......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

இந்தியாவைத் தோற்கடித்து சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியில் 138 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றே இலங்கை அணி சுப்பர் 6 சுற்றுக் தகுதிபெற்றது.

மும்பை பிரட்பேர்ண் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களைக் குவித்தது.
தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் சிறப்பாக ஆட இலங்கை அணி பலமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தீபிகா ரசங்கிக்கா 109 பந்துகளில் 84 ஓட்டங்களையும், அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன 67 பந்துகளில் 59 ஓட்டங்களையும், இஷானி கௌஷல்யா 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், யசோதா மென்டிஸ் 80 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுக்களையும், அமித்தா சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் வெற்றிபெற 283 ஓட்டங்களையும், சுப்பர் 6 சுற்றில் தகுதிபெற ஆகக்குறைந்தது 251 ஓட்டங்களையாவது பெற வேண்டுமென்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 138 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக றீமா மல்கோத்ரா 51 பந்துகளில் 38 ஓட்டங்களையும், திருஷ் காமினி 22 ஓட்டங்களையும், அணித்தலைவி மித்தாலி ராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா, உதேஷிக்கா பிரபோதனி, ஶ்ரீபாலி வீரக்கொடி, இனோக்கா ரனவீர, சன்டமாலி தொலவட்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின் முடிவு காரணமாக குழு "ஏ" இலிருந்து இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன. குழு "பி" இலிருந்து அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் தகுதிபெற்றுள்ளன.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE