......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் அமைக்கவேண்டுமானால் ஆட்சிமாற்றத்தைக் ஏற்படுத்தக்கூடிய தேர்தல் ஒன்று அவசியம்: ரணில்

நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சி மக்களின் தேவையை உணர்ந்து புதிய அரசியலமைப்பு வரைபை முன்வைத்துள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் அமைக்கவேண்டுமானால் ஆட்சிமாற்றத்தைக் ஏற்படுத்தக்கூடிய தேர்தல் ஒன்று அவசியமாகும். அதற்காகவே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் சட்டத்துறையும் கல்வித்துறையும் பாரிய பலவீனமான நிலையை அடைந்துவிட்டது. நானும் அனுர பண்டாரநாயக்கவும் பாடசாலை சென்ற காலத்தில் அதிபர்கள் எம்மை பிரம்பால் அச்சமின்றி அடிப்பார்கள். எனினும் அப்போது பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவிடம் அனுர பண்டாரநாயக்க இது பற்றி கூறியதில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற மாவட்ட அமைப்பாளர்கள் சிலருக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் கூறியதாவது
பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரினால் இன்று சுயாதீனமான செயற்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. 300 வருடங்களாக இருந்த நாட்டின் சம்பிரதாயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மாற்றியுள்ளது. நாட்டில் சட்டமும் கல்வித்துறையும் வீழ்ச்சிகண்டுள்ளன.
நானும் முன்னாள் அமைச்சர் அனுர பண்டாரநாயக்கவும் ரோயல் கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றோம். அப்போது பாடசாலை அதிபர் எங்களை பிரம்பால் அடிப்பார். ஆனால் அதனை நாங்கள் எமது தந்தைமாருக்கு கூறுவதில்லை. அவ்வாறு கூறினால் எமது தந்தைமார் பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு விடயத்தை கேட்டறிந்துவிட்டு எமக்கு மீண்டும் தண்டனை அளிப்பார்கள். அதனைவிட சம்பவத்தை வீட்டில் கூறாமல் ஆசிரியரிடமிருந்து அனுபவத்தை கற்றுக்கொண்டோம். அக்காலத்தில் அனுர பண்டாநாயக்கவின தந்தையான எஸ்.டபிள்யு. ஆர். பண்டாரநாயக்கவே பிரதமராக இருந்தார். எனினும் அதிபர்கள் ஆசிரியர்கள் சுயாதீனமாக செயற்பட்டனர்.
ஆனால் தற்போது என்ன நடக்கின்றது? அண்மையில் பிரதேச சபையின் தலைவர் ஒருவரின் மகன் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கியுள்ளார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளனராம். ஆனால் பொதுவான சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆசிரியர்களும் இவ்வாறான சம்பவங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டால் கட்சி மட்டத்தில் தண்டனை வழங்கினால் மட்டும் போதுமானதல்ல. மாறாக பொதுவான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் இங்கு இடம்பெறுவதில்லை.
கல்வித்துறை இன்று பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒருபுறம் கல்விக்கான நிதியை குறைக்கின்றனர். மறுபுறம் பாடசாலைகளில் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இன்றி பாடசாலையை நடத்த முடியாது. அரச சேவை ஆணைக்குழு இல்லாததே இதற்கான காரணமாகும்.
அக்காலத்தில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட்டதற்கு காரணம் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்பட்டமையாகும். அன்று அதிபர்கள் ஆணைக்குழுக்களின் ஊடாகவே நியமிக்கப்பட்டனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. 17 ஆவது திருத்தச் சட்டமும் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் அரச ஊழியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மெளனமாகவே உள்ளனர்.
தற்போது குற்றச்சாட்டுக்களின் பேரில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் விசாரிக்கப்படுகின்றார். அப்படியாயின் இவருக்கு எவ்வாறு பதவி உயர்வுகள் கிடைத்தன? சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
மக்களின் பிரதிநிதிகளினதும் அதிகாரங்களை அவர்களின் கடமைக்கு உட்படுத்தி மட்டுப்படுத்தவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இந்த நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியலமைப்பு வரைபை முன்வைத்துள்ளது. மீண்டும் பொலிஸ் அரச மற்றும் நீதி சேவை ஆணைக்குழுக்களை நியமிக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாகும்.
சுயாதீன ஆணைக்குழுக்களை மக்களே கோருகின்றனர். மக்கள் கோருகின்ற பொலிஸ் அரச மற்றும் நீதி சேவை ஆணைக்குழுக்களை வழங்கவேண்டும் என்பதற்காகவே செயற்பட்டுவருகின்றோம். குறிப்பாக நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நல்லாட்சி என்பது இல்லை. எனவே மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படக்கூடிய தேர்தல் இடம்பெறவேண்டியது அவசியமாகும். அதனை நோக்கியே செயற்பட்டுவருகின்றோம் என்றார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5478 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE