ஒரு சாதாரண நீதிமன்றத்தின் நீதிபதியொருவர் குற்றமிழைத்துவிட்டார் என்ற சந்தேகம் எழுந்துவிட்டாலேயே அது அந்நாட்டின் நீதித்துறைக்குப் பாரிய அவமானம், தலைகுனிவானதொரு நிகழ்வு என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
ஆனால் இன்று எமது நாட்டின் பிரதம நீதியரசர் குற்றமிழைத்துவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டமையானது நீதித் துறைக்கு மட்டுமல்லாது எமது நாட்டிற்கும் எத்தகையதொரு பாரிய தலைகுனிவான செயல் என்பதை இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனாலும் இன்று நன்கு உணரக் கூடியதாக உள்ளது. இந்நாட்டின் நீதித்துறை மீது விழுந்துள்ள இப்பாரிய அவமானத்தை இனி வரலாற்றிலிருந்து அழிக்கவே முடியாது எனுமளவிற்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பாரிய பல குற்றங்களை இழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சைக்கிள் திருட்டு, ஐயாயிரம் ரூபாவை வாங்கிவிட்டு திரும்பக் கொடுக்காது ஏமாற்றுவது, வீட்டு எல்லைக் காணியில் ஓர் இஞ்சி நிலத்தை அபகரித்து வேலி அடைப்பது, பாடசாலை அதிபர் பதவியிலிருந்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, பிக்பொக்கட் அடிப்பது போன்ற சிறு குற்றங்களை இழைப்போரை பொலிஸார் கைது செய்து நீதிபதி முன்னிலையில் நிறுத்தினால் அவரை நீதிபதி விசாரித்து விட்டு என்ன தண்டனை கொடுக்கிறாரோ அதனை குற்றமிழைத்தவர் ஏற்றே ஆக வேண்டும். இது மரபு. இதனை மாற்றியமைக்க முடியாது. எதிர்த்து வாதாடவும் முடியாது. அதுதான் நீதித்துறை. அந்தளவிற்கு நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தவறிழைத் தால் தண்டனை கிடைக்கும் எனும் பயமும், சட்டங்கள் இருப்பதால் தவறிழைப்போருக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கலாம் எனும் நம்பிக்கையும் நாட்டு மக்கள் மனங்களில் உள்ளது. இந்தப் பயமும் நம்பிக்கையையும் என்று இல்லாமல் போகின்றதோ அதன் பின்னர் நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி நீதியைக் காப்பாற்றுவது என்பது சிரமமாகவே இருக்கும்.
பொதுமக்கள் நீதிமன்றத்தைத் தாம் சார்ந்த மதங்களின் வணக்கஸ் தலமாகவும் நீதிபதிகளைத் தெய்வமுமாகவே நோக்குகிறார்கள். அந்த நீதிபதியின் தீர்ப்பு வார்த்தையே தெய்வம் வழங்கும் கட்டளையாக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களை வைத்துக்கொண்டு நீதித்துறையினர் இன்றுவரை சாமர்த்தியமாகச் செயற்பட்டுவருகின்றனர். கடந்த ஆட்சி யாளர்களால் பாராளுமன்றத்தில் அவ்வப்போது சட்டங்களில் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டபோதும் திறமையான நீதித்துறை அதனைச் சரியாகவே கையாண்டு வந்தது. அந்தளவிற்கு நீதித்துறைக்குத் தலைமை தாங்கிய பிரதம நீதியரசர்கள் திறமையும், கடமையுணர்வும் மிக்கவர்களா கக் காணப்பட்டனர்.
ஆனால், இன்றுள்ள பிரச்சினையோ நாட்டு மக்களுக்கும், நீதித்துறைக் கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்க வேண்டிய தலைமை நீதியரசர் தன்னிச்சையாக செயற்பட்டது மட்டுமல்லாது அவர் தனது உயர்ந்த பதவியை தனதும், தனது குடும்ப அங்கத்தவர் ஒருவரதும் தேவைக்காகத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதாக அமைந்துள்ளது. இவர் மீது பதினான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவை பாராளுமன்ற சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு மூலமாக விசாரிக்கப்பட்ட தில் இப்போது அவர் குற்றமிழைத்திருப்பது உறுதியாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விசாரிக்கப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களில் மட்டும் மூன்றில் இவர் குற்றவாளி என்பது உறுதியாகிவிட்டதாகத் தெரிவுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது இவ்விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கிடையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா அவ்விசாரணைகளிலிருந்து இடைநடுவில் விலகிக் கொண்டமையானது பலருக்கும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இவர் அவ்வாறு செயற்பட்டமையானது பாராளுமன்ற தெரிவுக்குழுவையும், அதனை நியமித்த சபாநாயகரையும் அவமானப்படுத்துவதாகவே அமைந் துள்ளது. பிரதம நீதியரசரான இவர் தன்னால் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வழக்கு விசாரணையிலிருந்து இவ்வாறு ஒருவர் தனக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் விலகிக் கொண்டால் விலகிய நபரைச் சும்மா விட்டுவிடுவாரா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து இனித் தன்னால் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதனால்தான் இவர் பொய்க் காரணங்கள் சிலவற்றைக் கூறி வெளியேறினார் என்பதாகவே இவரது வெளியேற்றம் நோக்கப்படுகின்றது.
உண்மையில் இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்குத் துணிவாக முகங்கொடுத்திருப்பாரேயானால் அவரைப் பாராட்டலாம். அவர் அப்பதவி வகிக்கப் பொருத்தமானவர் என்றுகூடக் கூறலாம். இவர் இத்தகைய குற்றங்களைச் செய்திருப்பாரோ என்று கூடச் சந்தேகித்தி ருக்கலாம். ஆனால், இவரது செயற்பாடுகள் யாவுமே இவர் ஒரு குற்றவாளி என்பதை உறுதி செய்பவனவாகவே அமைந்துள்ளன. தனது பக்க நியாயங்களை முன்வைக்க முனைவதிலும் பார்க்க தனக்குச் சார்பான நீதித்துறையிலுள்ள சிலரை வைத்து கருத்துக்களைக் கூறிக் கொண்டும், வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கிறார். இது நான்கு பேரை அடியாளாக வைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஊர்ச்சண்டியன் செய்யும் இரண்டாந்தர வேலையாகவே தென்படுகிறது. இதுபோன்ற செயற்பாடுகளால் தனக்கு நீதி கிடைத்துவிடும் என்று அவர் நினைத்தால் அதுபோன்றதொரு முட்டாள்தனம் வேறெதுவுமாக இருக்க முடியாது.
ஒரு தலைமை நீதிபதியாக இருக்கும் இவரால் தன்மீதான குற்றச்சாட்டு களுக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பது பெரும் விந்தையாகவே உள்ளது. இவருக்கெதிராக சாட்சியமளித்துள்ள உயரதிகாரிகளின் சாட்சி யங்களோ இவரைக் குற்றவாளியென இனம்காணப் போதுமானவையாக உள்ளன. இருந்தும் அரசாங்கம் அவருக்குப் போதுமான கால அவகாசம் வழங்கி அவரது பக்க நியாயங்களைக் கண்டறிவதில் கண்ணும் கருத்துமாகவே இருந்தது. அச்சந்தர்ப்பத்தை அவரே தேவையில்லை என்பது போலத் தட்டிக் கழித்துவிட்டார். இது அவரது மேதாவித்தனத் தைக் காட்டுவதாகப் பலர் கருத்துத் தெரிவித்தாலும் இதுவும் ஒருவகையில் அவர் மீண்டுமொரு தடவை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவே அமைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடிக்கடி தெரிவித்து வருவது போன்று சட்டம் என்பது சகலருக்கும் சமமானது. உயர்பதவி வகிப்பவர், சமூக அந்தஸ்த்து உள்ளவர், கோடீஸ்வரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதத்திற்கு சட்டத்தில் ஒருபோதும் இடமில்லை. அத்துடன், அரசியல் தலையீட்டிற்கும் இடமில்லை என்ற கருத்துக்களையும் நாம் நோக்கியே ஆக வேண்டும். குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பிரதம நீதியரசரான ஷிராணி ஒரு சாதாரண பிரஜையாகவே விசாரிக்கப்படுகிறார். இருந்தும் அவரது பதவி நிலையால் அவருக்கு வழங்கப்படும் கெளரவத் தில் குறை எதுவும் அரசாங்கம் வைக்கவில்லை. அப்படியிருக்கையில் இவர் வெளிநடப்புச் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அன்று நினைத்திருந்தால் சாதாரண பிரஜைகள் சட்டத்தின் கீழ் இவரை தெரிவுக்குழுவை அவமானப்படுத்தியமைக்காக கைது செய்திருக்கலாம். அல்லது தடுத்துவைத்து விசாரணை செய்து அனுப்பியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் இவரைப் போன்று முன் யோசனை கொள்ளாது சிறுபிள்ளைத் தனமாகச் செயற்படவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தமக்கு நீதி வழங்கும் நீதித்துறைக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டதும் அவற்றை வாசித்த பொதுமக்கள் அன்றே நீதித்துறை மீது நம்பிக்கை இழந்திருப்பர். ஆனாலும், அரசாங்கம் நீதிக்கு முன் சகலரும் சமம் என்ற கருத்திற்கமைய இவர் மீது விசாரணைகளை வெளிப்படையாகவே நடத்தி வருவதனாலேயே நீதி இன்னமும் சாகவில்லை என்ற நம்பிக்கையுடன் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர்
உண்மையில் தலைமை நீதியரசரான தன்மீது இத்தகைய குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்பட்டதுமே இவர் தனது பதவியிலிருந்து விலகியிருக்கவேண் டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நீதி வழியில் நின்று போராடியிருக்க வேண்டும். அதனையும் அவர் செய்யாது விசாரணைகளுக்கு முகங்கொடுக்காது இடைநடுவில் முறித்துக்கொண்டார்.
இப்போது அரசியல் கட்சிகள் போன்று ஆர்ப்பாட்டம், பேரணி என்று சட்டத்தரணிகள் சிலரையும், அவர்களுக்குச் சார்பாக சில அடியாட்களை யும் வீதியில் இறக்கியுள்ளார். கேட்டால் அது அவர்கள் தாமாகவே நீதியைக் காப்பாற்றுவதற்காகச் செய்கிறார்கள் எனக் கூறுவார். இத்தனை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை உறுதிசெய்யப்பட்ட பின்னர் பாராளுமன்ற விவாதத்தின் பின்னர் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் மக்களைத் திசை திருப்ப முனைந்து வருகின்றார். இதற்கு அரசாங்கத்தை வழமையாக எதிர்த்துவரும் கட்சிகள் சில ஆதரவும் வழங்கி வருகின்றன. இது விசாரணைகளைத் திசை திருப்பும் ஒரு தந்திரம்.
இன்று தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்து நம்பிக்கையுடன் நீதிமன்றம் செல்லும் ஒரு சாதாரண பிரஜை, பிரதம நீதியரசர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்த்ததும் தனக்கு நீதி கிடைக்குமோ எனச் சந்தேகம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரே இவ்வாறு குற்றமிழைத்து குற்றவாளிக் கூண்டில் நிற்கையில் இவரிடமிருந்து தனக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என அந்தச் சாதாரண பிரஜை எண்ணுவதில் தவறில்லை.
பிரதம நீதியரசர் உண்மையிலேயே நீதித்துறைக்கு தலைவணங்குப வராக இருந்தால் அவர் உடனடியாகவே பதவி விலகி தான் கற்ற சட்டம் மூலமாக தன்மீதான குற்றங்களைக் களையவேண்டும் அல்லது தான் செய்த குற்றங்களுக்காகத் தனக்கு வழங்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அவர் தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கும், தான் கற்ற சட்டக் கல்விக்கும் வழங்கும் மரியாதையாகும். ஷிராணி பண்டாரநாயக்கா இதனைச் செய்வாரா?
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.