......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

மத்தலவை பயன்படுத்தும் விமானசேவை நிறுவனங்களுக்கு 50% கட்டணக்கழிவு

-தீபா அதிகாரி 

மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்தவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு 50 சதவீத கட்டணக் கழிவும் ஏனைய மூன்று வருடங்களுக்கு 25 சதவீத கட்டணக் கழிவும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. 

அம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், இன்னும் மூன்று தினங்களில் அதாவது எதிர்வரும் 18ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தின் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

டுபாய், சார்ஜா, அமெரிக்கா மற்றும் கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும் 4 விமானங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி, மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்தார்.

எயார் அரேபியா, ஃப்ளை டுபாய், ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவை நிறுவனங்கள், மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தங்களது விமானங்களை தரையிறக்குவதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன என்று ஏனைய நாடுகளினுடைய விமானங்களையும் மத்தலையில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்தவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு 50 சதவீத விலைக்கழிவும் ஏனைய மூன்று வருடங்களுக்கு 25 சதவீத விலைக் கழிவும்  வழங்குவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் 18ஆம் திகதி மத்தல விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கவும் அங்கிருந்து விமானங்கள் புறப்படுவதற்குமான ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், அதற்கான மேற்பார்வைகளை மேற்கொள்வதற்கான விமானப் பயண கட்டுப்பாட்டுக் கோபுரம், விமானப் பயண தகவல் சேவை மத்திய நிலையம் மற்றும் வான்வழி தொலைத்தொடர்பு நிலையத்தினூடாக நாடுகளுடன் தொடர்புகொள்ளல் மற்றும் பயிற்சிகள் தொடர்பான நிலையங்கள் என்பனவும் மத்தல விமான நிலையத்தில் காணப்படுகின்றன.

சுமார் 45 மீற்றர் உயரமான நவீனமுறை தொலைத்தொடர்பு உபகரணங்கள் அடங்கிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமொன்றும் மத்தல விமான நிலையத்தில் காணப்படுவதாக கமல் ரத்வத்த மேலும் தெரிவித்தார்.











(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60781--50-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE