......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 June 2013

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் சீர்திருத்தவாதி ரவ்ஹானி வெற்றி

ஈரான் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஹஸன் ரவ்ஹானி, கடும்போக்குவாதத்தை பின்தள்ளி மிதவாதிகள் வெற்றியீட்டியதற்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈரான் ஜனாதிபதி தேர்தலில் சீர்திருத்தவாதியான ஹஸன் ரவ்ஹானி 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதோடு, தேர்தல் இரண்டாவது சுற்றுவரை செல்லும் வாய்ப்பை தவிர்த்துக் கொண்டார்.
கடந்த சனிக்கிழமை பின்னேரம் தேர்தல் முடிவுகள் வெளியானதும் தெஹ்ரான் வீதியில் குவிந்த ரவ்ஹானி ஆதரவாளர்கள் சீர்திருத்த ஆதரவு கொண்ட வாசகங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
தேர்தலில் குறைவான வெளிப்படைத் தன்மை மற்றும் தணிக்கை முறைகள் பற்றி அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, ஈரானுடன் உறவைப் பேண தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மறுபுறத்தில் அணு சக்தி தொடர்பான ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
‘சர்வதேச சமூகம் ஈரான் மீது நல்லபிப்பிராயத்தை வழங்கக் கூடாது அல்லது அதன் அணு செயற்பாடு குறித்த அழுத்தங்களை இலகுபடுத்தக் கூடாது’ என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார்.
மஹ்மூத் அஹமதிநஜாத்திற்கு பின்னரான ஈரானின் அடுத்த ஜனாதிபதியை தேர்வுசெய்யும் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 50 மில்லியன் வாக்காளர்களில் 72.2 வீதமானோர் தமது வாக்கை பதிவு செய்தனர்.
இந்த தேர்தலில் வெற்றிபெற்ற ரவ்ஹானி வெளியிட்டுள்ள அறிக்கை, ‘ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டியுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
64 வயதான மதத் தலைவரான ரவ்ஹானி தனது அறிக்கையில் மேலும் கூறும்போது, ‘பகுத்தறிவு மற்றும் நவீனத்துவத்தை இறைவன் ஈரானுக்கு காட்டியதாக நான் கருதுகிறேன். இந்த வெற்றியானது கடும்போக்கை பின்தள்ளி அறிவு, நவீனத்துவம் மற்றும் மிதவாத சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாகும்’ என்றார்.
எனினும், ஜனநாயகத்தை நம்பும் நாடுகள் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய குடியரசின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு ஈரான் மக்களை மதிக்க வேண்டும் என ரவ்ஹானி வலியுறுத்தினார்.
ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனியும் ரவ்ஹானியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘தேர்வாகியிருக்கும் ஜனாதிபதி மற்றும் அவரது அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துவதோடு அவர் முழு தேசத்துக்குமான ஜனாதிபதியாவார்’ என்று கொமைனி குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவை ஆயதுல்லாஹ் கொமைனி ஓகஸ்ட் மூன்றாம் திகதி உறுதி செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பதவியேற்பார்.
ரவ்ஹானி தேர்தலில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து தலைநகர் தெஹ்ரான் வீதிகள் எங்கும் அவரது ஆதரவாளர்கள் கூடி மகிழ்ச்சியை வெளியிட்டனர். தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட போதும் வெற்றிக்கொண்டாட்டத்திற்கு அவர்கள் இடையூறு செய்யவில்லை. ஆதரவாளர்கள் ‘ரவ்ஹானி நீடூழி வாழ்க’ என கோஷமெழுப்பினர்.
கடந்த 2009 தேர்தல் முடிவைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான ஈரானியர் மீள தேர்தலை நடத்துமாறு கோரி மாதக் கணக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் அவர்களது கோரிக்கையை உயர்மட்ட தலைவர் நிராகரித்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வெற்றிகொண்டாட்டத்தில் ஒருசில ஆதரவாளர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோஷமெழுப்பினர். ரவ்ஹானி தனது தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் ஈரானின் அணு செயற்பாடு தொடர்பில் விதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச தடைகளை தளர்த்துவதற்கு முயற்சிப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஈரான் சர்வதேச தடைகளால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதோடு, வேலையின்மை அதிகரிப்பு, நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேற்கு நாடுகளுடன் நல்லுறவை பேணுவது குறித்தும் ரவ்ஹானி அவதானம் செலுத்தியுள்ளார். எனினும் நாட்டின் அதிகாரம் ஆளும் மதத் தலைவர்கள் மற்றும் புரட்சிப் படையிடமே தங்கியிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரானிய தேர்தலை மதிப்பதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, அதன் அணு செயற்பாடுகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எனினும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜே கார்னி, ஈரானின் தேர்தல் குறித்து எந்த வாழ்த்தையும் வெளியிடாமல் தவிர்த்துக் கொண்டார்.
பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ரவ்ஹானியின் தலைமையில் ஈரான் எதிர்காலத்தில் வேறு திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று புதிய தலைமையுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஹஸன் ரவ்ஹானி கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பல பதவிகளை வகித்துள்ளதோடு, ஈரானின் பிரதான அணுசக்தி தூதுவராகவும் செயற்பட்டுள்ளார். எனினும் அவர் அதிக வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெறவில்லை. ரவ்ஹானியுடன் சீர்திருத்தவாதிகளின் முகாமில் போட்டியிட்ட மொஹமத் ரஸா அரிப் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான கடாமி மற்றும் ரப்சன்ஜானி ஆகியோர் ஆதரவை வெளியிட்டது போன்ற காரணிகள் சாதகமாக அமைந்தது.
சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் முடிவுகளின் படி ரவ்ஹானி 50.71 வீத வாக்குகளை வென்று இரண்டாம் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டார். தெஹ்ரான் மேயர் மொஹமத் பகர் கலிபவ் 16.56 வீத வாக்குகளை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/17/?fn=w1306171 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE