......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

மொஸ்கோ தப்பிச் சென்ற ஸ்னோடன் ஈக்வடோரில் தஞ்சம்புகத் திட்டம்

நாடுகடத்த அமெரிக்கா ரஷ்யாவுக்கும் அழுத்தம்
அமெரிக்க முன்னாள் புலனாய்வு கணனி நிபுணர் எட்வட் ஸ்னோடன் ஈக்வடோர் நாட்டில் தஞ்சம் கோருவதற்காக நேற்று ரஷ்யாவிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஸ்னோடன் கியூப தலைநகர் ஹவானா சென்று அங்கிருந்து ஈக்வடோர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
எனினும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஸ்னோடனை நாடு கடத்துவதற்கான முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்யுமாறு அமெரிக்கா, ரஷ்யா அரசை கோரியுள்ளது.

இணையத்தளங்கள் உளவுபார்க்கும் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் கண்காணிப்புத் திட்டம் தொடர்பான திட்டங்களை கசியவிட்டு ஸ்னோடன் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அவர் மீது அமெரிக்காவை வேவுபார்த்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரது கடவுச் சீட்டையும் அமெரிக்கா மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
’மேற்கு அரைக்கோள் நாடுகள் (Westerr Hemisphere)  ஸ்னோடனை தமது எல்லைக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேறிய அவர், பின்னர் ஹொங்கொங்கில் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்தும் வெளியேறி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் தற்போது ஈக்வடோரிடம் தஞ்சம் கேட்டுச் செல்லவுள்ளார். ஈக்வடோரின் லண்டன் தூதரகம் ஏற்கனவே விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்சுக்கு தஞ்சமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹொங்கொங்கில் தங்கியிருந்த ஸ்னோடனை நாடு கடத்துமாறு அமெரிக்கா கோரியதை அடுத்து, அவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு ஹொங்கொங் நிர்வாகம் கோரியதாக அங்கு ஸ்னோடனின் வழங்கறிஞராக இருந்த அல்பட் ஹோ பி. பி. சிக்கு குறிப்பிட்டுள்ளார். ஸ்னோடன் பாதுகாப்பாக வெளியேறவும் ஹொங்கொங் நிர்வாக அனுமதி அளித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நாடு கடத்தும் கோரிக்கை பூர்த்தியடையாததாக இருந்தது என ஹொங்கொங் குற்றம் சாட்டியுள்ளது. ஸ்னோடன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் அளவுக்கு சட்ட ரீதியான எந்த விடயதானமும் அமெரிக்காவின் கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என ஹொங்கொங் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஸ்னோடனை கைது செய்யாதது குறித்து ஹொங்கொங் நிர்வாகத்திடம் அமெரிக்க நீதித் திணைக்களம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்யா சென்றுள்ள ஸ்னோடனை கைது செய்ய ரஷ்ய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
எனினும் ஸ்னோடன் தமது நிலப்பரப்புக்குள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாத நிலையில் அவரை கைது செய்ய முடியாது என ரஷ்யா கைவிரித்துள்ளது. “ரஷ்யாவின் சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு இண்டர்போல் ஊடாக அவரை கைது செய்ய எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை. எனவே இந்த இடைத்தங்கும் பயணியை கைது செய்ய எந்த அடிப்படையும் இல்லை” என ரஷ்ய அதிகாரி ஒருவர் அந்நாட்டின் இன்டர் பெக்ஸ் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்னோடன் மோஸ்கோவில் இருந்து நேற்று மாலை அளவில் கியூபாவுக்குப் புறப்பட்டுச் செல்ல இருந்ததாகவும் அவர் கியூபாவில் இருந்து ஈக்வடோர் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் பி. பி. சி. யின் மொஸ்கோ செய்தியாளர் குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த நாட்டிலும் கைதாகாமல் தவிர்க்கும் வகையில் தனது பயண ஏற்பாட்டை செய்திருப்பதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.
மறுபுறத்தில் ஸ்னோடனின் புகலிடக் கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஈக்வடோர் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ படினோ நேற்று தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈக்வடோருக்கு இடையில் நாடுகடத்தல் தொடர்பான உடன்பாடொன்று இருந்தபோதும் அது குற்றச்செயல்கள் அல்லது அரசியல் ரீதியான விவகாரங்களில் செயற்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை என குறிப்பிடப்படுகிறது.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/25/?fn=w1306251 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE