யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான சம்பவத்தைக் கண்டித்து யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
வைத்தியர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை தோன்றியிருக்கும் சந்தர்ப்பத் தில், இச்சம்பவத்தைக் கண்டித்து 48 மணித்தியாலங்கள் பணிப் புறக்கணிப் புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் பிராந்தியத் தலைவர் டொக்டர் நிமலன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை, சாவகச்சேரி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 48 மணித்தியாலங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை தொடரும். இன்று சனிக்கிழமை வடமாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன் நேற்றுமுன்தினம் திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இரவு 9.15 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இடது கையில் நரம்பு துண்டிக்கப்பட்டிருப்பதுடன், இதனால் அவருக்கு இடதுகையில் உணர்ச்சி அற்றுப் போயிருப்பதாக டொக்டர் நிமலன் குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், வடபிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார். இதற்கமைய வைத்தியருக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் டொக்டர் நிமலன் குறிப்பிட்டார்.
எனினும், அவசர சிகிச்சை வழமை போன்று இடம்பெறும் என்றும், ஏனைய சேவைகளில் வைத்தியர்கள் ஈடுபடமாட்டார்கள் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் பிராந்தியத் தலைவர் டொக்டர் நிமலன் மேலும் தெரிவித்தார்.
இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாதியரும் ஒத்துழைப்பு நல்குவதாகவும் அவர் கூறினார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.