கடந்த 2002 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஊடுருவியுள்ள ஒசாமா பின்லாடன் 2011 ல் அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரையில் பாகிஸ்தானில் இருந்துள்ளார்.
பின்லாடன் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசினால் அமைக்கப்பட்ட அபோதாபாத் ஆணைக்குழுவின் அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அபோதாபாத் அறிக்கை தொடர்பில் பாக். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த அறிக்கையை கட்டாரை மையமாகக் கொண்டு செயற்படும் அல் ஜkரா தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையில் பாக். அரசு, உளவுப் பிரிவுப் பாதுகாப்புத் தரப்புகளின் உயர் அதிகாரிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதோடு, பின்லாடனின் மூன்று மனைவிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒசாமா பின்லாடனின் தலைமறைவு வாழ்க்கை குறித்த பல ரகசியங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த 2001 ம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானின் தோரா போரா மோதலின் போது அமெரிக்கப் படையிடம் சிக்குவதில் இருந்து மயிரிழையில் தப்பிய ஒசாமா பின்லாடன் 2002 நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மற்றும் பஜவ்ர் பழங்குடியின பகுதியில் தங்கியிருந்த பின்லாடன் பின்னர் வடக்கு சவாத் பள்ளத்தாக்கில் தனது மெய்ப்பாதுகாவலர்களான இப் ராஹிம் மற்றும் அப்ரார் அல் குவைட்டியுடன் பல மாதங்கள் தங்கி இருந்துள்ளார்.
அவர் சவாத்தில் தங்கியிருந்த போது செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காலித் ஷெய் முஹம்மத்தை சந்தித்துள்ளார்.
காலித் ஷெய்க் 2003ல் அமெரிக்க படையிடம் சிக்கினார். சவாத் பகுதியில் இருந்து வெளியேறிய பின்லாடன் வடக்கு பாகிஸ்தானின் ஹரிபுர் நகரில் வாடகை வீடொன்றில் தனது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு நடுப்பகுதிய பின்லாடன் அபோதாபாத் கட்டடத்திற்கு குடியேறியுள்ளார். அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரை ஆறு ஆண்டுகள் அந்த கட்டடத்திலேயே தங்கி இருந்துள்ளார். “மனிதர்களின் நடமாட்டம் இல்லாத மர்மமான அந்த பிரமாண்ட கட்டடம் குறித்து அயலில் உள்ளவர்கள், உள்ளூர் அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவினர் எப்படி கவனக் குறைவாக இருந்தார்கள்” என மேற்படி அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்தபோது பின்லாடன் ஒரு தருணத்தில் பொலிஸாரிடம் சிக்குவதில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். ஒசாமா பின்லாடனின் நம்பிக்கைக்குரிய உதவியாளரின் மனைவியான ‘மரியான்’ என்பவர் ஆணைக்குழுவுக்கு அளித்த வாக்குமூலத்தில் பின்லாடன் சென்ற கார் சவாத் பிராந்தியத்தில் பொலிஸார் இடைமறித்து சோதனையிட்ட போதும் தனது கணவர் பொலிஸாரிடம் பேசி விவகாரத்தை முடித்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.
இதில் அபோதாபாத் கட்டடத்தில் தங்கியிருந்த போது பின்லாடன் வானத்தை மறைக்கும் வகையில், கவ்போய் தொப்பி அணிந்தே உலாவியதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்திருக்கிறார். “அவருக்கு சுகயீனம் ஏற்பட்டால் அராபிய சம்பிரதாய மருத்துவ முறையில் தனக்கு மருத்துவம் செய்து கொள்வார்.
அவர் சுறுசுறுப்பில்லாமல் இருந்தால் சொக்கலெட் மற்றும் ஆப்பிள் பழம் சாப்பிடுவார்” என பின்லாடன் மனைவி கூறியுள்ளார். இதில் பின்லாடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிக எளிமையாக கடும் சிக்கனமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பொது இடங்களில் தோன்றியதில்லை என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆணைக் குழுவின் அறிக்கையின்படி பாகிஸ்தான் உளவுப் பிரிவு பின்லாடனை தேடும் நடவடிக்கையை 2005ம் ஆண்டிலேயே நிறுத்திக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பின்லாடனை கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கையை, ஒரு குற்றவாளி கும்பலின் செயல்போல் அமைந்திருந்ததாக நீதிபதிகளைக் கொண்ட ஆணைக்குழு விபரித்துள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/10/?fn=w1307104 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.