......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 9 January 2013

தூக்கப் பிரச்சினையில் எதிர்கால செவ்வாய் பயணத்தில் சிக்கல்


செவ்வாய் கிரக பயணத்திற்கான பரிசோதனையில் விண்வெளி வீரர்கள் நீண்ட தூர பயணத்தின் போது தனிமையை உணர்வதாகவும் சிறு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது

விஞ்ஞானத்திற்கான தேசிய அகடமியில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி நீண்ட தூர விண்வெளி பயணத்தில் வித்தியாசமான உறங்கும் முறையால் வீரர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே வேற்று கிரகம் ஒன்றுக்கான பயணத்திற்கு தற்போதுள்ள அனைத்து விண்வெளி வீரர்களும் பொருத்தமானவர்கள் அல்ல என்று அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இணைந்து மேற்கொண்டு வரும் ஆய்வு மூலமே இந்த உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்போது ரஷ்யாவில் நிலத்திற்கு அடியில் விண்வெளி பயணம் போன்ற போலியான தளம் அமைக்கப்பட்டு அதில் 6 விண்வெளி வீரர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த விண்வெளி வீரர்கள் மேற்படி போலியான விண்கள தளத்தில் கடந்த 2011 நவம்பர் மாதம் தொடக்க வெளித் தொடர்பு எதுவுமின்றி தங்க வைக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது நீண்ட தூரப் பயண விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் உடல், உள தாக்கங்கள் குறித்து அவதானிக்கப்பட்டுள்ளது.
இதில் விண்வெளி வீரர்களின் தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாத்தியஸ் ரெஸ்னர், எதிர்கால செவ்வாய் பயணத்திற்கு வீரர்கள் இரவு பகல் சுழற்சி இன்றி தூங்குவதற்கு ஆற்றல் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மூன்று ரஷ்ய நாட்டவர், இரு ஐரோப்பியர் மற்றும் ஒரு சீன விண்வெளி வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒவ்வொரு வீரரும் தூங்குவதில் வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதில் பல விண்வெளி வீரர்கள் அதிகமாக தூங்கி குறைவான அளவே செயற்பாட்டை காட்டியுள்ளனர். ஆனால் ஒரு விண்வெளி வீரர் தொடர்ச்சியாக 25 மணி நேரம் தூங்கி பின்னர் அடுத்த 12 தினங்களாக தனது சக வீரர்கள் குறித்த நினைவை இழந்துள்ளார்.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அறிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கு தலா 6 மாதங்கள் தேவைப்படுகின்றன.
விண்வெளியில் தொடர்ச்சியாக அதிக காலம் தங்கியிருந்த உலக சாதனை ரஷ்யாவின் வெலரி ரொலியாகொவ் வசம் உள்ளது. அவர் ரஷ்ய விண்வெளி நிலையத்தில் 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தங்கியிருந்தார். அதேபோன்று அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த அமெரிக்கர் என்ற பெருமை முன்னாள் விண்வெளி வீரர் மைக்கல் லோபஸ் வசமுள்ளது.
215 தினங்கள் விண்வெளியில் தங்கியிருந்த இவர் தனது அனுபவம் குறித்து கூறியிருந்தார். அதில் குறித்த காலப் பகுதியில் குறைவான தூக்கம் அதிகமான பணி காரணமாக தாம் தெரியாமலேயே தவறுகளை இழைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது தமக்கு தெரியாமலேயே தூங்கி விடுவதாகவும் விண்வெளி நிலையத்தின் வேறு ஒரு இடத்தில் திடீரென விழித்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும் செவ்வாய் கிரகத்திற்கு முதல் மனிதனை அனுப்புவதற்கு இன்னும் போதிய கால அவகாசம் இருப்பதால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE