ஹலால் சான்றிதழ் நடைமுறை:
சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சில நிறுவனங்களின் வேண்டுகோள்களைக் கவனத்திற்கொண்டே 2000ம் ஆண்டு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் அறுக்கப்பட்ட கோழிகளை சந்தைப்படுத்தும் இரண்டு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் அவசியப்பட்டபோது அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அணுகினர். அவர்களின் வேண்டுகோளை நன்நோக்கம் கொண்டு பார்த்த ஜம்இய்யா ஹலால் சான்றிதழ் கொடுத்ததோடு அறுவை மேற்பார்வை செய்பவர்களை இரண்டு நிறுவனத்திலும் நியமித்தது.
ஏனெனில் கோழிகளை அறுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அவர்களால் அறுக்கப்படும் ஒவ்வொரு கோழியினதும் ஹலால் தன்மையை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருக்கு குறித்த நிறுவனங்கள் தந்துவந்த பணத்தையே ஊதியமாக கொடுத்து வந்தது. ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து நிறுவனங்களும் எவருடைய வற்புறுத்தலுமின்றி அவர்களது சுய விருப்பின் பேரில் தாமாகவே விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றவையாகும். நாட்டில் அதிகரித்துவரும் ஹலால் சான்றிதழின் அவசியத்தைக் கவனித்தே ஜம்இய்யா ஹலால் பிரிவு என்ற தனியானதொரு பிரிவை உண்டாக்கியது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை மேற்கொள்வது சாதாரண விடயமல்ல. பல்வேறு பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டியிருப்பதால் பல்வேறு செலவினங்கள் உள்ளன. உணவுப் பகுப்பாய்வு நிபுணர்கள், ஹலால் கண்காணிப்பாளர்கள், ஹலால் மேற்பார்வையாளர்கள், கணக்காளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான ஊதியங்கள், கொடுப்பனவுகள், மற்றும் போக்குவரத்து, நிர்வாகம், தொடர்பாடல், நீர், மின்சாரம், காரியாலயம் இயங்கும் கட்டட வாடகை, சான்றிதழ் பெற்றுள்ள தொழிற்சாலைகளைக் கண்காணித்தல் மற்றும் ஆய்வு கூடச் செலவுகள் போன்றவற்றுக்கு மாதமொன்றுக்கு ரூபாய் பதின் மூன்று இலட்சம் தேவைப்படுகின்றது.
மேற்குறித்த செலவுகள் தவிர்ந்த வேறு செலவுகளும் உள்ளன. சர்வதேச ஹலால் மாநாடுகளில் கலந்துகொள்ளல், உலமாக்கல் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளையும் பொதுமக்களுக்கான விழிப்புக் கருத்தரங்குகளையும் நடாத்துதல், ஹலால் சான்றிதழ் வழங்குவதில் சர்வதேச ரீதியில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களோடு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடல் போன்ற விடயங்களுக்காக அவ்வப்போது தேவைப்படும் செலவுகள் நலன்விரும்பிகளிடமிருந்தே பெறப்பட்டு வருகின்றன.
மேலே விவரிக்கப்பட்டது போன்ற ஏராளமான செலவுகள் ஹலால் பிரிவுக்கு இருந்த போதிலும், முற்றிலும் இலாப நோக்கமின்றி இயங்கும் ஒரு அமைப்பாகிய எமது அமைப்பு நுகர்வோருக்கோ, உற்பத்தியாளர்களுக்கோ ஒரு சுமையாக ஆகாத விதத்தில் பின்வருமாறு தமது கட்டணக் கட்டமைப்பை வடிவமைத்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஜம் இய்யாவினால் ஹலால் சான்றிதழுக்காக கோழிப் பண்ணைகளிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் தொகையையும் அப்பண்ணைகளால் மாதாந்தம் சந்தைப்படுத்தப்படும் கோழிகளின் எண்ணிக்கையையும் கவனிக்கும்போது ஒரு கோழியின் ஹலால் சான்றிதழுக்காக ஆறு சதம் மாத்திரமே பெறப்படுகின்றது.
ஜம் இய்யாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையைத் தொடர அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் ஜம்இய்யா மாதாந்தம் அறவிடும் முழுத் தொகை பதினைந்து இலட்சம் ரூபா மாத்திரமேயாகும்.
இதுவரை ஜம்இய்யாவின் ஹலால் அத்தாட்சிப்படுத்தற் பிரிவினால் 204 நிறுவனங்களினூடாக சுமார் 4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து நிர்வனங்களிடமிருந்தும் மாதாந்தம் மொத்தமாக பெறப்படும் தொகை சராசரியாக பதினைந்து இலட்சம் ரூபாயாகும். இதனுடைய அனைத்து கணக்கு முறைகளும் வருடாந்த கணக்காய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவு மாதமொன்றுக்கு ஒரு நிறுவனத்திடமிருந்து 175,000 ரூபா அறவிடுவதாகவும் இதனடிப்படையில் வருடத்துக்கு 700 கோடி ரூபாய் வருமானமீட்டி அல் காயிதா, ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு அனுப்புவதாகவும் ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எமது அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து உண்மை நிலையை கண்டறியுமாறு தேசியப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத் தரப்பு ஆகியவற்றுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.
எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் விடயங்களை பொதுமக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றது.
* ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் வருடமொன்றுக்கு 700 கோடி ரூபாய் அறவிடுவதாகவும் அப் பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளை நிரூபிக்குமாறு வேண்டுகிறோம்.
* ஹலால் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்களைப்பற்றி தெளிவுகளைப்பெற எம்மைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
* இது இரகசியமானதொன்றல்ல எனக் கூறிக்கொள்வதோடு எவரும் முறையாக எமது காரியாலயத்திற்கு வந்து அது சம்பந்தமான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.
* இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களின் மூலம் மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை விளைவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.