போட்டித்தன்மை மிக்க அரசியலை கைவிட்டு தேசிய பிரச்சினைகளை அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு கண்டு அதன் பின்னர் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கி மக்களின் இறையாண்மையை பலப்படுத்தி முன்னோக்கி செல்வதே எமது எதிர்பார்ப்பாகுமென்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஐ.தே.க.தயாரித்த ஆவணத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை பெல்லன ஸ்ரீ ஞானவிமல மகாநாயக்கா தேரரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கையளித்த பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இது அரசியலமைப்பு நகல் அல்ல. நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான சித்தாந்தங்கள் அடங்கிய ஆவணமாகும். அடுத்த சில மாதங்களில் இது தொடர்பாக விவாதித்து, அது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியும்.
புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கி மக்களின் இறையாண்மையை பலப்படுத்தி முன்னகர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். எமது பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை என்பன எவ்வாறு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. எவ்வாறு நல்லாட்சியை ஏற்படுத்துவது என்பதே எமது இலக்காகும்.
1977இற்கு பின்னர் உலகின் பல்வேறு நாடுகளில் அரசியலமைப்புக்கள் மாற்றமடைந்துள்ளன. விசேடமாக 2010ஆம் ஆண்டின் சுவீடனின் புதிய அரசியலமைப்பு மற்றும் அதற்கு முன்பிருந்த அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்ந்தோம்.
அது மட்டுமல்லாது 2000 வருடங்களுக்கு முன்னர் போதி மாதவன் போதித்த போதனைகளிலும் கவனம் செலுத்தினோம். அப் போதனைகளில் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாக பேச்சுவார்த்தைகளை நடத்துங்கள், சமாதானமாக பிரிந்து செல்லுங்கள் என்றே போதி மாதவன் போதித்துள்ளார்.
ஒரே நேரத்தில் அனைவரும் ஒரே தீர்மானத்தை எடுக்க வேண்டுமென கூறவில்லை. நட்புறவோடு பேச்சு நடத்தி தீர்மானம் எடுங்கள் என்றே புத்த பெருமான் போதித்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து சில விடயங்களை இவ் ஆவணத்தில் சேர்த்துள்ளோம்.
எமது நாட்டின் அரசியல் திட்ட வரைபு தோல்வி கண்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தான் அரசியல் கட்சிகளால் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாமல் போனது. அதன் காரணமாக யுத்தமும் நீண்ட காலம் நீடித்தது.
எனவே, அரசியல் கட்சிகளுக்கிடையான போட்டித்தன்மை மாற வேண்டும். தேசிய பிரச்சினைகளை பரந்தளவில் பேச வேண்டும். அதன் மூலம் ஒரு வரையறைக்குள் வந்து பின்னர், மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
எமது, இந்த ஆவணம் தொடர்பில் அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மகாநாயக தேரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என்றார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5462 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.