2002இல் இலங்கையுடன் மினி உலகக் கிண்ணத்தை பகிர்ந்து கொண்ட இந்தியா, முதல்முறையாக தனித்து கிண்ணத்தை வென்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
மழையால் பாதிப்பு:
.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக சுமார் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் குக் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுடன் பிராட் பந்துவீச்சில் போல்டு ஆக, ஷிகர் தவனுடன் இணைந்தார் கோலி. ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஓட்டங்களை சேர்க்க இந்திய துடுப்பாட்ட வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
இந்திய அணி 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்களை எட்டியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் 48 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 50 ஓட்டங்களை எட்டியபோது தவான் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 6, ரெய்னா 1, தோனி 0 என வேகமாக வெளியேற, 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ஓட்டங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.
ஜடேஜா, கோலி அதிரடி:
இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் ஜடேஜா. இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 47 ஓட்டங்களை சேர்க்க, இந்தியா சரிவிலிருந்து மீண்டது. 34 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் ஜடேஜா, 2 சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை சேர்த்தது.
ஜடேஜா 25 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33, புவனேஸ்வர் குமார் ஒரு ஓட்டததுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து தோல்வி:
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் அணித் தலைவர் அலாஸ்டர் குக் 2, டிராட் 20, ஜோ ரூட் 7, இயான் பெல் 13 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப, 4 விக்கெட் இழப்புக்கு 46 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த இயேன் மோர்கனும், ரவி போபாராவும் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தனர். இஷாந்த் சர்மா ஓவரில் போபாராவும், மோர்கனும் தலா ஒரு சிக்ஸரை விளாச, இங்கிலாந்து வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
18-வது ஓவரை வீச வந்த இஷாந்த் சர்மா, 3-வது பந்தில் மோர்கனையும், 4-வது பந்தில் போபாராவையும் வீழ்த்த, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. மோர்கன் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33, போபாரா 25 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஜோஸ் பட்லர், ஓட்ட கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜடேஜா பந்துவீச்சில் போல்டு ஆனார். டிம் பிரெஸ்னன் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு ரூ.11.3 கோடி பரிசு:
கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு ரூ.11.3 கோடியும், 2ஆவது இடம்பிடித்த இங்கிலாந்துக்கு ரூ.5.6 கோடியும், அரையிறுதியில் தோல்வியுற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு தலா ரூ.56 இலட்சமும் பரிசுத் தொகையாக கிடைத்தது.
3 கிண்ணங்களை வென்ற அணித் தலைவர்:
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச அளவில் 50 ஓவர் உலகக் கிண்ணம், மினி உலகக் கிண்ணம், இருபது ஓவர் உலகக் கிண்ணம் என 3 உலகக் கிண்ணங்களையும் வென்ற ஒரே அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய அணித் தலைவர் டோனி பெற்றார்.
தொடர்கிறது துரதிருஷ்டம்:
அதேநேரத்தில் இதுவரை எந்த உலகக் கிண்ணத்திலும் வென்றதில்லை என்ற இங்கிலாந்தின் துரதிருஷ்டம் இன்னும் தொடர்கிறது.
இந்தியாவும், மழையும்...
2002-ல் இலங்கையில் நடைபெற்ற மினி உலகக் கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டபோது மழை குறுக்கிட்டது. இறுதி ஆட்டத்தின் முதல் நாள் மழையால் பாதிக்கப்பட, 2-வது நாள் இறுதி ஆட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் மழை குறுக்கிடவே, கிண்ணத்தை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதேபோன்று இந்த முறையும் இறுதி ஆட்டத்தில் மழை விளையாடியது. எனினும் இந்த ஆட்டத்தை நடத்த கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கியது ஐசிசி தொழில்நுட்பக் குழு. இதனால் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மட்டுமல்ல, மழையையும் வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா.
ஆட்டநாயகன் ஜடேஜா:
இந்த ஆட்டத்தில் 33 ஓட்டங்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் "கோல்டன் போல்' விருதையும் ஜடேஜா (12 விக்கெட்டுகள்) தட்டிச் சென்றார்.
தொடர்நாயகன் ஷிகர் தவான்:
இந்தப் போட்டியில் 5 ஆட்டங்களில் 363 ஓட்டங்களை குவித்த ஷிகர் தவான், அதிக ஓட்டங்களை குவித்தவர்களுக்கான "கோல்டன் பேட்' விருதைத் தட்டிச் சென்றார்.
கங்குலி சாதனையை முறியடித்த ஷிகர்
இந்த சாம்பியன் டிராபியில் 5 ஆட்டங்களில் விளையாடிய ஷிகர் தவான் 363 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக 2000-ல் நடைபெற்ற போட்டியில் கங்குலி 348 ஓட்டங்களை எடுத்ததே, சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டமான இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(மூலம்: http://www.virakesari.lk/article/sports.php?vid=737 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.