......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

இன்பம் நிறைந்த வாழ்விற்கு கைகொடுக்கும் தியானம்


உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் தியானம் செய்துகொண்டே இருக்கின்றார்கள். ஒருவரின் எண்ணத்தின்படிதான் அவரது வாழ்க்கை அமையும். ஒருவர் தீயதை நினைப்பாராயின் அவர் தீயவராகவே ஆகிவிடுகிறார்.
நல்லனவற்றை நினைப்பாராயின் அவரது வாழ்க்கை நல்லதாகவே அமையும். இந்த உண்மையை யாரும் அறிந்து கொள்ளவுமில்லை. தெரிந்துகொள்ளவுமில்லை.
இன்று நாம் அனைவரும் இந்தக் கலியுகத்தில் அழியும் அனைத்து பொருட்களையும் எண்ணி எண்ணி அழிந்து செல்கிறோம். ஆனால், அழியாத உண்மைப் பொருளொன்று எமது உள்ளே உள்ளது. அப் பொருளை நாம் எண்ணிப்பார்ப்பது இல்லை. எம்முள்ளே இருக்கின்ற அழியாத உண்மைப் பொருளை எண்ணி அப்பொருளை அடைந்தவர்கள்தான் யோகிகள், ஞானிகள், சித்தர்கள்.
தியானம் என்பது “தீயதை தானம் செய்தல்” என்று விளக்கம் கொள்ளலாம். இன்று நாம் கண்களை மூடிக்கொண்டு இருத்தலையே தியானம் என்கின்றோம். ஆனால் தியானம் என்பது அதுவல்ல. எம்முள் இருக்கின்ற தீய குணங்களை அல்லது தீய செயல்களை அழித்தல் அல்லது இல்லாமல் செய்தல் வேண்டும். அதனால்தான் தியானம் என்பதை தீயதை தானம் செய்தல் என்று பொருள் கூறப்படுகிறது. “தீயது” என்பது எம்முள் உள்ள தீய குணங்களைக் குறிக்கின்றது.
அதாவது பொய், களவு, காமம், கோபம், குரோதம், புறங்கூறல், வன்சொல் பேசுதல் போன்ற தீய செயல்களை குறிக்கின்றது. இத் தீய செயல்களை இல்லாமல் செய்யும்போது அல்லது அழிக்கும்போது மனமானது நல்ல குணங்களான அன்பு, கருணை, காருண்ணியம், பிறருக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்ற நல்ல எண்ணங்களை மனதில் தோன்றி மனமானது சக்தி பெறும். இவ்வாறு சக்திபெற்ற மனமானது சஞ்சலமற்றதாக இருக்கும். மனமானது சஞ்சலமற்றதாக இருக்கும்போது தியானம் ஏற்படும்.
தியானமானது பல வழிகளில் ஒருவருக்கு ஏற்படலாம். அதாவது, பல்வேறு வழிகளின் மூலம் மனச்சஞ்சலங்கள் நீங்கப் பெற்று மனப்பலம் பெற்று தியானமானது ஏற்படலாம். ஒருவரது மனம் சஞ்சலமல்லாது இருப்பதற்காகவேதான் பூசைகள், கிரியைகள் அபிஷேகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒருவர் தன்னலமற்ற சேவையை மக்களுக்கு ஆற்றும்போதும் மனச்சஞ்சலம் நீங்கப்பெற்று மனப்பலம் பெற்று தியானம் ஏற்படலாம். அதாவது, தானம் செய்தல் தருமம் செய்தல், பிற உயிரை நேசித்தல், பிறருக்கு உதவுதல், போன்ற செயல்களை எவ்வித பிரதிபலனும் பாராமல் செய்யும்போது மனமானது அவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பலம் பொருந்திய மனதை எவ்வித எண்ணங்களும் தாக்காது. அவ்வேளையில் மனமானது சக்தி பொருந்தியதாக சஞ்சலமற்றதாக இருக்கும். இவ்வேளையிலும் ஒருவருக்கு தியானம் ஏற்படும்.
ஒருவர் தனது கடமையை சரிவரச் செய்யும்போதும் தியானம் ஏற்படுகிறது. உதாரணமாக பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர் குறிப்பிட்ட நேரத்திற்கு பாடசாலைக்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளை சரியாக மேற்கொள்ளும்போது மனம் பலம் பெற்றுவிடும். இவ்வாறு நாளாந்தம் தமது கடமையை சரியாக மேற்கொண்டுவரும்போது மனசஞ்சலம் நீங்கி மனம் அமைதிபெற்று தியானம் ஏற்படும்.
ஒருவர் ஒரே இடத்தில் அல்லது பிரதேசத்தில் தொடர்ந்து இருப்பதால் அவரது மனதில் பல எண்ண அலைகள் தாக்கி சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வேளையில், பசுமையான காட்சிகள், பூஞ்சோலைகள், சுற்றுலாக்கள், கடற்கரைகள், தோட்டங்கள் என்பவற்றை அடிக்கடி சென்று பார்வையிடும்போது மனதை அலைய வைக்கின்ற எண்ணங்கள் அழிக்கப்பட்டு மனச்சஞ்சலங்கள் நீங்கப்பெற்று தியானம் ஏற்படுகின்றது.
சக்திவாய்ந்த மந்திரங்களை அடிக்கடி ஜெபம் பண்ணும்போது அதிர்வலைகள் மனதை சஞ்சலப்படுத்துகின்ற எண்ணங்களைத் தாக்கி அழிக்கின்றது. இதனால் மனம் சக்தி பெற்று தியானம் ஏற்படும். தியான நிலையானது ஜீவாத்மா, பரமாத்மாவோடு இரண்டறக் கலக்கின்ற நிலையாகும்.
அந்த ஆனந்தமயமான நிலையில் இருந்து மீண்டுவர மனமானது இடங்கொடுக்காது. இந்த பேரின்பமயமான நிலையை அனுபவித்து இற்றைக்கு எத்தனையோ யோகிகள், சித்தர்கள், ஞானிகள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
தியானத்தை தகுந்த ஒரு குரு மூலமே பெற்றுக் கொள்ளமுடியும். ஏனெனில் தியானம் பற்றியும், தியான நிலை பற்றியும் அறிந்தவர்தான் குரு. தியானம் செய்யும்போது எமது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறிந்து அவற்றிற்கான விளக்கங்களையும், ஒருவரின் உடல் நிலைக்கு ஏற்ப தியானத்தையும் வழங்குபவர்தான் குரு.
நாம் பல பிறவிகள் பிறந்து இவ் அரிய மனிதப் பிறவியை எடுத்துள்ளோம். இவ் மனிதப்பிறவியில் மட்டும்தான் இறைவனை அடையமுடியும். வேறு எந்தப் பிறவியிலும் இறைவனை அடைய முடியாது. மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கம் நாம் செய்த பாவவினைகளில் இருந்து விடுபட்டு இறைவனை அடைவதற்கே. அதற்காகவேதான் மனிதனுக்கு பகுத்தறிவை இறைவன் கொடுத்துள்ளான். நல்லது எது? கெட்டது எது? ஒருவருக்கு துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு என்ன வழி? போன்ற விடயங்களை பகுத்து ஆராய்ந்து நல்லனவற்றைச் செய்து தீயனவற்றை விலக்க இப்பூவுலகில் இன்புற்று வாழ்ந்து மனித உடலில் நடமாடும் இறைவனாக வாழ்வதற்காகவேதான் மனித சரீரம் எடுத்துள்ளோம்.
எம்மையெல்லாம் இறைவனை அடையவிடாமல் தடுப்பது நாம் பல பிறவிகளில் செய்த வினைகள்தான். இப்பாவ வினைகள்தான் மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் எண்ண ஓட்டங்களாக எம்மையெல்லாம் அலைக்களிக்கின்றது.
சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜெபம் பண்ணும்போது மந்திரத்தின் அதிர்வலைகள் சித்தத்தில் பதிந்துள்ள எண்ணங்களைத் தாக்குகின்றது. அல்லது இல்லாமல் செய்கின்றது. உதாரணமாக ஒரு வயலில் விதைக்க வேண்டுமாயின் அவ்வயலை உழவு இயந்திரத்தின் மூலம் பலமுறை உழுது பண்படுத்துகின்றோம். அவ்வாறுதான் மனதைப் பண்படுத்துவதற்கு மந்திரம் ஒரு சாதனமாகப் பயன்ப டுத்தப்படுகின்றது.
இவ்வாறு மக்களை பாவங்களில், துன்பங்களில் இருந்து விடுபடச் செய்து அனைத்து கருமங்களையும் செய்து கொண்டு இந்த உலகில் இன்பமாக வாழ்வதற்காகவேதான் பல இடங்களில் ஆச்சிரமங்கைள அமைத்து அங்கு ஜெப தியானங்களில் மக்களை ஈடுபடுத்தி வருகின்றார்கள். இவ்வாறான ஆச்சிரமங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வரும் போது நாம் ஜென்மாதி ஜென்மம் செய்த பாவவினைகள் எமது மனதில் இருந்து அழிக்கப்பட்டு மனமானது பரிசுத்தமானதாக மாறுகின்றது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE