திட்டமிட்டபடி சர்வஜன வாக்கெடுப்பு: எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் வீதியில்
ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை பெறும் ஆணையை ரத்துச் செய்யவும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் ஜனாதிபதியின் முடிவை ஒத்திவைக்கவும் கோரிவருகின்றனர். இந்நிலையில் அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் ஜனாதிபதியின் முடிவை மாற்றாததால் எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் புதிய தீர்மானத்தை எற்கனவே நிராகரித்துள்ளனர்.
ஜனாதிபதி சர்வாதிகாரி போல் செயற்படுவதாக எதிர்ப்பாளர்கள் கூறிவரும் நிலை தாம் புரட்சியை பாதுகாக்கவே செயற்படுவதாக ஜனாதிபதி முர்சி வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் எதிர்ப்பாளர்களின் பிரதான கூட்டணியான தேசிய மீட்பு முன்னணியின் கட்சியான எகிப்து சுதந்திர கட்சியின் அறிக்கையில், “ஜனாதிபதியின் புதிய அறிவிப்பில் சர்வஜன வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு குறித்து எதிர்ப்பாளர்கள் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி ஒன்று கூடி தனது முடிவை வெளியிடவுள்ளது.
கடந்த நவம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி முர்சி வெளியிட்ட ஆணையில் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு நீதித்துறை உட்பட எவருக்கும் சவால் விடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் கெய்ரோவில் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி முர்சி அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களை கடந்த சனிக்கிழமை சந்தித்து தற்போதை அரசியல் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து “ஜனாதிபதியின் அரசியல் சாசன அறிவிப்பு இந்த நொடி முதல் ரத்தாகிறது” என அறிவிக்கப்பட்டது. எனினும் புதிய அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டவாறு நடைபெறும். ஏனெனில் அதனை ரத்துச் செய்யும் அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்கு இல்லை என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதியுடனான இந்த பேச்சுவார்த்தையை பிரதான எதிர்த்தரப்பு தலைவர்கள் புறக்கணித்தனர். மாறாக ஜனாதிபதிக்கு எதிராக மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தனது அரசியல் சாசன அறிவிப்பை ரத்துச் செய்து ஜனாதிபதி எதிர்த்தரப்பினருடன் உடன்பாட்டை எட்ட முதல் முயற்சியை எடுத்துள்ள போதும் அது தற்போதைய வன்முறையை தவிர்க்க போதுமானதாக இல்லை என அவதானிகள் தெரிவித்துள்ளனர். கெய்ரோவிலிருக்கு ஜனாதிபதி மாளிகையைச் சுற்று பீரங்கள், முற்கம்பி வேலிகள் மற்றும் கொங்கிரீட் கற்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதை கொண்டு ஜனாதிபதி தற்போது பாரிய அழுத்தத்தைச் சந்தித்து வருவது தெளிவாவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் புதிய முடிவு குறித்து மற்றுமொரு எதிர்த்தரப்பான ‘ஏப்ரல் 6 இளைஞர் முன்னணி’ கூறியிருப்பதாவது, “இந்த முடிவு மக்களை ஏமாற்றும் அரசியல் காரணம் கொண்டது” என விமர்சித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தனது முடிவை ரத்துச் செய்த பின்னரும் ஒரு சிலர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அமர் அல் லிபி ராய்ட்டருக்கு கூறியதாவது” மக்கள் கொல்லப்படும் வரை தனது முடிவை அல்லது அரசியல் சாசன அறிவிப்பை மாற்றவில்லை. எனவே அவர் வெளியேறும் வரை நாம் வெளியேற மாட்டோம்” என்றார். எனினும் மற்றுமொருவர் ஏ.பி. செய்திச் சேவைக்கு கூறும் போது “தற்போதாவது இரத்தம் கொட்டப்படுவது நிறுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். நாம் ஒரு விடயத்திற்காக கோரிக்கை விடுத்தோம். அது தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிறது” என்றார். மறுபுறத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவானோரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊடகங்கள் ஜனாதிபதிக்கு எதிராக பக்கச் சார்பாக செயற்படுவதாக அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஜனாதிபதியின் அரசியல் சாசன அறிவிப்பு ரத்துச் செய்யப்பட்ட போதும் அதன் மூலம் ஜனாதிபதி எடுத்த சில தீர்மானங்கள் தற்போதும் அமுலில் உள்ளது. குறிப்பாக சட்டமா அதிபரை நீக்கியது ரத்துச் செய்யப்படவில்லை என்பதோடு முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரச அதிகாரிகள் மீதான மீள் விசாரணை தொடர்ந்து அமுலில் உள்ளது.
இதற்கிடையே, எகிப்து கட்டுப்பாட்டை இழந்து செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் தற்போதைய நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் எகிப்து இராணுவம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. “பேச்சுவார்த்தையை தவிர்த்து இருண்ட குகைக்குள் நாட்டை இட்டுச் செல்லும் வழிவகைகளை அனுமதிக்க முடியாது” என இராணுவம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எகிப்தின் தற்போதைய நெருக்கடி குறித்து இராணுவம் வெளியிட்ட முதலாவது அறிவிப்பு இதுவாகும். எகிப்து நீதித்துறை முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆதரவு போக்கில் செயற்படுவதாக ஜனாதிபதி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனினும் எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இதில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்பு குறித்தும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த அரசியல் அமைப்பு இஸ்லாமிய வாதிகளை பெரும்பான்மையாக கொண்ட அரசியல் அமைப்பு குழுவாலேயே பூர்த்தி செய்யப்பட்டது.
எனவே மிதவாதிகள், மதச்சார்பற்றோர், முபாரக் ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை கொண்ட எதிர்ப்பாளர்கள், இந்த அரசியல் அமைப்பு முழு எகிப்து சமூகத்தையும் பிரதிநிதித்துவ ப்படுத்த வில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இதனையொட்டி எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகம் உட்பட பல காரியாலயங் களுக்கு தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.