அக்கரைப்பற்று பாடசாலையில் இருந்து பொத்துவில் பிரதேசத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள அமைச்சர் அதாவுல்லாவின் உறவினர் உள்ளிட்ட சிலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உதாசீனம் செய்துள்ளனர் என கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இவர்கள் இருந்து வந்த பாடசாலையிலேயே கையொப்பமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை தவிசாளர் ஆரிவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, உறுப்பினர் தவம் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று மீரா நகர் அஷ் - ஷிபாயா வித்தியாலயத்தில் கடமையாற்றும் அமைச்சர் அதாவுல்லாவின் உறவினரான ஜே. சாஹிர் மற்றும் முக்கிய ஆதரவாளரான முனாப் மௌலவி ஆகியோரே இவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தினையும் மீறி - தொடர்ந்தும் தாம் கடமையாற்றிய பாடசாலையில் கையொப்பமிட்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 50 ஆசிரியர்களுக்கு பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இடமாற்றங்களில் எவ்விதமான அரசியல் தலையீடுகளையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை என்று இந்த சபையிலுள்ள அமைச்சர் உதுமாலெப்பை கூறினார்.
இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதொரு பொய்யாகும். மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தமது கடமைகளை பொத்துவிலில் உள்ள புதிய பாடசாலைகளில் கடந்த 15ஆம் திகதிக்கு முன்னதாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், மேற்படி இடமாற்றக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அதாவுல்லாவின் உறவினர் ஜே. சாஹிர் என்பவரும், அமைச்சரின் நெருங்கிய ஆதரவாளரான முனாப் மௌலி என்பவரும் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களை உதாசீனம் செய்து விட்டு, அவர்கள் கடமையாற்றி வந்த அக்கரைப்பற்று மீராநகர் அஷ் - ஷிபாயா வித்தியாலயத்திலேயே தொடர்ந்தும் கையொப்பமிட்டு வருகின்றார்கள்.
மேற்படி அஷ் - ஷிபாயா வித்தியாலயத்தில் கடமை நிறைவேற்று அதிபராக அமைச்சர் அதாவுல்லாவின் மருமகன் முறையான உறவினர் ஒருவரே பணியாற்றுகின்றார்.
இதனால்தான், இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்தும் அதே பாடசாலையில் கையொப்பமிட்டு வருகின்றார்கள். இவ்வாறு இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தினை உதாசீனம் செய்வதற்கு அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் அதிகாரமே பின்னணியில் உள்ளது.
விடயம் இவ்வாறிருக்க, மேற்படி இடமாற்றத்தில் தாங்கள் அரசியல் தலையீடுகள் எவற்றினையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை கூறுவது பொய்யான தகவலாகும்" என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.