நாட்டினதும் நாட்டு மாணவர்களினதும் எதிர்காலம் கருதி நல்நோக்கத்துக்காக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற புலமைப்பரிசில் சபையை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யான அகிலவிராஜ் காரியவசம் நேற்று சபையில் அதிருப்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற பாராளுமன்ற புலமைப்பரிசில் சபை (நீக்கம்) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் ஆரம்ப உரையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் கல்வி மேம்பாட்டையும் மாணவர்களின் கல்வி வளத்தையும் விருத்தியடையச் செய்யும் வகையில் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே பாராளுமன்ற புலமைப்பரிசில் சபை ஐக்கிய தேசியக்கட்சியினால் 2002 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் போது இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களின் அங்கீகாரத்துடனேயே அது நிறைவேற்றப்பட்டது. இந்த சபையின் மூலம் எமது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
எனினும் எமது ஆட்சி மோசமான முறையில் கவிழ்க்கப்பட்டதன் காரணத்தால் இந்த சபை ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது போய்விட்டது. எனினும் எமது நாட்டினதும் மாணவர்களினதும் எதிர்காலம் கருதிய இத்திட்டத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருப்பது ஏன் என்பது புரியாதுள்ளது. புலமைப்பரிசில் திட்டம் ஒன்றுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவது தவறான செயற்பாடாகும்.
இந்நாட்டின் கல்வி நிலையை சீரழிப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். புத்தளத்தில் ஆசிரியை ஒருவரை முழந்தாளிட வைத்தமைக்காக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை தேர்தலைக் கருதிய செயற்பாடாகவே எண்ண முடிகின்றது. ஏனெனில் இதற்கு முன்னரும் இத்தகைய பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5378 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.