கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி சி.எஸ்.டி. ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபேராய் ஓட்டல்கள் உட்பட பல இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலின்போது 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இதை மும்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. அவன் அனுப்பிய கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கசாப் கடந்த 21ம் தேதி புனே, எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய இலக்குகளை குறிவைத்து தாக்குவோம் என்று பாகிஸ்தான் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எந்தவொரு பகுதியிலும் இந்த தாக்குதல் நடக்கும் என்று தெஹ்ரீக்,ஐ,தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற அமைப்பின் செய்தித்தொடர்பாளர் இசனுல்லா இசான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மும்பை தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகிறது. இதனையொட்டி மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் பிற முக்கிய கேந்திரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகருக்குள் வரும் மற்றும் இங்கிருந்து வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.