......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 June 2013

ஆப்கான் முழுவதுக்குமான பாதுகாப்பு நேட்டோவிடமிருந்து உள்நாட்டு படை வசம்

1989க்கு பின் நாடு முழுவதற்கு அரச படை பாதுகாப்பு
ஆப்கானிஸ்தானின் நாடு முழுவதற்குமான பாதுகாப்பு பொறுப்பை நேட்டோ படைகளிடமிருந்து ஆப்கான் படைகள் உத்தியோகபூர்வமாக கையேற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு பொறுப்பு ஆப்கான் படைகளிடம் கைமாறும் செயற்பாடு நேற்று பூர்த்தியடைந்தது.

ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற விசேட வைபவத்தில் நேட்டோ படை தனது கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த 95 மாவட்டங்களின் பாதுகாப்பு பொறுப்பையும் ஆப்கான் படைகளிடம் கையளித்தது. இந்த வைபவத்தில் ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய்யும் பங்கேற்றார்.
கடந்த 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படை தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றிய ஆப்கான் படையெடுப்புக்கு பின் இந்நிகழ்வு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. எனினும் இந்த நிகழ்வை ஒட்டி காபுல் நகரில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானின் இரண்டாவது துணை ஜனாதிபதியும் ஹசாரா இனச் சிறுபான்மைச் சமூகத்தின் தலைவருமான ஹாஜி மொஹம்மட் மொஹா செக் பயணித்த வாகனத் தொடரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஆனால் அவர் எவ்வித ஆபத்துமின்றி தப்பிவிட்டார்.
காபுலில் இடம்பெற்ற பாதுகாப்பு பொறுப்பை கையேற்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி கர்சாய் மற்றும் நேட்டோ பிரதானி அன்டர்ஸ் பொக் ரஸ்முஸன் இது ஒரு வரலாற்று மைல்கல் என விபரித்தார்.
“எமது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு படையினர் இன்றுமுதல் முன்னிலை பெறுவார்கள்” என கர்சாய் தனது உரையில் குறிப்பிட்டார். “தற்போது முதல் அனைத்து பாதுகாப்பு பொறுப்புகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு தலைமைப் பொறுப்புகளையும் எமது வீரமிக்க படையினர் ஏற்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
1989 ஆம் ஆண்டு சோவியட் ஒன்றிய படைகள் வெளியேறிய பின் ஆப்கான் முழுவதற்குமான பாதுகாப்பையும் அந்நாட்டு அரச படைகள் பொறுப்பேற்பது இது முதல் முறையாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு பாமியான் பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் படையிடம் சர்வதேச படைகள் கையளித்தது தொடக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக பொறுப்புகள் கைமாறியது. கடைசியாக பாதுகாப்புப் பொறுப்புகள் கைமாறும் பகுதிகளில் தலிபான்களின் பிறப்பிடமான கந்தஹார் மாகாணத்தின் 13 மாவட்டங்கள் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகம் காணப்படும் நகர்ஹல், கொஸ்ட் மற்றும் பக்திகா ஆகிய மாகாணங்களின் தலா 12 மாவட்டங்கள் உள்ளடங்கும்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 40,000 க்கும் குறை வாகவே இருந்த ஆப்கான் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை தற்போது சுமார் 350,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் பாதுகாப்பு பொறுப்பை படிப்படியாக கையேற்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஆப்கான் படையினர் தாக்குதலுக்கு இலக்காகும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் புதிய வீரர்களை பணியில் சேர்க்கவேண்டிய தேவையும் அதிகரித்து வந்துள்ளது. ஒப்பீட்டளவில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின் ஆப்கானில் இருக்கும் சர்வதேச கூட்டுப் படையினரின் பலி எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு வருகிறது. எனினும் தலைநகர் காபுலில் தலிபான்கள் அண்மையில் நடத்திய தாக்குதலை ஆப்கான் படையினர் சர்வதேச படையின் உதவியின்றி முதல் முறையாக தனித்து செயற்பட்டு முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தற்போது 50 நாடுகளின் பங்களிப்புடன் சுமார் 97,000 சர்வதேச கூட்டுப்படைகள் செயற்பட்டு வருகின்றன.
இதில் 68,000 அமெரிக்கப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2014 ஆம்ஆண்டு நிறைவுடன் சர்வதேச படைகள் ஆப்கானில் இருந்த முழுமையாக வெளியேறவுள்ளது. எனினும் ஆப்கான் அரசு அனுமதி அளித்தால் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு சிறிய படை ஒன்றை நிலைநிறுத்த அமெரிக்கா எதிர்பார்த் துள்ளது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/19/?fn=w1306192 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE