எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் எவ்வாறு போட்டியிடவுள்ளது என்பதைத் தெரிவிக்கும் கூட்டமொன்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் எமது கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தேன். இதன்போது இன்றைய அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கக்கூடிய சக்தியுள்ளதால் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சியுடன் போட்டியிடும்போது எத்தனை வேட்பாளர்களுக்கு இடம் கொடுப்பார்கள் என்று கேட்டார்கள். இரண்டு கொடுப்பார்களா மூன்று கொடுப்பார்களா என்று ஏனைய கட்சியினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிடுவதற்கு எமது கட்சியின் சார்பாக மூன்று வேட்பாளர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர். இந்த மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய மக்கள் சக்தி எம்மிடம் உள்ளதென்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளதால் தான் எமக்கு மூன்று பேருக்கு இடம் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் நாம் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றோம். அதேபோல தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தொடர்ந்து நான் வெற்றி பெற்றுள்ளேன்.
மக்களை ஏமாற்றாமல் மக்களுக்கு உண்மையாக சேவையாற்றி வருவதால் தான் மக்கள் என்றும் என் பின்னால் அணிதிரண்டு உள்ளனர். ஆகவே இந்த மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எமது கட்சியின் சார்பாக மூன்று வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ளோம். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிர்வாகத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர் சிங்.பொன்னையா, தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், மகளிரணி தலைவி சரஸ்வதி சிவகுரு ஆகியோரை வேட்பாளர்களாக தெரிவு செய்துள்ளோம்.
இவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவர்களின் தனிப்பட்ட வெற்றியாக இருக்காது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெற்றியாகவும் திகாம்பரத்தின் வெற்றியாகவும் எமது அங்கத்தவர்களின் வெற்றியாகவும் இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்' என்றார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக்கமிட்டித் தலைவர்கள், தோட்டத் தலைவர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில்; கலந்து கொண்டனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/74923-2013-07-14-06-01-22.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.