமானவன் மாற்றான் மனைவியை நாடிச் செல்லும் நிலை உருவாகும். இது சமூகத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனைத் தவிர்ப்பதற்காக இஸ்லாம் சில வரையறைகளோடு அனுமதித்துள்ள ஒரு மாற்றுத் தீர்வே பலதாரமண முறையாகும், (அன்னிஸா-3). இஸ்லாம் அனுமதித்துள்ள இம்முறையானது குடும்ப அமைப்பைச் சீரழிக்கக் கூடிய விபச்சாரம், எயிட்ஸ், கருச்சிதைவு, சட்ட விரோதக் குழந்தைகளின் அதிகரிப்பு போன்ற அவலங்களில் இருந்து மனித இனத்தைப் பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த தீர்வாக விளங்குகின்றது.
- தலாக் -இஸ்லாம் குடும்ப வாழ்வின் மூலம் சில நோக்கங்களை அடையாளப் படுத்தியுள்ளது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற தத்துவத்திற்கேற்ப குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தவில்லை. இஸ்லாம் எதிர்பார்க்கும் நோக்கத்தை அடையத் தவறும் குடும்ப அமைப்பு அல்லது ஒரு திருமணம் வெறுப்பு மிக்கதாகவும், விரக்தி மிக்கதாகவும் மாறும். இதனால் கணவன், மனைவி ஆகியோர் தவறான நடத்தைகளுக்கு செல்வதற்கு வழிசமைக்கும். இந்த மோசமான நிலைமையினைத் தவிர்த்து குடும்பக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கின்ற ஒரு வழிமுறையாக இஸ்லாம் தலாக்கை அங்கீகரித்திருக்கின்றது,(அத்தலாக்-1).
- முன்மாதிரி மிக்க நபிகளாரின் குடும்ப வாழ்வு - இஸ்லாமியப் போதனைளும், வழிகாட்டல்களும் வெறும் கற்பனைச் சித்தாந்தங்கள் அல்ல. மாற்றமாக அவை நடைமுறைக்குச் சாத்தியமான யதார்த்தபூர்வமான அம்சங்கள். அந்தவகையில் நபி(ஸல்)அவர்களின் குடும்ப வாழ்வு அழகிய முன்மாதிரியாக முழு மனித சமூகத்திற்குமே காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களது குடும்ப வாழ்விலே அன்பும், அமைதியும், நேர்மையும், விட்டுக்கொடுப்பும் என அனைத்து அம்சங்களையும் காணமுடியும். நபி(ஸல்)அவர்கள் தனது மனைவிமாருக்கு நேர்மையான கணவராகவும், குழந்தைகளுக்கு பாசம் மிக்க தந்தையாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். வீட்டு வேலைகளில் தனது மனைவிமாருக்கு உதவி ஒத்தாசைகள் புரிபவர்களாக நபிகளார் காணப்பட்டார்கள். சமூக,அரசியல் விடயங்களில் மனைவிமாரிடத்தில் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அதுபோல மனைவிமார்களை இபாதத்துக்களின் பக்கம் ஆர்வமூட்டியிருக்கின்றார்கள். மேலும் தனது பேரக் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடியிருக்கின்றார்கள். இப்படியாக நபி(ஸல்)அவர்களது குடும்ப வாழ்வு சீரான குடும்ப வாழ்வுக்கு முன்மாதிரியாய் அமைந்திருக்கின்றது.
குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் கணவன், மனைவியின் வகிபாகம்.
குடும்ப நிறுவனத்தின் இரு பெரும் சக்கரங்களாக கணவன்,மனைவி ஆகியோர் செயற்படுகின்றனர். இவ்விரு சக்கரங்களும் சுழலும் போதுதான் குடும்ப நிறுவனம் தனது இலக்குகளை நோக்கி சரியான பாதையில் சுழலும். அந்தவகையில் குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் கணவன், மனைவி ஆகியோரது வகிபாகம் பிரதான இடத்தை வகிக்கின்றது. குடும்ப வாழ்வை செம்மையாக்கிக் கொள்வதற்கு கணவன், மனைவி ஆகியோருக்கிடையிலான பணிகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இதனைப் பின்வரும் அமைப்பில் சுருக்கமாக நோக்க முடியும்.
குடும்பத்தை நிர்வாகம் செய்தல் :- இஸ்லாம் குடும்ப நிர்வாகத்தில் ஆணுக்குத் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது.
‘ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாவர். ஏனெனில் அவர்களில் சிலரைக் காண சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களில் இருந்து (பெண்களுக்காக) செலவு செய்வதாலுமாகும்’ (அன்னிஸா-34).
குடும்பத் தலைவனாக விளங்கும் கணவன் தனது மனைவியோடு கலந்தாலோசனை செய்து குடும்ப வாழ்வை செம்மைப் படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் உபதேசிக்கின்றது.
“மேலும் (யுத்தம், சமாதானம் முதலிய மற்ற) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக’ (ஆலஇம்ரான்-159).
குடும்ப நிர்வாகத்தின் தலைவர் என்ற வகையில்,ஓர் ஆண் தனது மனைவியை அன்பாகவும்,கண்ணியமான முறையிலும் நடத்த வேண்டும்.
அவ்வாறே ஒரு பெண் தனது கணவரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக கூறியுள்ளது.
“நல்லொழுக்கமுள்ள பெண்கள் (என்போர் அல்லாஹ்வுக்குப் பயந்து, தங்கள் கணவனுக்கு) பணிந்து நடப்பவர்கள் (கற்பு, மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய)மறைவானதை அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள்” (அன்னிஸா-34).
பெண் என்பவள் குடும்ப நிர்வாகத்தில் தனது கணவனுக்கு உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கி சிறப்பான குடும்ப வாழ்வுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.இதனால்தான் நபி(ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
‘எந்தப் பெண் தன் கணவர் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளை இட்டால் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விடயத்திலும், தனது பொருள் விடயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் கடைப்பிடிக்க மாட்டாளோ அத்தகையவளே அனைவரையும் விட மிகச் சிறந்தவளாவாள்’ (நஸாஈ).
எனவே குடும்ப நிர்வாகத்தில் கணவனும், மனைவியும் தங்களது கடமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்து நடக்கும் போது குடும்ப வாழ்வு எத்தகைய சிக்கல்களுமில்லாமல் மகிழ்ச்சியானதாகவும், நிம்மதியானதாகவும் அமையும் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை.
- குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டைக் கண்காணித்தல் :- குடும்ப வாழ்வு சீராக அமைவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை நல்ல முறையிலும், ஹலாலான முறையிலும் அமைந்திருக்க வேண்டும். அந்தவகையில் குடும்பத்திற்கு பொருளீட்டிச் செலவு செய்யும் பொறுப்பை இஸ்லாம் கணவனுக்கு வழங்கியுள்ளது. நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் ஒரு உணவுக் கவளத்தை உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுவதும் நற் செயலில் ஒன்றாகும்’ (புகாரி, முஸ்லிம்).
எவ்வாறு குடும்பத்துக்கு உழைத்துக் கொடுப்பது கணவனின் கடமையோ,அவ்வாறே கணவனின் வருமானத்திற்கேற்ப குடும்பச் செலவுகளை அமைத்துக் கொள்வது மனைவியின் கடமையாகும்.அப்போதுதான் குடும்ப வாழ்வு சீரானதாக அமையும்.இதனை போராசிரியர் ஜோட் இவ்வாறு குறிப்பிடுகிறார்:ஷஷபெண்கள் தங்களது வீடுகளையும், குழந்தைகளையும் பராமரித்துக் கொள்வதில்தான் குடும்ப நிம்மதி நிறைந்திருக்கின்றது. இதனால் வாழ்க்கைத் தரத்தில் வசதிகள் குறைந்தாலும் கூட இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்’.
- ஆன்மீக ரீதியாகக் குடும்பத்தைப் பயிற்றுவித்தல்:- குடும்ப வாழ்வின் மிகப் பிரதான இலக்கு முன்மாதிரி மிக்க பரம்பரையை உருவாக்குவதாகும். எனவே குடும்ப வாழ்வின் சீரான இயக்கத்திற்கு கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பரம் தமது பலங்களையும், பலவீனங்களையும் இணங்கண்டு வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தனது குடும்பத்தை ஆன்மீக ரீதியாக பயிற்றுவிப்பது கணவனின் பொறுப்பாகும்.இதனை அல் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.ஷஷவிசுவாசிகளே! நீங்கள் உங்களையும்,உங்கள் குடும்பத்தினரையும் (நரக)நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’(அத்தஹ்ரீம்-6). அல்லாஹ்வின் மார்க்கம் பூமியில் நிலைநாட்டப் படுவதற்காக என்ற தூய நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும் போதே குடும்பங்கள் வெற்றிகரமாக அமையும்.
திருமணமானதும் கணவன், மனைவி ஆகியோரின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தைப் பேறாகும். திருமணமும், அதைத் தொடர்ந்த குழந்தைப் பேறுமே குடும்பவியலையும், சமூகவியலையும் நிர்மாணிக்கின்றது. குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் பிள்ளைகளின் வகிபாகமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.இன்று இளைஞர்கள் காதல் விவகாரம், போதைவஸ்த்துப் பாவணை,சினிமா மோகம் போன்ற வலைகளில் வீழ்ந்துள்ளதால் குடும்ப வாழ்வு சீரழிந்து போயுள்ளது. எனவே தமது பிள்ளைகளை ஒழுங்கான முறையில் வளர்த்து ஆளாக்குவது பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் சமூகத்தின் வகிபாகம்.
ஒரு சமூகத்தின் கொள்கை, கலாச்சாரம், நடத்தைகள் என்பவற்றை அடுத்தடுத்த சந்ததியினருக்கு நகர்த்துகின்ற முதல் நிறுவனம் குடும்பமாகும். அந்தவகையில்,குடும்பக் கட்டுக்கோப்பை சீரான முறையில் பேணுவதற்கு சமூகத்தின் வகிபாகம் அவசியமாகும். இன்று குடும்பம் சார்ந்த பிரச்சினைகளையும், மூட நம்பிக்கைகளையும் சமூகம் கண்டும், காணாமல் இருக்கின்றது. இதன்விளைவாக, எதிர்காலப் பரம்பரை பாதிக்கப்படுவதானது சமூகத்துக்கே கேடாக அமையும். எனவே குடும்ப நலன் சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை சமூக நிறுவனங்கள் நடாத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அந்தவகையில், குழந்தை வளர்ப்பில் தந்தை பங்கெடுக்க வேண்டும் என்ற சிந்தனை சமூக மட்டத்தில் பாரியளவு விளக்கப்பட வேண்டும்.
அது போல வறுமை காரணமாக பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் பல குடும்பங்கள் சீரழிந்து செல்கின்றன. பெண்கள் வெளிநாடு செல்வதற்கான சூழலை உருவாக்கிய சமூகம் பொறுப்பை உணர வேண்டும். எனவே வறுமைக் கோட்டின் கீழ் வாடும் குடும்பங்களை இணங்கண்டு அவற்றின் பொருளாதார நிலைமைகளை ஸ்திரப்படுத்த சமூக நிறுவனங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், எதிர்காலப் பரம்பனையினரின் ஆளுமை விருத்திக்கு பயிற்சி அளிக்கக் கூடிய வகையில் சிறுவர் நூலகங்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் போன்றவற்றை உருவாக்குவதில் சமூகம் முனைப்புக் காட்ட வேண்டும். இதுதவிர, இஸ்லாமிய ஊடகங்களை உருவாக்குவதன் மூலம் அந்நியக் கலாச்சாரத் தாக்கங்களில் இருந்து இளைஞர்களை விடுவிக்க சமூகம் முன்வர வேண்டும்.இவ்வாறான விடயங்களில் சமூகம் கரிசனையோடு செயற்படும் போது குடும்பக் கட்டுக்கோப்பு சீரான முறையில் இயங்கி,ஆரோக்கியமான பரம்பரை உருவாகும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
மிகச்சுருக்கமாக கூறப்போனால், ஒவ்வொரு தனிமனிதனும் அங்கத்துவம் வகிக்கும் சமூக உருவாக்கம் குடும்ப அமைப்பில் இருந்தே ஆரம்பமாகின்றது.ஒரு சமூகம் எழுச்சி பெறுவதும், வீழச்சி அடைவதும் அந்தந்த சமூகங்களின் குடும்ப நிறுவனங்களது சீரான இயக்கத்திலேயே தங்கி இருக்கின்றது. இதன் காரணமாகத்தான் குடும்ப ஒழுங்கு பற்றி அல்குர்ஆனும், ஸூன்னாவும் மிகவும் விரிவாகப் பேசியிருக்கின்றன. எது எவ்வாறிருப்பினும் குடும்பக் கட்டமைப்பு சீரழிந்து காணப்படும் இந்நவீன யுகத்தில், இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழியில் குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்வதே நிம்மதியான வாழ்வுக்கும்,சிறப்பான சமூக உருவாக்கத்திற்கும் வழிசமைப்பதாய் அமையும்.(மூலம்: http://kattankudi.info/2013/08/14/6359 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.