......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 10 July 2013

தெரிவுக்குழுவே சிறந்தது: மேனனிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு

அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த பொறிமுறையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துரைத்துள்ளார்.


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கும்  ஜனாதிபதிக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்றுக்காலை நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அதிகாரங்களை ஏனைய மாகாணங்களுக்கும் வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பங்குபற்றுவது முக்கியமானதாகும். 13 ஆவது திருத்தத்தை சகலரும் ஏற்றுக்கொள்வதென்றால் இந்த தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்தவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

13வது திருத்தம் தொடர்பாக உடன்பாட்டுக்கு வருவதற்கு சிறந்த மேடை நாடாளுமன்ற தெரிவுக்குழுவாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துரைத்துள்ளார்..

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொது உடன்பாட்டுக்கு வருவதற்குள்ள சிறந்த மேடை நாடாளுமன்ற விசேட குழு என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையைப்போன்ற சிறிய நாடொன்றில் மாகாண நிறுவனங்களுக்கிடையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒப்படைக்கின்றபோது தோன்றுகின்ற நடைமுறைச் சிக்கல்களை மேனனுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி தீர்வானது நடைமுறைப்படுத்துகின்ற வகையில் நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பொருத்தமானதாகவும் உடன்படக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டுமென்பதை தெரிவித்தார். 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கேற்பு முக்கியமானதாகும் என்பதற்கு ஜனாதிபதி அவர்கள் மேனன் அவர்களுடன் உடன்பட்டார். 13 ஆவது திருத்தம் தொடர்பாக உடன்பாட்டுக்கு வருவது அரசாங்கத்தின் அடிப்படை முன்னுரிமை என்பதை ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தும்படி இந்தியாவைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி  எவ்வித தடைகள் வந்தாலும் இச்செயற்பாட்டை முன்னெடுப்பதில் அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் போது,

இந்திய பிரதம அமைச்சர் அலுவலகத்தின் பணிப்பாளர் மனு மஹவர், இலங்கையின் இந்திய உயர் ஸ்தானிகர் வை. கே. சிங்ஹ மற்றும் இலங்கையின் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் பி.குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/74323-2013-07-09-10-25-20.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE