அரசியலமைப்பு சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பிலான மத்திய அரசாங்கத்தின் திட்டத்திற்கு மத்திய மாகாண சபை தனது ஆதரவினை வெளிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பு மற்றும் இருதரப்பு கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் முப்பது மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மேற்படி பிரேரணைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் வெட்கம் வெட்கம் என தொடர்ச்சியாக கூச்சலிட்டனர். அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஜான் ஆதரவாக வாக்களித்தார். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆளும்கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான விஜயசிறி மற்றும் அம்ஜாட் ஆகிய இருவரும் ஆதரவாகவே வாக்களித்தனர்.
இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களான அனுஷியா சிவராஜா, எம். உதயகுமார், கணபதி கனகராஜ், ரமேஷ், எம்.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் சிங் பொன்னையா மற்றும் ஐ.தே.க. உறுப்பினர் எஸ்.சதாசிவம் ஆகியோர் சபையில் சமூகமளித்திருக்கவில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் முரளி ரகுநாதன் எதிர்க்கட்சியின் சார்பில் ஐ.தே.க.வுடன் இணைந்து தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
பிரேரணையை சமர்ப்பித்தல், விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என அனைத்தும் சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள் இடம்பெற்று முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவவின் பணிப்புரையின் பேரில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கான மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரிப்பதற்கென பிரேரணையொன்றை கொண்டு வரும் பொருட்டு நேற்று 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை மத்திய மாகாண சபை அவசரமாக கூடியது.
சபையின் பதில் தலைவர் டபிள்யு எம். யசமான தலைமையில் சபை கூடியபோது முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தியமைத்தல் தொடர்பான ஆலோசனைக்கு மத்திய மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் 19 உறுப்பினர்கள் இவ்வாறு அங்கீகாரம் வழங்கியிருப்பதால் குறித்த பிரேரணையை சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடும் எதிர்ப்பு
இதனையடுத்து கடுமையான எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் வெளியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக கூச்சலிட்டதுடன் குறித்த பிரேரணையானது மாகாண சபைகள் சட்ட வரைவுகளுக்கு முரணாக கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இது அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை வெளிக்காட்டி நிற்பதாகவும் உரத்து சத்தமிட்டனர். அதுமட்டுமன்றி 19 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் கூறுகின்ற போதிலும் குறித்த பிரேரணையை எந்தவொரு உறுப்பினரேனும் கையெழுத்திடவில்லை எனக்கூறி கூச்சலிட்டதுடன் பிரேரணை நகல்களையும் கிழித்து எறிந்தனர். இதனால் இருதரப்பிற்கும் இடையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாக்களிப்பும் நிறைவேற்றமும்
கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சபையில் அறிவிப்பு விடுத்த தலைவர், பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் அதனை உடனடியாக நிறைவேற்றுமாறும் பிரேரணையை சமர்பித்த தரப்பினரே வேண்டுகோள் விடுப்பதால் இதனை விவாதிக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்புக்கு விடுவதாக கூறினார்.
இதனையடுத்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 30 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாக கிடைக்கப்பெற்றன. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆதரித்து வாக்களித்ததுடன் ஏற்கனவே ஆளும் கட்சியுடன் இணைந்துக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர்
இதனையடுத்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வௌிளியிட்ட மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கே.கே.பியதாஸ கூறுகையில்
மத்திய மாகாண சபையின் வரலாற்றில் இன்று (நேற்று வௌ்ளிக்கிழமை) இடம்பெற்றதைப்போன்றதொரு ஜனநாயக விரோத, சர்வாதிகார செயற்பாடு வரலாற்றில் இடம்பெற்றதுகிடையாது. மாகாண சபை சட்ட வரைபுகளுக்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
எதிர்க்கட்சி பிரதம கொறடா
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்கி ஜெயவர்தன கூறுகையில்
13 ஆவது திருத்தம் தொடர்பாக ஆளும்கட்சியின் சார்பில் 19 உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை கையெழுத்திட்டிருப்பதாக முதலமைச்சர் கூறினார்.அதில் எவரும் கையெழுத்திட்டிருக்கவில்லை. அந்த நகல்கள் எம்மிடம் இருக்கின்றன என கூறியதுடன் குறித்த பிரேரணையின் நகல்களை ஊடகவியலாளர்களுக்கு காட்டினார்.
இராஜரட்ணம்
இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் கூறுகையில்;
இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. தனி நாட்டிற்கு பதிலாக மாகாண சபை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த முறைமையை இல்லாதொழித்தால் எதிர்காலத்தில் மீண்டும் நாட்டை பிரித்துக்கொடுப்பதற்கு வழிவகுக்கப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை என்றார்.
முரளி ரகுநாதன்
இங்கு கருத்து வெளியிட்ட உறுப்பினர் முரளி ரகுநாதன் கூறுகையில்
மத்திய மாகாண சபையின் இன்றைய (நேற்று) அவசர நிகழ்வின் ஊடாக ஜனநாயக பண்புகள் அனைத்தும் மீறப்பட்டு விட்டன. இனவாதிகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான ஜனாதிபதியே இவ்வாறான மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளார். பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் எல்லாம் மாகாண சபைகளில் மேற்கொள்வதானது பயனற்றதாகும் என்றார்.
ஜெயனூல் ஆப்தீன் (லாபீர்)
இதனையடுத்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜெயனூல் ஆப்தீன் (லாபீர்) கூறுகையில்
இன்றைய (நேற்று) சபை அமர்வானது வெறும் 15 நிமிடங்களே இடம்பெற்றது. இதற்கென 10 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சொந்தமான பணத்தை இவ்வாறு விரயமாக்குவது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் என்றார்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5562 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.