......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 2 July 2013

எகிப்து ஜனாதிபதிக்கு பதவிவிலக எதிர்ப்பாளர்கள் காலக்கெடு

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகம் தீக்கிரை
எகிப்து ஜனாதிபதி மொஹம்மட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகம் அரச எதிர்ப்பாளர்களால் தீ மூட்டப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தேசிய தலைமையகத்தை நேற்று அதிகாலை ஆக்கிரமித்த எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். இதன்போது கட்டிடத்திற்குள் இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டையும் வெடித்துள்ளது.
இதில் ஒரு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட் டடிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகமான மனா குறிப்பிட்டுள்ளது.
எகிப்தில் தொடரும் வன்முறைகளில் இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இதில் ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கெய்ரோவில் இடம்பெற்ற மோதல்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர். மத்திய மாகாணமான அசைதாவில் மூவரும், கரையோர நகரான அலக்சான்ட் ரியாவில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கெய்ரோவில் ஒன்றுதிரண்ட அரச எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி முர்சிக்கு பதவி விலக காலக்கெடு விதித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் தமரோட் (கிளர்ச்சியாளர்) முன்னணியே இந்தக் காலக்கெடுவை விதித்துள்ளது. ”முர்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற ஜுலை 2 செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 5 மணி வரை கெடு விதிக்கப்படுகிறது. முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த வழிவிட்டு முர்சி வெளியேற வேண்டும்” என தமரோட் முன்னணி எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி இந்த கெடுவை மீறி செயற்பட்டால், செவ்வாய் மாலை 5 மணிக்குப் பின் மக்களின் கோரிக்கைக்கு அடிபணியாத ஜனாதிபதி என அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதலாவது ஜனாதிபதியான மொஹமட் முர்சி பதவியேற்று கடந்த ஞாயிற்றுக்கிழைமையுடன் ஓர் ஆண்டு பூர்த்தியடைந்தது. ஆனால் ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் முர்சியை பதவி விலகக் கோரி மில்லியன் கணக்கான மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடெங்கும் ஒன்றுதிரண்டனர். இதில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவிவிலகச் செய்த 2011 புரட்சிக்குப் பின்னர் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் தஹ்ரிர் சதுக்கத்தில் அதிக சனத்திரள் கூடியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை தாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் 6 மாடி தலைமையக கட்டிடத்திற்குள் நேற்றுக் காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடுருவி, அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததோடு ஜன்னல் மற்றும் கதவுகளையும் உடைத்து அழித்தனர். இதன்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அடையாளச் சின்னத்தை அகற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்தின் மாடி வாயிலில் நின்று எகிப்து தேசிய கொடியையும் அசைத்தனர்.
இந்த வன்முறை கலகக்காரர்களின் செயல் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் குற்றம்சாட்டினார். தமது தலைமையகத்தை பாதுகாக்க தவறியது குறித்து பொலிஸார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் அழுத்தம் கொடுத்தார்.
மறுபுறத்தில் தலைநகர் கெய்ரோவில் ஜனாதிபதி முர்சி ஆதரவாளர்களும் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகைக்கு 5 கிலோ மீற்றருக்குள் இருக்கும் ரபா அல் அதவியா பள்ளிவாசலையொட்டி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த ஒருசில தினங்களாக தரித்துள்ளனர். இங்கு கடந்த மூன்று தினங்களாக முகாமிட்டிருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் ஹஜ் அல் அஹ்மட் யுஸிப், தாம் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“ரபா அல் அதவியாவில் தற்போது நாம் நான்கு மில்லியன் பேர் இருக்கிறோம். இது ஆறு முதல் 10 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் எம் அனைவரையும் கொன்றுவிட்டே ஜனாதிபதியை வெளியேற்ற முடியும்” என அவர் எகிப்தின் அஹ்ரம் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/02/?fn=w1307021 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE