......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 July 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது: டெசோ

இலங்கையில் நடத்தப்படவிருகின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள டெசோ, அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இனப்படுகொலைகளை இந்தியா ஏற்றுக்கொள்வது போலாகி விடும் என்றும் தெரிவித்துள்ளது. 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த டெசோ கலந்துரையாடல் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 ''இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், 'டெசோ' அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும், இந்திய தேசிய  காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்  தமிழகத் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும்,  தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்தின.

அதன் பிறகும்; 'டெசோ' இயக்கத்தின் சார்பில் பொதுநலவாய நாடுகளின் தூதுவர்களை யெல்லாம் சந்தித்து, வேண்டு கோளையும் அதற்கான விளக்கத்தையும்  அளித்த பிறகும்;  கனடா நாட்டின் சார்பில் இலங்கை பொதுநலவாய மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத்  தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு மனித உரிமை அமைப்புகள் -  குறிப்பாக பொதுநலவாய மனித உரிமை அமைப்பு, அவுஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்த பிறகும்;  பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு  அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்திருந்தார்.   

பொதுநலவாய நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமனதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகும்; இலங்கையிலே அந்த மாநாடு நடைபெறுவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் -  பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்;  அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகி விடக் கூடும்.

வலிமையான கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருவதால்,  இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில்  இந்தியா  நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால்,  அங்கே நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா ஏற்றுக்கொள்வது  போலாகி விடும்.  அம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது எனும் அழுத்தமான வேண்டுகோளை தொடர்ந்து நாம் 'டெசோ' சார்பில் வலியுறுத்தி வருகிறோம்.  

தமிழக மக்களும்  மற்றும் உலகத் தமிழர்களும் ஒருமுகமாக முன் வைத்திடும்  இந்த வேண்டுகோளை  இந்தியா ஏற்று -  இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில்  இந்தியா கலந்து கொள்ளாது  என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்ய வேண்டுமென இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75231-2013-07-16-11-32-01.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE