மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் மிகவும் மோசமான நிலையில் புதுக்குடியிருப்பு கிராம அதிகாரி பிரிவில் வீதிகள் உள்ளன. இந்நிலையில் இவ்வீதிகளை வாழைச்சேனை பிரதேச செயலகம் புனரமைக்கும் முகமாக ஐந்து வீதிகளை தேசத்தின் மகுடம் என்ற திட்டத்தில் தெரிவு செய்து அனுமதி பெற்றிருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
இக்கிராமமானது தனது கிராமம் என்ற ரீதியில் அனுமதிக்கப்பட்ட வீதிகளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்குழு தவிசாளர் என்ற ரீதியில் ஐந்து வீதிகளையும்; வெட்டி தமது ஊரான பேத்தாழைக்கு மாற்றியுள்ளார்.
இச்செயற்பாடு புதுக்குடியிருப்பு கிராம மக்களை அரசாங்கம் ஒதுக்கி வைக்கும் செயற்பாடாக உள்ளது. இவ்விடயமாக தான் தேசத்தின் மகுடம் திட்டப் பொறுப்பாளரும், தொலைத் தொடர்புகள் தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், இதன் பிரதிகளை மகளீர் விவகார பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தவிசாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் அனுப்பியுள்ள மகஜரில் இடம்பெற்றுள்ளதாவது:
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம அதிகாரி பிரிவில் உள்ள வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பிரதேச செயலகத்தால் தீர்மானிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட தேசத்தின் மகுடம் திட்டத்தில் அமையும் ஐந்து வீதிகள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான கௌரவ.திரு.சி.சந்திரகாந்தன் அவர்களால் தமது ஊரான பேத்தாழை கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
அவ் மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இந்நடவடிக்கையானது புதுக்குடியிருப்பு கிராம மக்களை வேதனைப்படுத்தியுள்ளது. உண்மையிலே தேசத்தின் மகுடம் என்னும் அபிவிருத்திச் செயற்பாடு அரசாங்க அரசியல் வாதிகளின் கிராமங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்வதா? அல்லது அவசிய தேவை இருக்கும் கிராமங்களை அபிவிருத்தி செய்வதா? என அறிய விரும்புகின்றேன்.
இந்தவகையில் புதுக்குடியிருப்பு கிராம வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள வேளையில் இக்கிராமத்தின் தேவை உணர்ந்து பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வீதிகளை அரசியல் விரோதம் கருதி தமது கிராமத்துக்கு மாற்றுவது நியாயமா? இந்நாட்டின் அரசாங்கம் புதுக்குடியிருப்பு கிராமத்தை மாத்திரம் ஒதுக்கின்றதா? புதுக்குடியிருப்பு கிராம மக்கள் இந்நாட்டின் மக்கள் இல்லையா? இவ்வரசாங்கத்தின் கீழ் பரிபாலிக்கப்படுபவர்கள் இல்லையா? என கேள்வியெழுப்பியதுடன்.
இவ்விடயமாக தாங்கள் தேசத்தின் மகுடம் திட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில் நியாயமான விசாரணையை மேற்கொண்டு இம்மாவட்டத்தில் ஒரு கிராமம் புதுக்குடியிருப்பு என்ற வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் அரசியல் பழிவாங்கல் நிலையை நீக்கி புதுக்குடியிருப்பு கிராம வீதிகள் ஐந்தையும் புனரமைப்பு செய்ய உடன் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். தங்களின் அன்பான பதிலை எதிர்பார்க்கின்றேன் என அவர் மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.