-ஏ.எச்.எம்.பூமுதீன்-
1983ஆம் ஆண்டுகளில் விஸ்வரூபமெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009 மே மாதம் 18ஆம் திகதி 26 வருட பூர்த்தியுடன் நந்திக்கடலுடன் சங்கமமானது போன்று 21.09.1980ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆலவிருட்சத்தின் ஆணிவேரை சிதைத்து இறுதிச் சமாதிகட்ட 2013.01.28ஆம் திகதி காலி முகத்திடலில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
மு.கா. தலைவராக ரவூப் ஹக்கீம் பதவியேற்ற பின் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 13 வருடங்களில் பிரதானமாக 6 பாரிய பிளவை எதிர்கொண்டது. இப்போது இறுதிக்கட்டப் போருக்கான அத்திவாரம், காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூதுக்கு கெபினட் அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் போடப்பட்டுள்ளது.
மு.கா. ஸ்தாதபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவையடுத்து ரவூப் ஹக்கீம் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது, அஷ்ரபின் மனைவியான பேரியல் அஷ்ரப் மு.காவை விட்டு வெயியேறினார். 2001ஆம் ஆண்டு இந்த முதலாவது பிளவு ஏற்பட்டது.
கட்சியின் ஸ்தாபக தலைவரின் மனைவியாலேயே முதலாவது பிளவு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் பிற்பாடு இதே ஆண்டில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வால் இரண்டாவது பிளவு ஏற்பட்டது.
2002ஆம் ஆண்டு மூன்றாவது பிளவு அதாஉல்லா கட்சியிலிருந்து வெளியேறியதன் மூலம் இடம்பெற்றது.
2004ஆம் ஆண்டு எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் மர்ஹும் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் ஆகியோரின் வெளியேற்றத்தோடு நாலாவது பிளவுக்கு முகம் கொடுத்தது மு.கா.
2005ஆம் ஆண்டு ரிஷாத் பதியூதீன், எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் நஜீப் ஏ.மஜீத் ஆகியோரின் எதிர்பாராத வெளியேற்றம் 5ஆவது பிளவாகும்.
இறுதியாக (6ஆவது) 2009ஆம் ஆண்டு எஸ். நிஜாமுதீன் மற்றும் கே.ஏ.பாயிஸின் வெளியேற்றம் இடம்பெற்றது.
இப்போது 7ஆவது பிளவுக்கு காலிமுகத்திடலில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மூலமாக பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.
இதற்காக மு.காவிலிருந்து ஏற்கனவே பிரிந்து சென்ற துணைக்குழுக்களை உள்ளடக்கி அரச உயர் மட்டம் பாரிய தாக்குதல் அணி ஒன் உருவாக்கியுள்ளது. இந்தச் சமருக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் ‘மு.கா.ஒழிப்பு இறுதிப் போர்’ என்பதாகும்.
8ஆவது பிளவு என்ற ஒன்று மு.காவுக்கு இனி வரக்கூடாது என்ற தோரணையில் மு.கா. மீது இந்த இறுதிக்கட்ட போர் திணிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிக் கட்டப் போரில் விடுதலைப்புலிகளைப் போன்று மு.காவும் அஸ்தமித்து விடுமா? அல்லது பதுங்கி நின்று எதிர்த்தாக்குதல் நடத்துமா?
2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி தனக்கு கட்சியால் வழங்கப்பட்ட பிரதியமைச்சர் பதவியை, அரச உயர் மட்டத்தினரின் கட்டளைக்குப் பணிந்து இராஜினாமாச் செய்த பஷீர் சேகுதாவூத் சுமார் 5 மாதங்களின் பின் கட்சியின் அனுமதியின்றி கெபினட் அமைச்சை காலிமுகத்திடலுக்கு முன்னால் வைத்து பெற்று பகிரங்கமாகத் தனது காட்டிக்கொடுப்பை பசாற்றியுள்ளார்.
மிக மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் மு.கா. ஒழிப்பு இறுதிப்போருக்கான பூரண அனுமதியை அரச உயர்மட்டம் வழங்க, களத்தில் நின்று கட்டளை பிறப்பிக்கின்றது துணைக்குழு. வழிகளை காட்டிக்கொடுக்கின்றார் பஷீர்.
மு.கா.தவிசாளர் பஷீர் சேகுதாவூதை பிரித்தெடுப்பதன் மூலம் மு.காவை இலகுவாக வீழ்த்தலாம் என நினைக்கும் அரச உயர்மட்டம், மேலும் இரு முனைகளில் தமது தாக்குதல்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கிழக்கு மாகாண சபையிலுள்ள மு.கா. உறுப்பினர்களை அரசுப் பக்கம் இழுத்தெடுப்பது ஒரு முனைத்தாக்குதல். அடுத்த தாக்குதல் மு.கா கட்டுப்பாட்டிலுள்ள உள்ராட்சி சபைகளின் முக்கியஸ்தர்களையும் அரசு பக்கம் ஈர்ப்பது. முதலாவது தாக்குதலின் கட்டளைத் தளபதி துணைக்குழுவிலுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர். இரண்டாவது தாக்குதல் தளபதி துணைக்குழுவின் மற்ரு முஸ்லிம் அமைச்சர். இதற்கான வழிகளை காட்டிக் கொடுப்பது அமைச்சர் பஷீர் சேகுதாவூத்.
தாக்குதல் அணியின் தாக்குதல் திட்டம் துணைக்குழுவிலுள்ள அமைச்சரின் அலுவலகத்திலும், வீட்டிலுமே தீட்டப்பட்டுள்ளது.
திட்டம் தீட்டப்பட்ட போது தாக்குதல் அணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். மிக இரகசியமாக கலந்துரையாடப்பட்ட தாக்குதல் திட்டம் குறித்த தகவல்கள் மெல்ல கசிந்துள்ளன.
தாக்குதல் திட்டம் இது தான்…
பஷீர் சேகுதாவூதின் நீண்ட நாள் ஆசையான கெபினட் அமைச்சு கனவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் அனுமதியைக் கோராமலேயே பஷீரை நியமித்தல். மீண்டும் அவருக்கு பிரதியமைச்சர் பதவி எனும் அரைத்துண்டை வீசினால் அதற்கு அவர் அசைய மாட்டார். எனவே, முழுத்துண்டை வீசி தமது காய் நகர்த்தலை ஆரம்பித்தல். இந்த முதல் திட்டம் வெற்றி.
இதனையடுத்து மு.கா. தலைமை பஷீரை கட்சியை விட்டுத் தூக்கும், அல்லது கெபினட் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு பணிக்கும். பணிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இதற்கு பஷீர் சேகுதாவூத் இணக்கம் தெரிவிக்கக்கூடாது. இதன்பின் கட்சி அவரை இடைநிறுத்தும். கட்சியிலிருந்து வெளியேறும் பஷீர், தன்னுடன் சிலரையும் அழைத்து வரவேண்டும்.
இதன்பின் மு.கா. அரசுக்கிடையே மோதல் முற்றும். மு.கா. அரசை விட்டு தானாகவே வெளியேறிச் செல்லும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு வெளியேறும்போது கிழக்கு மாகாணசபையில் அரசு பலமிழப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே கூறியதைப்போன்று மாகாணசபை உறுப்பினர்களை இழுத்தெடுக்கும் தாக்குதலை துணைக்குழுவிலுள்ள முஸ்லிம் அமைச்சர் முன்னெடுக்க வேண்டும்.
இதற்கமைய இத்தாக்குதல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
மன்சூர் வெளியேறுவார்; நஸீர் அஹமட் அசையார்!
கிழக்கு சுகாதார அமைச்சராகவுள்ள மு.கா. உறுப்பினர் மன்சூர் இத்தாக்குதலிலிருந்து மயிரிழையில் தப்பித்துள்ளார். கட்சித் தலைமை அரசைவிட்டு வெளியேறினால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு எதிர்த்தரப்பில் அவர் அமர்வார்.
மற்றொரு அமைச்சரான ஹாபிஸ் நஸீர் அஹமட் நிச்சயமாக அரசுக்கெதிராக செயற்பட மாட்டார். அவர் அரசு ஆதரவு போக்குடையவர். அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு அமையவே மு.காவில் அவர் இணைந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை நான்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிக்கியுள்ளனர். கிழக்கு மாகாண அமைச்சரவை நியமனத்தின்போது சர்ச்சையை ஏற்படுத்திய மாகாணசபை உறுப்பினர்களுள் இருவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
மன்சூர் இராஜினாமா செய்யும் சுகாதார அமைச்சை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ருவருக்கு பொருளாதார அமைச்சில் அதிக ஊதியத்துடனான பொறுப்பொன்று வழங்கப்படும்.
இன்னும் சிலருடன் பேச்சு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக அவர்களின் கடந்தகால தகவல்கள் தூசு தட்டிப்பார்க்கப் படுகின்றன. அவர்களது பலவீனமான செயற்பாடுகள் ஆராயப்படுகின்றன. இதனை அடிப்படையாக வைத்தே குறித்த பேச்சு முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
கிழக்கு மாகாணசபையை எக்காரணம் கொண்டும் பலமிழக்க செய்யாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
மறு பக்கம் துணைக்குழுவிலுள்ள மற்றுமொரு முஸ்லிம் அமைச்சர், மு.கா. கட்டுப்பாட்டி லுள்ள உள்ராட்சி மன்றத் தலைவர்கள், பிரதித் தலைவர்கள் மற்றும் பிரபல்யமிக்க உறுப்பினர்கள், பிரமுகர்களுடன் கலந்துரையாடலை முடுக்கிவிட்டுள்ளார்.
தனது அமைச்சுக்கூடாக செய்யமுடிந்த அத்தனை உதவிகளையும் மு.கா. கட்டுப்பாட்டிலுள்ள சபைகளுக்கு செய்து கொடுக்க தீர்மானித்து அதற்கான காய்நகர்த்தல்களையும் ஆரம்பித்துள்ளார்.
இதன்மூலம் மு.கா. தலைவருக்கு நெருக்குதல்களை வழங்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகப் பெரும் வலைப்பின்னலில் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல் திட்டத்தில் மு.கா. சிக்கிக்கொள்ளும் சூழ்நிலையே அதிகமாகக் காணப்படுவதாக துணைக்குழுவிலுள்ள ஒருவர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.
வெள்ளைக் கொடியை தூக்கிப் பிடித்தவாறு, தலைமையிலிருந்து தான் விலகுவதாக ரவூப் ஹக்கீம் அறிவிக்கும் சூழ்நிலை ஏற்படும்வரை இத்தாக்குதல் ஓயாது தொடுக்கப்படும் என்று அந்த துணைக்குழு பிரமுகர் கருத்துக் கூறினார்.
மு.கா. எம்.பிக்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சரணடைந்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கி பொறுப்புமிக்க பதவிகளை வழங்க அரசு தயாராகவுள்ளது.
இதை மீறி எதிர்த்தாக்குதல் நடத்த துணிந்தால் முழுவேக தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்களது பலவீனங்கள் அம்பலப்படுத்தப்படும் என எச்சரிக்கின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் மு.கா தரப்பில் இது தொடர்பான களநிலவரங்களை அறிய முற்பட்டபோது அங்கும் பரபரப்பான சூழ்நிலையே காணப்பட்டது.
பொதுவாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தினையடுத்து பலத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஹக்கீமின் தான்தோன்றித்தனம்!
இந்த ஏமாற்றத்துக்கு முழுக்காரணம் மு.கா. தலைவரே என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதை நன்கு தெரிந்திருந்தும் மு.கா. தலைவர் இந்தியாவில் தரித்து நின்றதை மு.கா. ஆதரவாளர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதை நன்கு தெரிந்திருந்தும் மு.கா. தலைவர் இந்தியாவில் தரித்து நின்றதை மு.கா. ஆதரவாளர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
பொறுப்புமிக்க தலைவராக உடன் நாடு திரும்பி தன் கட்சி எம்.பிக்களுக்கு பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
தனது நீதியமைச்சு மாற்றப்படாது என்பதற்காக ஏனையவர்களுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கக்கூடாது என்று நினைப்பது மிக மோசமான நிலைக்கே கட்சியை இட்டுச்செல்லும்.
அமைச்சர்களான அதாஉல்லா, ரிஷாத் பதியூதீன் போன்றோர் தமது பிரதேசங்களையும், தமது ஆதரவாளர்களையும் நன்கு அபிவிருத்தி செய்கின்றனர். மு.கா. ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஹக்கீமின் அரசியல் இராஜ தந்திரம் படுதோல்வியடைந்து விட்டது என்கின்றனர்.
எட்டு எம்.பிக்களை வைத்துக் கொண்டு மு.கா. தலைவர் பலமின்றி செயற்படுகின்றார். இப்படிப்பட்ட நிலையில் கட்சியின் தவிசாளர் எடுத்த தீர்மானம் சரியானதே. இதனையே ஏனைய எம்.பிக்களும் அதிரடியாக எடுக்க வேண்டும்.
நீதி அமைச்சு மாற்றப்படவில்லை என்பதை காரணமாக வைத்தும் தனது அனுமதியின்றி பஷீருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதை காரணமாக வைத்தும் அரசிலிருந்து வெளியேற மு.கா. தலைவர் முயற்சிப்பாராயின் அது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இதற்கு எம்.பிக்கள் துணைப்போகக் கூடாது என்ல்லாம் மு.கா. ஆதரவாளர்கள் கொதித்தெழுகின்றனர்.
ஆதரவாளர்களின் இக்கருத்துகளுக்கு அப்பால் இன்னும் சில விடயங்களையும் சுட்டிக்காட்ட தோன்றுகிறது.
ஹக்கீம் மீதான அரசின் ஆத்திரம்!
அரசுடன் – மு.கா. இணைந்த கடந்த இரண்டு வருடங்களில் எந்தவொரு விடயத்திலும் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசுடன் ஒத்துப்போகவில்லை. மாறாக உள்ளிருந்து எதிர் அரசியலையே செய்தார்.
உள்ராட்சி தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட ஹக்கீம், கிழக்கு மாகாணசபை கூட்டமைப்பு – ஐ.தே.க. கூட்டுக்குச் சென்று அரசு தோற்றுவிடும் நிலை தெரிந்தும் தனித்து போட்டியிட்டு அரசுக்கு எதிராக கடுமையாக வசைபாடியமை ரவூப் ஹக்கீம் மீது அரசு அதிக ஆத்திரம் கொள்ள காரணமாகவிருந்தது.
இதற்கு சரியான பழி தீர்க்கக் காத்திருந்த அரசுக்கு மேலுமொரு இடியாக பிரதம நீதியரசர் விவகாரத்தில் ஹக்கீம் நடந்துகொண்ட மு அமைந்தது.
நீதியமைச்சராக இருந்து கொண்டு குற்றவியல் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றில் உரையாற்ற 20 நிமிட நேர உரையை தயார்படுத்தியமை இறுதி நேரத்தில் அமைச்சு செயலாளர் மூலம் ஜனாதிபதிக்கு ஆதாரபூர்வமாக அனுப்பப்பட்டதையடுத்து கையும் மெய்யுமாக அகப்பட்ட ஹக்கீம் மீது அரசு பரிபூரணமாக நம்பிக்கை இழந்தது.
ரவூப் ஹக்கீமின் பணிப்பின் பேரில் கட்சியின் செயலாளர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை போன்ற காரணிகளை அடுத்தே முதற்கட்ட எச்சரிக்கையாகவே ஹக்கீமுக்கு தெரியாமல் அமைச்சரவை மாற்றப்பட்டதும், அவருக்கு நிகராகவும், அவரைவிட சக்திமிக்க துயை பஷீருக்கு வழங்குவதற்கும் காரணமாயிற்று.
இந்த உண்மையை ஹக்கீம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறின்றேல் ஹக்கீம் தலைமையிலான மு.கா., பஷீர் தலைமையிலான மு.கா. என்று ஒரு தனிப்பிரிவு உருவாகுவதை எவராலும் தடுக்க முடியாது போய்விடும். இந்த தனிப் பிரிவுக்கான அடித்தளத்தை பஷீர் சேகுதாவூத் நேற்றுமுன்தினம் முதல் இட்டுள்ளார் என்பது வேறுகதை.
தலைமை என்ன செய்யப்போகிறது?
மிகவும் ஆபத்தான கட்டத்திலிருக்கும் மு.காவும் அதன் தலைமையும் அடுத்து செய்யப்போவது என்ன?
அரசை விட்டு வெளியேறப்போகின்றதா? அல்லது பஷீரை கட்சியை விட்டும் நீக்கப் போகின்றதா? அல்லது பஷீருக்கு கிடைத்த பதவிமூலம் கட்சி பலப்பட்டுள்ளது என்று விழுந்தும் மண்படாது போன்று மக்கள் முன் ஹக்கீம் பாசாங்கு செய்யப் போகின்றாரா?
அல்லது பஷீர் தவிர்ந்த ஏனைய எம்.பிக்களுக்கு தலைமை தாங்கி அரசுடன் தொடர்ந்து இருக்கப் போகின்றாரா? என்பதை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அல்லது இன்று கூடும் அதியுயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் கட்டாயம் முடிவு செய்தே ஆக வேண்டும்.
இந்தடிப்படையில் நோக்கும்போது அரசின் மு.கா. ஒழிப்பு இறுதிப்போர் நந்திக்கடலில் புலிகள் இயக்கம் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்று அழித்தொழிக்கப்பட்டுவிடும் என்ற துணைக்குழுக்களின் அகூவல்கள் பலித்துவிடும் போன்றே தெரிகின்றது.
(metromirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.