......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 14 July 2013

13ஐ திருத்த விடாதீர்கள்: மன்மோகனுக்கு ஜெயா கடிதம்

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் இரத்து செய்வதற்கோ இன்றேல் திருத்துவதற்கோ முயற்சிக்கின்றது. தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா கோரியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார். 

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. 

இறுதி கட்ட போரில் பலரை இராணுவம் கொன்று குவித்த பின்பும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது என இதற்கு முன்பு தங்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன். 

இலங்கையில் இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு சிங்களவர்களுக்கு இணையான சமஉரிமை அந்தஸ்து, வழங்குவதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. மேலும் தன்னாட்சி உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளும் மாற்றம் செய்யும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி தமிழக சட்டசபையில் தனி தமிழ் ஈழம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி ஈழம் குறித்து உலக தமிழர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். இதையே தான் இலங்கை தமிழர்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் இலங்கையின் அரசியல் சட்டம் 13 ஆவது சட்ட திருத்தம் கவலைக்குரியதாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் 13 ஆவது சட்டத்தை திருத்த வலியுறுத்தி சிங்கள தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். 

எனவே, அந்த சட்டத்தை திருத்த நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ளார். வருகிற செப்டம்பரில் வடக்கு மாகாணத்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது சட்ட திருத்தம் செய்வதை நியாயப்படுத்தினார். 

1987 ஆம் ஆண்டு உருவான இலங்கை-இந்திய ஒப்பந்தத் தின்படி 13 ஆவது திருத்தம் உருவானது. அதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை, பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். என்றும் இந்த 13 ஆவது திருத்தத்தில் உள்ளது. ஆனால், ஜனதா விமுகதி பெரமுனா கட்சியின் வழக்கின் மூலம் 2007-ம் ஆண்டு இலங்கை உயர்நீதிமன்றம் அரசின் இந்த முடிவை ரத்து செய்தது. அதனால் 2 மாகாணங்களும் இணைக்கப்படவில்லை. இதுவே இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களின் வாழ்வு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அது 13 ஆவது சட்ட திருத்தத்தினால் மட்டுமே முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதில் இலங்கை அரசு விதிவிலக்காக உள்ளது. எனவே, இலங்கையின் சட்ட பிரிவில் திருத்தம் கொண்டு வராமல் தடுக்க மத்திய அரசு அனைத்து வகையான நடவடிக்கையும், நெருக்கடிகளையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74941-13-----.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE