......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 June 2013

13யை நீக்குவதில் அரசு தோற்றுவிட்டது: விமல்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தும் 13 ஆவது திருத்தத்தை நீக்குவதிலிருந்து தோற்றுவிட்டது என்று அமைச்சர் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.

13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அரசாங்கத்திலுள்ள இடதுசாரிகள்;, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பு எதிர்ப்பினை வெளிக்காட்டிவருக்கின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். 

மாகாண சபை முறைமையிலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடுமாறு தேசிய சுதந்திர முன்னணியினால் நாடளாவிய ரீதியில் திரட்டப்பட்ட  கையெழுத்து மகஜரை மாவட்ட அமைப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக திரட்டப்பட்ட கையெழுத்து மகஜரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக வைத்து அமைச்சர் இன்று புதன்கிழமை பெற்றுக்கொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்த வேண்டாம்' என்று மே மாதம் முதலாம் திகதியிலிருந்து நாம் கோரிக்கை விடுத்துவருவதுடன் நாட்டு மக்களையும் தெளிவுப்படுத்தி வருகின்றோம்.

'வடக்கு மாகாண சபைத் தேர்தல் செப்டம்பரில் நடத்தப்பட வேண்டுமானால் 13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும் என நாம் வரலாற்றில் முதல் முறையாக கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக  நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக 10 நாட்கள் கையொப்பங்களை திரட்டினோம் அதில், ஐ.தே.க, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக 10 லட்சத்திற்கு அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. 

இந்த மகஜரை எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியிடம் கையளித்து  10 லட்சம் மக்களின் எண்ணத்தை ஜனாதிபதிக்கு  தெரிவிக்க உள்ளோம்.

அரசாங்கம் இன்று செய்ய எண்ணியுள்ள இரண்டு திருத்தங்கள் மட்டும் போதுமானது என நாம் கருதவில்லை. ஆனால் அந்த திருத்தத்தையும் செய்யவிடாது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அரசிற்குள் உள்ள பழைய இடதுசாரி கட்சி எதிப்ப்பு வெளியிட்டுள்ளன. அப்படியான எதிர்ப்பு கிளம்பினால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு நாம் கோரிக்கைவிடுப்போம் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில்; மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தும் 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70627-23-13-.html#sthash.P0a81DA1.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE