கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட மன்னரின் ஆணையில், ஆண்கள் மாத்திரமே இருந்த 150 பேர் கொண்ட சூரா கவுன்ஸிலில் பெண்களுக்கு 20 வீத இடமளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதத் தலைவர்களிடம் ஆலோசித்த மன்னர், இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
சூரா கவுன்ஸில் நாட்டின் கொள்கை மற்றும் சட்டங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் குழுவாகும்.
சூரா கவுன்ஸிலில் பெண்கள் நியமிக்கப்பட்டாலும் கடும்போக்கு சட்டத்தை கடைப்பிடிக்கும் சவூதியில் பொதுவாழ்வில் பெண்கள் சிறு பங்கையே வகிக்கிறார்கள்.
அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளதோடு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவும் தடையுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமையே கிடைக்கவுள்ளது. அத்துடன் பெண்களுக்கு ஆண் பாதுகாவலர் இன்றி வெளியே செல்லவும் தடையுள்ளது.
மன்னர் அப்துல்லா சூரா கவுன்ஸிலுக்கு பெண்களை நியமிப்பது குறித்து கடந்த 2011ம் ஆண்டில் அறிவித்திருந்தார். அத்துடன் பெண்கள் எதிர்வரும் 2015 மாநகர சபை தேர்தலில் நிற்கவும் வாக்களிக்கவும் உரிமை வழங்கப்படும் என மன்னர் அப்போது அறிவித்திருந்தார்.
பெண்கள் ஷரிஆ சட்டத்தின்படி சூரா கவுன்ஸிலில் பங்கேற்க மதத் தலைவர்கள் ஆலோசனை வழங்கியதற்கு அமையவே அவர்கள் சூரா கவுன்ஸிலுக்கு நியமிக்கப்பட்டதாக மன்னர் அறிவித்தார். “பெண்கள் அவர்களுடைய பணி மற்றும் பொறுப்புகளை செயற்படுத்துவதற்கான முழு உரிமையும் வழங்கப்படும்” என மன்னர் அறிவித்துள்ளார்.
இதன்படி சூரா கவுன்ஸில் கட்டடத்தில் பெண்களுக்கென தனி இடம் அமைக்கப்படவுள்ளதோடு அவர்களுக்கான தனியான நுழைவாயில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சூரா கவுன்ஸிலில் அந்நாட்டின் இரு இளவரசிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலஞ்சென்ற பைஸல் மன்னரின் மகள் மற்றும் காலஞ்சென்ற காலித் மன்னரின் மகள் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஷியா முஸ்லிம் பிரிவினர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.