பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வலுவற்றதாக்கியுள்ள நிலையில் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது அரசியலமைப்பை மீறுகின்ற செயற்பாடாகும். என்று சுட்டிக்காட்டியுள்ள எதிரணியினர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கடைகளை அடைத்துவிட்டு கலந்துக்கொள்ளுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன். வேலைக்கு செல்வோர் அன்றைய தினம் வேலைக்கு செல்லாது அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக தம்முடன் கைக்கோர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட எதிரணியைச்சேர்ந்த உறுப்பினர்களே மேற்கண்டவாறு பகிரங்க அழைப்பு விடுத்தனர்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எதிரணியைச்சேர்ந்த உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டமாகும். அந்த சட்டத்தை வியாக்கியானம் செய்யும் முழு உரிமையும் உயர் நீதிமன்றத்திற்கே இருக்கின்றது. அதன்பிரகாரம் குற்றப்பிரேரணை தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அதன் அறிக்கை அரசியலமைப்பிற்கு முரணானதாகும் என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.
அந்த வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளாமல், வலுவற்றதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றம் தயாராகிகொண்டிருக்கின்றது. அதனை நாட்டின் பிரஜைகள் என்றவகையில் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
அரசியலமைப்பை மீறுகின்ற அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்து 10 ஆம் திகதி வியாழக்கிழமை உயர்நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுவதுடன் நாடாளுமன்றம் வரையிலும் எதிர்ப்பு பேரணியும் நடத்தப்படும்.
இவற்றில் சகலரும் கலந்துக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டுமாறும், வர்த்தகர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் பங்குபற்றுமாறு எதிரணி அழைப்பு விடுத்துள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.