
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக உலகெங்கும் கூறித்திரியும் அமைச்சர் ஹக்கீம் தற்போது பொதுபலசேனாவுக்கு எதிராக ஆயுதமேந்தச் சொல்கிறார். ஆனால் வட, கிழக்கில் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்த போது முஸ்லிம்களுக்கு ஆயுதமேந்தச் சொல்லவில்லை என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் வண. கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
"நாட்டில் ஒவ்வொரு நகரங்களிலும் பள்ளிவாசல்களை புதிதாக அமைப்பதற்கு முஸ்லிம்களில் வஹாபிகள் முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவை ஜிஹாத்துக்கான பங்கர்களாக பயன்படுத்தப்படவுள்ளன. நாம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாதை ஊக்குவிக்கும் வஹாபி மற்றும் சலபி பிரிவினரின் செயற்பாடுகளையே எதிர்க்கிறோம்.
முதலில் எமது நாட்டுப்பிரதமரை நாட்டிலிருந்து விரட்டவேண்டும். அல் சபாப் அமைப்புக்கு நிதி உதவி வழங்கும் சவூதி அரேபிய புலனாய்வுத்துறை தலைவரான ஜமான் அல் சஹ்ரானுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தவர் பிரதமரே. ஜமானின் நிதிப்பங்களிப்பிலேயே பீஸ் ரி.வி. இயங்குகின்றது. தற்போது நாட்டில் 10 முஸ்லிம் அமைப்புக்கள் ஜிஹாதை ஊக்குவித்து வருகின்றன. இவர்கள் மூலமே ஜிஹாத்துக்கான நிதி வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.எமது உயிரைக் கொடுத்தேனும் நாட்டை நாம் பாதுகாப்போம்" என மேலும் தெரிவித்தார்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அடுத்துவரும் 7 நாட்களுக்குள் கலாசார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன தமக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள பொதுபலசேனா தவறும் பட்சத்தில் தமது அமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டி ஏற்படுமென எச்சரித்தது.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.