......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

'கைதிக்கு நாளொன்றுக்கு 720 ரூபா செலவு'

-எம்.எஸ்.நூர்தீன்

சந்தேகநபர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதை குறைத்து முடியுமான வரை பொலிசார் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். விளக்கமறியலில் வைக்கும் கைதியொருவருக்கு நாளொன்றுக்கு 720 ரூபா செலவு செய்யப்படுகின்றது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்  என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்கு வரும் மக்களுக்கு கரிசனை காட்டுபவர்களாக நீதிபதிகள் நடந்து கொள்ள வேண்டும். உயர்ந்த அந்தஸ்த்து  என்பதும் குலப்பெருமை மேலதிக்கம் இவைகள் நீதிபதிகளிடத்தில் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதம நீதியரசர்,

"நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று நீதிமன்றங்களில் பார்க்கக் கூடாது. மக்கள் எங்களை நாடியே நீதிமன்றத்திற்கு வருகின்றனர். சட்டத்தையும் நீதியையும் மக்கள் தேடி வருகின்றனர். இதன் போது மக்களுக்கு நாம் கரிசணை காட்டி நடந்து கொள்ள வேண்டும். அவ்விடத்தில் மேலாதிக்கம் இருக்கக்கூடாது. 

தம்மிடம் வரும் வழக்குகளை தனது வழக்கு போன்று நினைத்து சட்டத்தரணிகள் செயற்பட வேண்டும்.சட்டத்தரணிகளை நம்பி  வரும் மக்களை அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். 

பொலிசார் எல்லாவற்றையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. பொலிஸாருக்குள்ள அதிகாரங்களை வைத்து பொலிஸ் நிலையங்களிலும் பிணை வழங்கமுடியும். இலகுவான முடிவுகளை பொலிஸ் நிலையங்களிலும் பொலிசார் எடுக்க முடியும்.
 
பொலிசாரினால் தீர்த்து வைக்க முடியுமான பிரச்சினைகளை அவர்கள் தீர்த்து வைத்து அவர்களுக்கு  பிணை வழங்கி நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை குறைக்க வேண்டும். சிறைச்சாலைக்கு அனுப்புவதை குறைத்து முடியுமான வரை உடனுக்குடன் பொலிசார் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். விளக்கமறியலில் வைக்கும் கைதியொருவருக்கு நாளொன்றுக்கு 720 ரூபா செலவு செய்யப்படுகின்றது. 

இது இந்த நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒருவரை சிறைக்கு அனுப்புவதனால் அவரும் அவரது குடும்பமும் பொருளாதார ரீதியான பிரச்சினைக்கு முகம் கொடுப்பதுடன் அவர் சமூகத்தில் இருந்து தூரப்படுத்தப்படுவதுடன் இந்த நாட்டிற்கு பொருளாதார ரீதியாக செய்ய வேண்டிய பங்களிப்பும் இல்லாமல் போய் விடுகின்றது.

தற்போது நமது நாட்டின் பொருளாதார நிலைமை நம் அனைவருக்கும் நன்கு தெரியும் அந்த வகையில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவ்வாறான வகையில் பொருளாதார ரீதியான பங்களிப்புக்களை செய்ய வேண்டும். 

மக்களை விட்டும் நாம் தூர சென்று விடக்கூடாது. நான் ஒரு பிரதம நீதியரசர் என்பதற்காக மக்களை விட்டும் தூரப்போய் விடக்கூடாது. மக்களோடு நாம் இருந்து அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என பிரதம நீதியரசர் மேலும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்  சட்டத்தரணி வினோபா இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கிசிற ரத்ணாயக்கா மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.மனாப், நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா, மற்றும் வாழசை;சேனை நீதமன்ற நீதிபதி எம்.றியாழ், களுவாஞ்சிகுடி, மற்றும் ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் உட்பட மட்டக்களப்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதி நிதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற பதிவாளர்கள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/61059--720-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE