......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து காசாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது இஸ்ரேல்


இஸ்ரேலுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் காசாவில் இருக்கும் பலஸ்தீனர்கள் அனுபவித்து வந்த பல கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக விவசாயிகள் தமது நிலத்திற்கு செல்லவும் மீனவர்கள் கடலில் நீண்ட தூரம் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை மூலம் எல்லையோர பாதுகாப்பு வேலிகளுக்கு அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு பலஸ்தீன மீனவர்கள் கடல் ஆழத்திற்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல்- காசாவுக்கு இடையில் 8 தினங்களாக இடம்பெற்ற மோதல் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த மோதல்களில் 166 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 6 இஸ்ரேலியர் பலியாயினர். இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி கடந்த 2007 தொடக்கம் காசாவை முடக்கி வைத்திருந்த இஸ்ரேலிய நடவடிக்கையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மோதலுக்கு பின் கடந்த சனிக்கிழமை தொடக்கம் காசாவில் இருக்கும் சிறுவர்கள் முதல் முறை பாடசாலைக்கு திரும்பினர். 1.6 மில்லியன் பேர் வசிக்கும் காசாவில் பாதிப்பேர் சிறுவர்களாவர். இங்கு ஐ.நா.வினால் நடத்தப்படும் 245 பாடசாலைகள் உள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களில் 18 வயதுக்கு கீழான 34 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
அதேபோன்று காசாவில் இருக்கும் மீனவர்கள் முன்னர் விதிக்கப்பட்டிருந்த எல்லைகளை தாண்டி 6.9 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவு வரை சென்று மீன் பிடித்துள்ளனர். இதனை காசா மீனவர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்னரை விடவும் அதிக அளவான மீன்களை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக 3,500 மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த கபாரிடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காசாவில் இருந்து எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்வோரை இஸ்ரேலிய கப்பற் படை படகுகள் தடுத்து வந்தது. அதேபோன்று இஸ்ரேல் எல்லை வேலி அமைந்திருக்கும் யுத்த சூன்ய பகுதிக்கு எந்த தடங்கலும் இன்றி நுழைய முடிந்ததாக காசா குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னர் இந்த எல்லையில் 300 மீற்றர் அகலமான நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியை இஸ்ரேல் இராணுவம் கடைபிடித்து வந்தது.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் இந்த எல்லைப் பகுதிக்கு நுழைய முற்பட்டபோது அவர்களை பின்தள்ள இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு 19 பேர் காயமடைந்தனர். ஆனால் சனிக்கிழமை எந்த எதிர்ப்பும் இன்று இங்கு செல்ல முடிந்ததாக நிதால் அபு தக்கா என்ற 42 வயது விவசாயி குறிப்பிட்டார். இஸ்ரேல் எல்லை வேலியில் இருந்து 60 மீற்றருக்கு அப்பாலிருக்கும் தமது காணியில் கோதுமை மற்றும் வால் கோதுமை பயிரிடத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த கட்டுப்பாடு தளர்வு பற்றி தமக்கு எதுவும் தெரியாது என இஸ்ரேல் அரச பேச்சாளர் குறிப்பிட்டார். ஆனால் தடுக்கப்பட்ட எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் இராணுவம் கடைப் பிடிக்காது என இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க இஸ்ரேல் அனுமதிக்காததால் தம்மைப் பற்றிய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என மேற்படி தகவலை அளித்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
யுத்த நிறுத்தத்தின்போது ஹமாஸ் காசாவுக்குள் ஆயுதங்களை கடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் நிபந்தனை விதித்ததோடு பதிலாக இஸ்ரேல், காசாவுக்கான கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE