பலஸ்தீனுக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என சிரேஷ்ட அமைச்சரும் இலங்கை - பலஸ்தீன நட்புறவு ஒன்றியத்தின் இணைத் தலைவருமான அதாவுட செனவிரத்ன தெரிவித்தார்.
இதுவரை பலஸ்தீனுக்கு பல உதவிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. அந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். இது தொடர்பாக இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் மற்றும் பலஸ்தீனிலுள்ள இலங்கை தூதுவர் ஆகியோருக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இலங்கை - பலஸ்தீன நட்புறவு ஒன்றியம் மற்றும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதுவராலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனுக்கான நீதி' எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டியூ குணசேகர
இந்த கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர உரையாற்றுகையில்,
"மத்திய கிழக்கு வலயத்தில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க இஸ்ரேலினை துரும்பாக பயன்படுத்துகின்றது. மத்திய கிழக்கிலேயே அமெரிக்காவின் ஆயுதம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான கெனடி உட்பட ரீகன் முதல் ஒபாமா வரை அனைவரும் இஸ்ரேலுடன் நெருக்கமாகவே செயற்பட்டு வருகின்றனர். நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாக கொண்டே அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி வருகின்றது. இதனால் இஸ்ரேல் மேற்கொள்ளும் யுத்த குற்றங்களை அமெரிக்கா கண்டுகொள்வதில்லை.
பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் அழிவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. மனித உரிமை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் மீறப்படுகின்றன. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளினால் பல அறிக்கைகள் வெளியாகுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. இது மிக மோசமான செயற்பாடாகும்" என்றார்.
சஜித் பிரேமதாஸ
இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகையில்,
"முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் காலத்திலேயே இலங்கைக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையிலான தொடர்பு முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை குறித்த உறவு தொடர்ந்துகொண்டே செல்கிறது.
அமெரிக்காவினால் பலஸ்தீனத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக அரபு மற்றும் கமினியூனிஷ்ட் நாடுகளுடன் இணைந்து இலங்கையும் எதிராக வாக்களித்தது. இலங்கை மாத்திரமே இவ்வாறு துணிச்சலாக செயற்பட்டது.
பலஸ்தீனத்திற்கு எதிராக பல அட்டடூழியங்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இவை ஊடகங்களில் வெளிவருவதில்லை. காரணம் குறித்த ஊடகங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ளமையே ஆகும்.
அன்று முதல் இன்று வரை இலங்கைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈரான் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. இது போன்ற உதவிகளை தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கும் வழங்க வேண்டும்.
அதேபோன்று, பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கை ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' என்றார்.
இந்த கருத்தரங்கில் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகா, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் சிவில் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜாவிட் யூசுப் ஆகியோரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: குஷான் பத்திராஜ)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.