விமல் வீரவம்ச, சம்மிக்க ரணவக்க, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற பேரின சக்திகளை அணி திரட்டி, சிறுபான்மையினரை நசுக்கும் வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பள்ளிவாசல்களை தாக்குவது, முஸ்லிம்களின் கடைகளை உடைப்பது, இறைச்சிக் கடைகளுக்கு தீ வைப்பது போன்ற தீவிரவாத வேலைகளைச் செய்து வருகின்ற பேரினவாத சக்திகளுக்கு அரசாங்கம் துணை நிற்கிறது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
சாய்ந்தமருது, சீபிரீஸ் மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்...
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து ஜனாதிபதியிடம் எனது ஆட்சேபனையை தெரிவித்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய நான், முஸ்லிம் காங்கிரஸையும் வெளியேறுமாறு ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர் முன்வராவிட்டால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து சுயேற்சை அணியொன்றை களமிறக்க தீர்மானித்தேன். அவ்வேளை மு.கா., அரசுக் கூட்டில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முன்வந்தது. அதில் மு.கா. சார்பில் போட்டியிடுமாறு ரவூப் ஹக்கீம் என்னை அழைத்தார். அதற்கு உடன்பட்ட நான், அம்பாறை மாவட்டத்தில் அல்லது திருமலையில் இடம் தருமாறு கேட்டேன். ஆனால் அதற்கு உடன்படாத ஹக்கீம் வேறு இடத்தில் என்னைக் களமிறக்கினார். முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து ஹக்கீம் கால் பதிக்க முடியாதிருந்த காத்தான்குடியில் என்னை போட்டியிட வைத்தார். நான் துணிச்சலுடன் முகம் கொடுத்து வெறும் 5 நாட்கள் மட்டும் பிரசார வேலைகளைச் செய்து 7000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தேன்.
அங்கு வெற்றி பெற்ற ஹாபிஸ் நஸீர் அஹமட் 100 மில்லியன் ரூபா செலவு செய்தே வெற்றியீட்டினார். அது அவரது தந்தையின் பணமல்ல, அது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய பணமாகும். நான் மக்கள் மனதில் இடம்பிடித்தேன். சிலரின் எதிர்ப்பால் காத்தான்குடிக்கு வர முடியாதிருந்த ரவூப் ஹக்கீமும் எனது பக்க பலத்தால் அங்கு வர முடிந்தது.
அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா.வுக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்தனர். ஹக்கீம் அப்படித்தான் மேடைகளில் முழங்கினார். பள்ளிவாசல்களை உடைக்கும் அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காண்டா மிருகம் என்றார். இப்படியெல்லாம் சொல்லி நாமெல்லாம் சேர்ந்து பெற்றுக் கொடுத்த வெற்றியை எடுத்துக் கொண்டு ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டார்.
அது மட்டுமா? மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்தை மு.கா. குழுத் தலைவர் ஜெமீல் மூலம் ஆதரிக்க செய்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது.
அதுபோன்றுதான் இப்போது 13ஆவது திருத்த சட்ட விடயத்திலும் நாடகமொன்றை அரங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட இந்த 13ஆவது திருத்த சட்ட அதிகாரங்கள் மக்களுக்கு முழுமையாக கொடுக்கப்படாதிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ - தமிழ் மக்களுக்கு தீர்வாக 13 பிளஸ் ஐ தருவதாக கூறினார். இந்த உத்தரவாதத்தை இந்திய அரசுக்கு மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையிலும் கூறினார்.
ஐ.நாவின் தருஸ்மன் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அதற்கு பதிலாக நல்லிணக்க ஆணைக்குழு என்ற தீர்வை கொண்டு வந்து அதனைத் தருவதாக ஜனாதிபதி கூறினார். பின்னர் அந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இன்று 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அண்மையில் ஜனாதிபதியின் ஊரான தங்கல்லயில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் இறைச்சிக்கடைக்கு தீ வைக்கும்போது பொலிஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அநுராதபுரத்தில் பள்ளிவாசலை உடைக்கும் போதும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூட பார்த்துக் கொண்டிருந்தனர். இவைகளைத்தான் நான் ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பினேன்.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தான் விரும்பியதை செய்வேன். விருபியவர்கள் இருக்கலாம், விரும்பாதோர் விலகிச் செல்லலாம் என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இதனையும் கேட்டுக் கொண்டு வெட்கம் கெட்ட முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருகின்றனர்.
நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது எனது மனைவியும் மகளும் ரவூப் ஹக்கீமின் காலில் விழுந்ததாகவும் அதனால் அவர் ஜனாதிபதியுடன் பேசி என்னை விடுவித்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இறைவன் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவர்களது வங்குரோத்து அரசியல். என்னை விடுவிக்க ஹக்கீமால் முடியுமா? அந்தளவுக்கு அரசில் அவருக்கு மதிப்பிருக்கிறதா?
மக்களின் பிரார்த்தனையும் கிழக்கு முஸ்லிம்களின் போராட்டங்களும் சர்வதேசத்தின் தலையீடுகளுமே என்னை விடுவிக்க காரணமாக அமைந்தது. இதனால் 3 மாத தடுப்புக் காவலுக்கு ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்த நிலையில் எட்டு நாட்களில் விடுவிக்கப்பட்டேன். அதற்காக நன்றி தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இதைக்கூட தடுப்பதற்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
நாம் எதற்கும் அஞ்சக் கூடாது. சமூகத்தின் நலன்களுக்காக- உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் துணிந்து முன்வர வேண்டும். அதற்காக மறைந்த தலைவர் அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்று குறிப்பிட்டார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/72939-2013-06-29-14-58-38.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.