......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

ஜனநாயகம், சமத்துவம் அபிவிருத்தியில் நாடு முன்னேற்றம் காணும்: ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  புத்தாண்டு வாழ்த்துச்செய்தி...

இன்று பிறக்கும் இப்புத்தாண்டில் எமது தாய் நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களை காணும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.


அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி பணிகளில் பாரிய முன்னேற்றங்களை அடைந்த ஒரு நாடாகவும் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த ஒரு நாடாகவும் நாம் இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம்.

அதே போன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தேசமாகவும் நாம் இந்த புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். எனவே, இன்று பிறக்கும் இப்புத்தாண்டில் எமது தாய் நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களை காணும்.

இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் எல்லா சமூகத்தினரும் பொது நோக்கத்துடன் ஒன்றுபடுவர் என்பது எனது நம்பிக்கையாகும். பிறக்கும் 2013ஆம் ஆண்டில் எமக்கு முன்னாலுள்ள எல்லா பணிகளிலும் திடவுறுதி அர்ப்பணம் மற்றும் தைரியத்துடன் உயர்ந்த வெற்றிகளை அடைந்திட எனது நல்லாசிகள்' என்று ஜனாதிபதி கூறியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துச் செய்தி...

'மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் எதிர்காலமும் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள ஒரு காலகட்டத்திலேயே நாம் 2013ஆம் ஆண்டை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம். பேராசைகள் ஒழிக்கப்பட்டு மக்கள் சேவை ஆட்சிகொள்ளக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதனை  வெற்றிகொள்ளக் கூடிய வல்லமை எம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்' என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் எதிர்காலமும் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள ஒரு காலகட்டத்தில் அவற்றுக்கு மத்தியிலும், சிறந்த ஒரு வாழ்க்கை முறையும், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சகலரும் சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு சூழலை வேண்டியே புதுவருடத்தை நோக்கி நகர்கின்றோம்.

இவை அனைத்தையும் வெற்றிகொண்டு சுமுக வாழ்க்கையை உருவாக்க தொழில்சார் அரசியல் முறையை மாற்றி பொதுமக்கள்சார் அரசியலாக அதனை மாற்றி பேராசைகள் ஒழிக்கப்பட்டு மக்கள் சேவை ஆட்சிகொள்ளக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதன் மூலமே அனைவரும் சம அந்தஸ்த்தையும் உரிமையையும் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

இதனை அடியொட்டிய ஒரு சூழலை உருவாக்குவதே உங்களுக்கும் எமக்கும் முன்னுள்ள சவாலாகும். இவைகளை வெற்றிகொள்ளக் கூடிய வல்லமை எம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்' என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தி...

பிறந்திருக்கின்ற புத்தாண்டின் புது மலர்வில் நாம் செல்லும் பயணம் வெல்லும் என்ற நம்பிக்கை எமது மக்களின் மனங்கள் தோறும் மேலும் வலிமை பெற வேண்டும். அதற்காக நாம் சகல தடைகளையும் கடந்து, இன்னமும் உறுதியுடன் உழைக்க எழுவோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி  அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இதுவரை கால மனித குல வரலாறுகள் யாவும் முன்னேறிய சமுதாயங்களையே உருவாக்கித் தந்திருக்கின்றன. அது போலவே, எமது மக்களின் சமகால வரலாற்றின் ஊடாக ஒளிமயமானதொரு எதிர்கால வரலாறு இங்கு படைக்கப்படும்; என்பது உறுதி.

கடந்து போன சில ஆண்டுகள் எம் மக்கள் மீது துயரங்களையும், அவலங்களையும் சுமத்தி விட்டு கழிந்து போனது போல் பிறக்கின்ற புத்தாண்டையும் எமது மக்களுக்கு துயர் தரும் காலமாக உருவாக்கும் சூழ்ச்சிகள் சில மானுட விரோத தீய சக்திகளால் இங்கு அரங்கேற்றப்படுகின்றன.   
              
அதற்கான அவநம்பிக்கைகள் இங்கு திட்டமிட்டு விதைக்கப்படுகின்றன. இவைகளுக்கு எமது மக்கள் எடுபட்டு விடக்கூடாது. துயரங்களும் அவலங்களும் நிரந்தரமானவையல்ல. அவை யாவும் தூர விலகி, காணவேண்டிய உரிமை விரைவில் கிடைக்கும் என்றும், காணாமல் போயிருந்து மறுபடி மலர்ந்துள்ள மகிழ்ச்சி இங்கு நீடித்து நிலவும்.

எமது மக்கள் நம்பிக்கையுடன் எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். இன்று வேட்டோசை இல்லை வெடி குண்டு சத்தங்கள் இல்லை, ஊரடங்கு சட்டங்களும் இல்லை,இவைகளுக்கு அச்சப்பட்டிருந்த   சூழலுல் இனி இங்கில்லை.

இன்று, அமைதி தரும் ஒரு சூழலில் பிறந்திருக்கும் புத்தாண்டை அச்சமின்றி வரவேற்கும் காலம் ஒன்று கனிந்திருக்கிறது. என்ற போதிலும் இயற்கை அழிவு தரும் துயரங்கள் எமது மக்களை வாட்டுகின்றன. வாடிய பயிர்களைக் கண்டு நாமும் வாடியிருக்க முடியாது. 

எமது மக்களின் வாட்டத்தைப் போக்கவே வரவழைக்கப்பட்டவர்கள் நாம். கடந்த கால அழிவுகளில் இருந்து மீண்டெழுந்த எமது மக்களும்,  தேசமும் இனி வரும் துயரங்கள் எவையாயினும் அவற்றில் இருந்து மீள்வது மிக சுலபமானதே.

எமது மக்கள் துயர்களுக்கு மத்தியில் வாழ்வதற்கென்றே யாராலும் சபிக்கப்பட்டவர்கள் அல்லர். நாம் எமது இலக்கை அடைவதில் தோற்றுப்போன ஓர் இன, சமூக மக்களும் அல்ல. எதையும் சாதிக்கப் பிறந்தவர்களே நாம் என்பதையும், அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை நாம் அடைந்தே தீருவோம் என்பதையும் பிறந்திருக்கும் புத்தாண்டில் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டிய தருணம் இது. 

அதற்குத் தேவை மதிநுட்ப சிந்தனைகளே! சாணக்கிய தந்திர வழிமுறைகளே! அர்த்தமற்ற வெற்றுக் கோசங்களாலும், நடை முறைக்கு சாத்தியப்படாத வழிமுறைகளாலும,; பிறந்திருக்கும் புத்தாண்டையும் எவரும் இருட்டில் தள்ளிவிட நாம் அனுமதிக்க முடியாது' என்றார். 

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் வாழ்த்துச் செய்தி...
'நாட்டில் பல எதிர்ப்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகங்களின் எண்ணங்கள் புனிதமானால் அவர்களது எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு புத்தாண்டில் புது ஒளி பிறக்கும்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அந்த செய்தியில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

'இன்று நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் தம் தம் வித்தியாசமான எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மை சிங்கள மக்கள் நாடு அபிவிருத்தி அடைந்து தமது எதிர்கால சந்ததியினர் தலை சிறந்து வாழ வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். 

அதேநேரம் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை பெற்று இந்நாட்டில் பெரும்பான்மையின மக்களுக்கு நிகராக சரி சமமாக வாழ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்ப்பார்ப்பை பெரும்பான்மையின மக்கள் புரிந்து கொண்டு அதிகார பகிர்விற்கு தங்களது ஆணையை தமது தலைவர்களுக்கு வழங்குவார்களேயாயின் அதன் மூலமாக எமது நாடு அபிவிருத்தி பாதையில் பயணிப்பதன் மூலம் சிங்கள மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும்.

தமிழ்மக்களின்  பிரச்சினைக்கு 2013ஆம் ஆண்டு தீர்வு காணப்பட்டு அபிவிருத்தியை நோக்கி பயணிக்ககூடிய ஆண்டாக மலரும் என ஆவலுடன் எதிர்ப்பார்ப்போம். 2013ஆம் ஆண்டு அனைத்து மக்களின் எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இருக்க வேண்டும்' என்றார். 

ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசரின் வாழ்த்துச் செய்தி...

மலர்ந்திருக்கும் 2013ஆம் ஆண்டு எமது மக்களின் வாழ்வில் விடிவினையும் சுபீட்சத்தினையும் கொண்டுவரவேண்டும் என தான் இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசர் தனது புத்தாண்டு வாழ்த்துசெய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இயற்கையின சீற்றங்களான வெள்ளம் மண்சரிவுகள் மற்றும் இடப்பெயர்வுகள் போன்றவற்றினால்  மதம், இனம், மொழி கடந்து இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தவித்து நிற்கும் இவ்வேளையில் 2013ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

இவ்வேளையில் நாம் இறைவனை வேண்டுவது இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒருவரையொருவர் ஏற்று மன நிம்மதியுடன் அன்பாகவும் சமாதானமாகவும் வாழவேண்டும் என்பதேயாகும்.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறு துன்பத்துயரங்களுக்கும் உள்ளாகி பரிதவித்த நிலையில் இருந்து விடுபட்டு தாங்களும் சுயமரியாதைக்குரியவர்களாக தங்களுடைய உரிமைகளை சமாதான வழிச்சென்று பெற்று நிம்மதியுடன் வாழ பிறந்திருக்கும் புத்தாண்டு வழிகாட்ட வேண்டும்.

இம்மண்ணில் வாழும் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் கூறாமலும் அடிதடிகளுக்கு உள்ளாகாமலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு தன்னைப்போல் மற்றவர்களும் வாழவேண்டும் என்ற யேசுபிரானின் கூற்றுக் கிணங்க விட்டுக் கொடுத்து நிம்மதியாவும் சந்தோஷமாகவும் வாழ இப்புத்தாண்டு வழிகாட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

கல்முனை மாநகர  முதல்வர் வாழ்த்து சிராஸ் மீராசாஹிப்பின் வாழ்த்துச் செய்தி...

'பிறந்துள்ள 2013ஆம் ஆண்டு சகலரது வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் சந்தோசமும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக மிளிர வேண்டும்' என கல்முனை மாநகர  முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'மலர்ந்திருக்கும் இப்புதுவருடத்தில் நாட்டு மக்கள் நித்திலத்தில் நிம்மதிப் பெருமூச்சோடு இன, மத வேறுபாடு இன்றி சந்தோசமாகவும் அன்னியோன்னியமாகவும் மனித நேயத்தை மதித்து வாழ்ந்து நம் நாடு சிறக்க வளம் கொழிக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

நடந்து முடிந்த மறந்துவிட வேண்டிய நிகழ்வுகளை புடம் போட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித் தனமான விடயம் அல்ல. கடந்த காலங்களில் ஈட்டிய அனுபவங்களை துணையாகக் கொண்டு எதிர்கால வளர்ச்சிக்கு வேண்டிய புதிய முயற்சிகளில் முனைந்து செயற்பட வேண்டும். பழையன கழிந்து புதியன புகுவதன் மூலம் புலர்ந்துள்ள புது வருடம் புதுப் பொலிவு பெற முயற்சிப்போம்' எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் வாழ்த்துச் செய்தி... 

'அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த இனிய வாழ்வை ஒழுங்கமைப்பதற்காக இன்று பிறக்கும் புத்தாண்டை வரவேற்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்' என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'உலகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடக்கின்றன. பல கோடி மக்கள் தங்கள் வாழ்வின் திருநாட்களை மகிழ்வுடன் கொண்டாடுகிறார்கள். அத்தகைய வாழ்க்கையொன்று எமக்கும் நிரந்தரமாக அமையப்பெற வேண்டும். 
 
அமைதியையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி நாம் தொலைதூரங்களுக்குச் செல்வதில் பொருளேதுமில்லை. சொந்த மண்ணின் விளைச்சல் தருகின்ற சுவையைப் போல பிறந்த மண்ணில் மலர்கின்ற மகிழ்வே மகத்தானது.  

அதற்கமைய எங்களின் பாதைகளையும் பயணத்தையும் நாம் அமைத்துக் கொள்வோம். சரியான பாதையைத் தெரிவு செய்து ஒழுங்கான பயணத்தை மேற்கொள்ளும்பொழுதே மகிழ்வும் நிறைவும் அமைதியும் கிட்டும்.  

மக்களின் பாதுகாப்பும் வளமான வாழ்வும் முன்னேற்றமும் உரிமைகளும் ஒருங்கிணைந்த சூழலே எமது தேவையாகும் என்பதை உணர்ந்து செயற்படுவோம். இவையெல்லாவற்றுக்கும் தேவையானது விழிப்புணர்வே. 

பிறக்கின்ற புதிய ஆண்டு விழிப்புணர்வினை எமது மக்களுக்கு வழங்கும் ஆண்டாகட்டும்.   இந்த விழிப்புணர்வு எங்கள் மக்களின் அமைதியையும் முன்னேற்றத்தையும் நிரந்தரமாக்கட்டும் என வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் வாழ்த்துச் செய்தி...
'மலர்ந்திருக்கின்ற புதுவருடத்தில் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரும்மகிழ்வடைகின்றேன். கடந்த 2012ஆம் வருடத்தில் கடைசிக் காலத்தில் உலக அழிவு பற்றிய வதந்தியினால் ஏற்பட்ட அச்சங்கள் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. 

அதேபோன்று நாட்டின் பல பாகங்களிலும் காலநிலையின் சீர்கேட்டால் தொடர்மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என மக்களை அவலநிலைக்கு இயற்கையின் நிகழ்வுகளும் கொண்டுசென்றன. இத்தகைய நிகழ்வுகள், இவற்றால் ஏற்பட்ட வடுக்கள் கடந்த வருடத்துடன் சென்றவையாக இருக்கட்டும். மலர்கின்ற புத்தாண்டிலிருந்து நாம் புதிய அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைய வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'எமது இலங்கை நாடு இன்று அமைதியும், சமாதானமும் நிறைந்த தேசமாக மாறியுள்ளது. இன்று உள்ள இந்தச் சூழல் மலர்கின்ற இப்புதுவருடத்திலும் நிலைக்கவேண்டும். இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, இன, மத, சாதி ரீதியிலான பாகுபாடுகளைக் இல்லாதொழி;த்து ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும். எம்மிடையே பேதங்கள் யாவும் எமது ஒரே தாய்நாட்டினைக் கட்டிக் காப்பதற்காக களையப்படவேண்டும். அப்போதுதான் எமது நாட்டில் நிரந்தர சுபீட்சமான எதிர்காலம் அமையும். 

எமது நாட்டின் பொருளாதாரத் துறையில் பங்கெடுக்கின்ற விவசாயம், கைத்தொழில் துறைகளின் வளர்ச்சியுடன் வளர்ந்து வரும் தொழிநுட்ப அறிவுடனான கல்வி என்பவற்றிலும் எமது தேசம் முன்னேறுவதுடன், மக்களும் உயர்வாழ்க்கைத்தரத்துடன் வாழவேண்டும் என்று கூறி மீண்டும் எனது வாழ்த்துச் செய்தியினை மலர்ந்திருக்கின்ற இந்த 2013ஆம் ஆண்டில் மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்' என்றார். 

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணனின் வாழ்த்துச் செய்தி...

'பிறந்திருக்கும் 2013ஆம் ஆண்டு சகல சமூகங்களும் அரசியல், சமூக, பொருளாதார வளமும் பலமும் மிக்கதாக வாழ வழிசமைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு சகல இன, மத சமூக மக்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிறந்திருக்கும் புத்தாண்டு பிதற்றும் ஆண்டாக இல்லாமல் மக்கள் வாழ்வு சிறக்கும் ஆண்டாக மலரட்டும். ஆண்டுகள் பிறக்கும் போது புதிய நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் எல்லா மனங்களிலும் துளிர் விடுகின்றன. எனினும், துரதிஷ்டவசமாக பெரும்பாலானவைகளும், பொதுவான கனவுகளும் நிர்மூலமாக்கப்பட்டு விடுகின்றன. 

இதுவரை காலம் முகங்கொடுத்த துரதிஷ்டகரமான சம்பவங்களெல்லாம் மறந்தும், மறைந்தும், மலந்திருக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி, அன்பு, கருணை, துணிவு, தன்னம்பிக்கை, செல்வம், அமைதி நிறைந்த ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எம்மிடம் காணப்படும் பலவீனமான பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் என்பவற்றை தூக்கியெறிந்து ஆரோக்கியமான சிந்தனை செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

மலையக சமூகமும், இச்சமூக பெண்களும் விமோசனமும் வளமும் கொண்டதாக மாற சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளை களைந்து ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை உருவாக்க இப்புத்தாண்டு வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம்' என்று கூறியுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டீ.எம்சுவாமிநாதனின் வாழ்த்துச் செய்தி...

'பிறந்திருக்கும் புத்தாண்டில் இன்னல்கள் நீங்கி அனைவரது வாழ்க்கையிலும்  ஒளி பிரகாசிக்க வேண்டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டீ.எம்சுவாமிநாதன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

'அனைவரது வாழ்க்கையிலும்  ஒளி பிரகாசிக்க வேண்டும். அவ்வாறான ஒரு சூழலை வேண்டி நின்றாலும் பலதரப்பட்ட இன்னல்கள் எம்மைத் தொடர்ந்தும் வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் கைதுசெய்தல், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை பாரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சூழ்நிலையிலேயே புதுவருடத்தை நோக்கி நகர்கின்றோம். 

பல வருடங்களாக தமிழ் மக்கள் இவ்வாறான துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதை நிறுத்தி சுமுக வாழ்க்கையை உருவாக்குவது எம் அனைவரதும் கடமையாகும். தொடர்ந்தும் எம் மக்கள் துன்பங்களை அனுபவிக்கவோ, அடிமை வாழ்க்கையை வாழவோ முடியாது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
 
இச்சூழலை மாற்றுவதற்கு அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு, சகல இன மக்களும் சம உரிமையுடனும் சம அந்தஸ்த்துடனும் வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது எம் அனைவரதும் கடமையாகும். இவ்வாறான ஒரு எதிர்காலத்தை வேண்டியவனாக பிறக்கும் புத்தாண்டு எம் அனைவருக்கும் சிறந்த ஒரு புத்தாண்டாக அமைய வேண்டும்' என்றார்.

கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வாழ்த்துச் செய்தி...

'இயற்கை அனர்த்தங்களுக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில் - வெள்ளமும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களும் முழுவதுமாக வடிந்து விட வேண்டுமென பிராத்திப்போம். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு புதுவருடத்தில் முடிந்தளவு உதவிகளை வழங்குதன் ஊடாக, அவர்களைச் சந்தோசப்படுத்துவோம். அந்த சந்தோசத்தில் நாம் மகிழ்வுறுவோம்' என்று - கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், மு.காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வாழ்க்கை என்பது வெறும் நாட்காட்டிகளின் எண்களால் ஆனதல்ல. ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவர் கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும், ஆயிரமாயிரம் அனுபவங்களை விட்டுச் செல்கிறது. அனுபவங்களை விடவும் சிறந்த ஆசான்கள் உலகில் எவையுமில்லை. அந்த வகையில் கடந்த வருட அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்களை மனதில் வைத்துக் கொண்டு, புதிய வருடத்தினை மகிழ்ச்சி பொங்கும் வகையில் நாம் ஒவ்வொருவரும் வாழ்வதற்கு உறுதி கொள்வோம். 

கருணையும், விட்டுக் கொடுப்பும் கொண்டவர்களாக நாம் மாறும் போது, நம்மிடையே முளைத்துக் கிடக்கும் முரண்பாடுகள் இல்லாமல் போகும். உலகம் அமைதி கொள்ளும். மகிழ்ச்சி என்பது நமது வாழ்வில் தானாகவே வந்து சேரும். 

அமைதியையும், ஆனந்தமான வாழ்க்கையினையும் நாம் வெளியில் தேடிக் கொண்டிருந்தால் கிடைக்காது. அவை நமக்குள் இருந்தே பிறக்க வேண்டும். அமைதியும் ஆனந்தமும் நமக்குள் உருவாகுதவற்கான மனநிலையையும், வாழ்க்கை முறையினையும் நமக்குள் விருத்தி செய்வதற்கான வருடமாகவும் இந்த வருடத்தினை ஆக்கிக் கொள்வோம்.

இயற்கை அனர்த்தங்களுக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில் - வெள்ளமும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களும் முழுவதுமாக வடிந்து விட வேண்டுமென பிராத்திப்போம். மேலும், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு புதுவருடத்தில் முடிந்தளவு உதவிகளை வழங்குதன் ஊடாக, அவர்களைச் சந்தோசப்படுத்துவோம். அந்த சந்தோசத்தில் நாம் மகிழ்வுறுவோம்! ஆங்கிலப் புத்தாண்டினைக் கொண்டாடும் எல்லோருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்!'



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE