கடும்போக்கு சுன்னி மதப்போதகர் ஒருவரின் ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனைச்சாவடி ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்தே மோதல் வெடித்துள்ளது. கொல்லப்பட்ட இராணுவத்தினரில் மூன்று அதிகாரிகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
சிரிய சிவில் யுத்தத்தில் அந்நாட்டு அரசுக்கு லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ் ஆதரவளித்து தமது போராளிகளை பங்கேற்கச் செய்ததைத் தொடர்ந்து லெபனானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தலைநகர் பெய்ரூட்டிலிருந்து தெற்காக 40 கிலோ மீற்றருக்கு அப்பாலிருக்கும் சிடொன் நகரில் இயந்திர துப்பாக்கிகள், ரொக்கெட் தாக்குதல்களின் சத்தம் அந்த பகுதியையே யுத்த மயமாக்கியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
சிரிய யுத்தத்தையொட்டி லெபனானிலும் ஷியா, சுன்னி முஸ்லிம்கள் பிரிந்து நின்று மோதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் சுன்னி மதப்போதகரான ஷெய்க் அஹமத் அல் அஸ்ஸிரின் ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்ததையடுத்தே மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டு மேலும் 40 பேரளவில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதன்போது இராணுவ சோதனைச் சாவடி மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/25/?fn=w1306254 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.