அமெரிக்காவில் எச்.ஐ.வி. யுடன் பிறந்த குழந்தையொன்று அதிலிருந்து குணமடைந்துள்ளதாக ஆராய்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த குழந்தையின் தற்போதைய வயது 2 1/2 வருடங்கள் எனவும் கடந்த வருட காலமாக மருந்துகள் இன்றி அக் குழந்தை உயிர் வாழ்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அட்லாண்டாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற எயிட்ஸ் தொடர்பான மாநாட்டிலேயே ஆராய்சியாளர்கள் இவ்வறிவிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தையின் தாய் எச்.ஐ.வியால் பீடிக்கப்பட்டிருந்துள்ளார். எனினும் குழந்தை பிறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே அவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவர் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதினை தடுக்கும் மருந்துகள் எதனையும் பாவிக்கவில்லையென்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
இக்குழந்தை பின் தங்கிய பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
இதனையடுத்து குழந்தை பிறந்தவுடனேயே அதனை இத்துறையில் நிபுணரான வைத்தியர் ஹனா கேவின் மருத்துவ நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அக்குழந்தைக்கு எச்.ஐ.விக்கு எதிரான தீவிரமான மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
அக்குழந்தைக்கு zidovudine, lamivudine மற்றும் nevirapine போன்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகவே குழந்தை தற்போது குணமாகி வரும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல மருந்துகள் கலவையாக குழந்தைக்கு வழங்கப்பட்டதும் இதன் மூலம் எச். ஐ. வி உடம்பில் மறைந்து இருக்கும் சாத்தியமும் தடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்ற சிகிச்சை மூலம் மற்றைய குழந்தைகளையும் குணப்படுத்த முடியுமா? என ஆராய வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருத்துவ துறையில் புதிய மைல்கல்லாக இது கருதப்படுகின்றது.
பொதுவாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் அதற்கான மருந்துகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும் எனினும் இக்குழந்தை மருந்துகள் இன்றிஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றது.
இதனை தொடர்ச்சியான பல ஆராய்சிகள் மூலம் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனினும் தொடர்ச்சியாக இக்குழந்தையை ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு திமோதி ரே பிரவுன் என்ற நபரே இதுவரை எச்.ஐ.வியிலிருந்து முற்றாக குணமாகிய நபராகக் கருதப்படுகின்றார்.

இவ்வரிசையில் 2 வயதான இக் குழந்தையும் சேர்ந்துள்ளது. இது எச்.ஐ.வி தொடர்பான மருத்துவ ஆராய்ச்சித்துறைக்கு புத்துணர்வு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி ஆபிரிக்காவில் அதிகளவிலான குழந்தைகள் எச்.ஐ.வியுடன் பிறப்பதால் இதுபோன்ற வளர்ச்சியானது அவர்களது வாழ்வில் புது மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 300,000 குழந்தைகள் எச்.ஐ.வியுடன் பிறந்துள்ளனர்.இவற்றில் அதிகமானவை வறியநாடுகளில் பிறந்துள்ளன.
அவர்கள் வெறும் 60 வீதமானோரோ தமது குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி. தொற்றாமல் தடுக்க மருந்துகளை பயன்படுத்தியுள்ளனர்.
வறுமை மற்றும் அதுதொடர்பான விளக்கமின்மை போன்றன இதற்கான காரணங்களாக உள்ளன.(மூலம்:http://www.virakesari.lk/article/technology.php?vid=153 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.