......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

பாழடைந்த மலசலகூடத்துக்குள் காணாமல் போகிறதா சிறுவர்களின் எதிர்காலம்?


“போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லை தினமும் அதிகரித்துச் செல்கிறது. பாழடைந்து காணப்படும் இந்த மலசலகூடத் தொகுதிக்குள் சிலர் சிறுவர்களை அழைத்து வருவதும் உண்டு. அவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கையும் மெய்யுமாக எம்மிடம் சிக்கியிருக்கிறார்கள்.
நாம் அடித்து விரட்டுவோம்” -
கொழும்பு 12 பீர்சாய்பு வீதியில் உள்ள பொது மலசலகூடத் தொகுதியின் அவல நிலை குறித்து அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் இளைஞர் மன்றத் தலைவர் எம். மபாஸ் கூறிய கருத்துக்கள் இவை.

சன நடமாட்டம் நிறைந்ததாய் மக்கள் அங்குமிங்கும் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்க சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது பீர்சாய்பு வீதி.
வீதிக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் பொது மலசலகூடத் தொகுதி கவனிப்பாரற்றுக் காணப்படும் அதேவேளை துர்நாற்றம் வீசுவதாயும் துர்நடத்தையில் ஈடுபடுவோருக்குத் துணைபோவதாயும் இருக்கிறது.

இந்த மலசலக்கூடம் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக தனித்தனியான பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நன்மை கருதி முறையான பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டபோதிலும் இப்போது நடக்கும் சம்பவங்களைக் கேட்டால் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.
மபாஸ் பகிர்ந்துகொண்ட மேலும் பல தகவல்கள் இவை,


“ஒவ்வொரு நாளும் குடுகாரங்கட ஆக்கிரமிப்பு தான். எங்க இருந்து வாறாங்கனு தெரியல. அசிங்கம் பண்ணி வச்சிட்டு போவாங்க. போதைப்பொருள் பாவனைக்கு அளவேயில்லை. அதுவும் இரவு நேரங்கள்ல தான் அதிகம்.

இங்குள்ள எந்த டொய்லட்டயும் பாவிக்க முடியாது. அந்தளவுக்கு அசிங்கமா இருக்கு. துர்நாற்றம் தாங்க முடியாது. ஆனாலும் இரவில உள்ள வரும் சில பேர் துர்நாற்றத்தையும் மீறி போதைப்பொருள் பாவிப்பாங்க. எங்கிருந்தோ சின்ன பிள்ளைகளை டொபி கொடுத்து அழைச்சிட்டு வருவாங்க. இங்க உள்ள வந்ததும் தேவையில்லாத வேலையெல்லாம் செய்வாங்க. நாங்களெல்லாம் சேர்ந்து விரட்டி விட்டிருக்கோம். இப்பவும் அப்படி நடக்குது. வாழைத்தோட்ட பொலிஸ்ல கேட்டால் விபரமா எல்லாத்தையும் கேட்கலாம்” என்றார்.
இவரது கருத்துக்களை கேட்டபோது பாழடைந்த மலசலகூடங்களுக்குள் காணாமல்போகிறதா சிறுவர்களின் எதிர்காலம் என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மலசலகூடத் தொகுதியில் ஆண்களுக்கு ஐந்து மலசலகூடங்களும் பெண்களுக்கு நான்கு மலசலகூடங்களும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளதுடன் தண்ணீர்தாங்கிகளும் கட்டப்பட்டிருக்கின்றன.

நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளபோதிலும் தண்ணீர் பிரச்சினை காரணமாக ஐந்து வருடங்களாக பாவனைக்கு உதவாமல் இருக்கிறது. இதனால் தான் முறைகேடான செயற்பாடுகள் நடக்கின்றன.

இது குறித்து வாழைத்தோட்ட பொலிஸாரிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் நபர்கள் பலரை ஏற்கனவே கைது செய்துள்ளதாகவும் பொதுமக்கள் தகவல் வழங்குமிடத்து நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

இந்த மலசலகூடத்துக்கு நேராக மேலே தெருவோர மின்விளக்கு இருக்கிறது. அது பாதசாரிகளுக்குப் பயன்படாத வகையில் மலசலகூடத்துக்கு வெளிச்சம் படும் வகையில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதனால் மலசலகூடத்துக்குள் நடக்கும் அநியாயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியமாகும். போதைப்பொருளுக்கு அடிமையானோரால் முழுச் சமுதாயமும் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக சிறுவர்கள் ஏமாற்றி அழைத்துவரப்படும் விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவரும் சிந்திக்க வேண்டும். இனிப்புகளுக்கு மயங்கும் சிறுவர்கள் கயவர்களின் கைகளில் சிக்கித் தவிப்பது எந்த வகையில் நியாயம்?

அங்கு துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத அப்பகுதி இளைஞர்கள் துப்புரவு செய்கிறார்கள். எனினும் அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பழைய துர்நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இதனை முழுமையாக சுத்தம் செய்து ஏனைய பொது மலசலகூடங்களைப் போல பொறுப்பான பாதுகாவலர் நியமிக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் பெரும்பாலும் குறையக்கூடிய சாத்தியம் உண்டு. அந்தப் பணியை கொழும்பு மாநகர சபையினரே மேற்கொள்ள வேண்டும்.

-ஆர்.நிர்ஷன்
(படங்கள் ஜே.சுஜீவகுமார்)
(veerakesari)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE