......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

இந்தியாவின் உத்தரகாண்டில் பேரழிவு: 1000 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால்  ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன.
 ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உட்பட 73 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சமோலி, உத்தரகாசி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு லட்சம் பக்தர்கள் சாலைகள் சேதம் அடைந்ததால் ஆங்காங்கே சிக்கியுள்ளனர்.
பொதுமக்களும் பல இடங்களில் வெள்ளத்துக்கு இடையே சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இராணுவ ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவற்றின் மூலம் உணவு பொட்டலங்கள், உணவு பொருட்கள் போடப்படுகின்றன,
வட மாநிலங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பெய்த மழை, பல்வேறு இடங்களில் நேற்று சற்று குறைந்துள்ளது. வெப்பநிலையும் சாதகமாக இருந்ததால், மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

உத்தரகாண்டில் மழை, வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் யாத்திரிகர்கள். வெள்ளம், நிலச்சரிவால் கூட்டம் கூட்டமாக சேற்றில் புதைந்து இவர்கள் இறந்துள்ளனர்.
புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகே 50 பக்தர்கள் புதைந்து பலியாகினர்.
வெள்ளத்தில் இக்கோயில் முழுமையாக மூழ்கி விட்டது.  இதனால், கோயில் அப்படியே உள்ளதா? அல்லது இடிந்து விட்டதா என தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கே 6 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர்.
உத்தரகாண்ட் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெள்ளத்தாலும், நிலச் சரிவாலும் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் புனித யாத்திரை சென்றவர்கள். உத்தரகாண்டில் 200 கார்கள், 2 மண் அள்ளும் பிரம்மாண்ட இயந்திரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

காரையோரம் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஹெலிகாப்டரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும், நிருபர்களும் நிலச்சரிவால் பூ என்ற இடத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

அரியானா , உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் கத்திமா , பானிபட் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டு விட்டது.
 உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், ‘‘இமயமலை சுனாமியால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கக்கூடும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பலி எண்ணிக்கையை பற்றி சரியாக கூற முடியாது’’ என்றார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=737 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE